எழுக தமிழ் பேரணிக்கு அணிதிரளுமாறு தொல். திருமாவளவன் அழைப்பு!
எதிர்வரும் 10ஆம் நாள் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் அணிதிரளுமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மக்கள் திரள் போராட்டத்திற்கு தோல்வி இல்லையென்பதை ஜல்லிக்கட்டுப் பண்பாட்டு உரிமைக்கான போராட்டம் உணர்த்தியுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிலநூறு இளைஞர்கள் போட்ட அடித்தளமே பல இலட்சம் மக்களை போராட்ட களத்திற்கு அழைத்து வந்ததோடு, அதுவே உலகளாவிய போராட்டமாக வளர்ச்சியடைந்தது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை முன் உதாரணமாக கொண்டு ‘எழுக தமிழ் பேரணியில்’ ஈழத்திலே உள்ள அனைத்து மாணவர்களும் இளைஞர்களும் தன்னெழுச்சியுடன் பங்கேற்க வேண்டுமென்று உங்களில் ஒருவனாக உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
முள்ளிவாய்க்காலோடு எல்லாம் முடிந்து போய்விடும் என்று சிங்களப் பேரினவாத அரசும் உலக வல்லரசுகளும் கருதின. ஆனால் சிங்களத்தின் இன அழிப்புப் போரும் சரி ஈழத் தமிழர் தம் இன விடுதலைப் போரும் சரி முற்றுப்பெறவில்லை. அது வெவ்வேறு வடிவத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என்பதை கடந்த வருடம் யாழில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணி உணர்த்தியது.
2009 க்கு முன்பு வன்னியில் மட்டும் குவிமையப்பட்ட போர் இன்று உலகெங்கும் பல முனைகளில் திறந்துவிடப்பட்டிருக்கிறது. களம் விரிவடைந்துவிட்டது. களமுனை தமிழகத்தின் நாலாப்புறத்திலும் திறந்திருக்கிறது. ஜெனீவா, பாரீஸ், இலண்டன், பிரஸ்ஸல்ஸ், ஒஸ்திரேலியா, கனடா என்று புவிப்பரங்கெங்கும் தமிழருக்கு எதிராய் களமாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது சிங்கள அரசு. பல முனை வந்துவிட்டாலும் அடிப்படை என்னவோ தமிழீழத் தாயகம் தான். தாயகம் வீறு கொண்டெழுவதற்காகவே தமிழகத் தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் போராடி வருகின்றனர்.
தாயகம் வீறு கொண்டெழுமா? என்ற கேள்விக்கே இடமில்லை. ஏனெனில் அது வணங்காமண். எல்லாளனும் பண்டார வன்னியனும் வாழ்ந்து சிறந்த மண். ஆயிரக்கணக்கான மாவீரர்களைத் தாயக விடுதலைக்கு ஈந்த மண். சுமார் முப்பது ஆண்டுகாலம் விடுதலைப் போருக்கு முகம் கொடுத்த மக்களின் மண். மானுட நாகரிகம் வெட்கி தலைகுனியும் அளவுக்கான சிங்களத்தின் இன அழிப்புப் போரை எதிர்கொண்ட மண். உலக வல்லரசுகளின் கோர முகத்தை நேரடியாக கண்ணில் பார்த்த மண். அந்த மண்ணின் மக்கள் ஓய்ந்துவிடப் போவதுமில்லை, சோர்ந்துவிடப் போவதில்லை என்பதை ஒவ்வொருமுறை பின்னடைவுக்கு உள்ளான போதும் நிரூபித்திருக்கிறார்கள். எனவே, ஈழத் தமிழ் மக்கள் களத்திற்கு வருவது வரலாற்றின் வளர்ச்சி விதிகளால் தீர்மானிக்கப்படுகிறது. அந்தக் களப் போராட்டம் தான் தமிழகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் நடக்கும் போராட்டங்களுக்கு உந்துசக்தியாக அமையப் போகிறது. ஈழ விடுதலையை ஈன்று எடுக்க வேண்டிய கடமை ஈழத் தமிழருக்கே உண்டு. ஏனையவர் யாவரும் மருத்துவச்சிகளே. ஈழம் மீண்டெழ வேண்டும் என்பதே கடந்த ஏழு ஆண்டுகால அரசியல் போராட்டங்களின் நோக்கமாகும். வடக்கு கிழக்கு தாயகப் பகுதிகளில் வாழும் மக்களின் எழுச்சி இன்றைய சூழலில் மேலும் இன்றியமையாததாகிறது.
இராஜபக்சே தோற்கடிக்கப்பட்டு சிறிசேனா அதிபர் ஆகிவிட்டதால் அமைதி திரும்பிவிட்டது என்று கதை கட்டுகிறது சிங்கள அரசு. இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர் தரப்பே எதிர் கட்சி; மீள்கட்டமைப்பு பணிகளிலே இராணுவமே முன்னின்று செயல்படுகிறது என்று இன்னும் பல கட்டமைவுகளோடு எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை மன்றக்கூட்டத் தொடரை தனக்கு சாதாகமாக மாற்றுவதற்கு இலங்கை அரசு தயாராகிவருகிறது. பொறுப்புக்கூறலுக்கான செயல்திட்டங்களை மேற்கொள்வதற்காக நீண்ட ஒரு காலஅவகாசத்தை கோருவது இலங்கையின் திட்டமாக அறியமுடிகிறது. போதாக்குறைக்கு அரசியல் தீர்வென்ற பெயரில் வரும் ஒற்றையாட்சியை வலிமைப்படுத்துவதற்கான முன் நகர்வுகள், சிங்கள குடியோற்றத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் இராணுவமயமாக்கல் தொடரும் அதேவேளை முன்னாள் போராளிகளின் மீதான கைது நடவடிக்கைகள் தொடர்கிறது; காணாமற் போனோர் நிலை இன்றுவரை அறியப்படவில்லை; சிங்கள குடியேற்றத்தை இலக்குவைத்து பௌத்த விகாரைகள் படையெடுக்கின்றன அண்மையில் கேப்பாப்புலவு முல்லைதீவு மாவட்டம் விமானப் படைத்தளத்திற்கு முன்பாக பெண்களும் குழந்தைகளும் தங்களின் நிலங்களை மீட்பதக்காக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இரவு பகலாக அறவழியில் போராடிவருகின்றனர் ஆகவே, இலங்கை அரசின் தொடரும் கட்டமைப்புரீதியான இனவழிப்பு நடவடிக்கைகளை உலகறியச் செய்ய ஈழத் தமிழர்கள் ‘எழுக தமிழ் பேரணி’யை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும்.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி என்று அறியப்படும் தமிழினம் இலங்கைத் தீவில் உயிர்த்திருப்பதற்கான போராட்டம் தான் இன்று நம்முடைய போராட்டம். சீலன்,மில்லர்,திலீபன், அங்கயற் கண்ணி, பால்ராஜ் என ஆகுதியான எண்ணற்ற மாவீரர்களின் பெயரால் அலை அலையாய் ஈழத் தமிழர்கள் எழுந்து வர வேண்டிய தருணமிது.
வெல்க! மட்டு நகரில் நடக்கும் ‘எழுக தமிழ்’ போராட்டம்!








