ஜெயலலிதா மரணம் தொடர்பில் விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்படும் – பன்னீர்செல்வம்
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பில் விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
தவறான மருந்து காரணமாகவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்தார் என்றும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ராஜினாமாவை திரும்பப் பெறும் கட்டாயச் சூழல் ஏற்பட்டால் திரும்பப் பெறுவதாகவும், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாகவும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
பதவி விலகிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்து பின்னர் அளித்த பேட்டி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறிய அவர், 75 நாட்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றும் ஒரு முறை கூட ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்திக்கவே இல்லை என்றும் கூறியுள்ளார்.
இதுதவிர தற்போதைய தலைமை மீதுள்ள தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அவர் ,தன் மனதில் உள்ள விஷயங்களில் நூற்றில் 10 சதவீதம் தான் வெளியே சொல்லி இருப்பதாக வும் அவர் கூறியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் இன்று அவரது இல்லத்தில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த போது இந்த கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அ.தி.மு.க.விக்கு எந்த நிலையிலும் நான் துரோகம் செய்யவில்லை. பன்னீர்செல்வம் துரோகம் செய்துவிட்டான் என ஒருபோதும் ஏற்பட்டதில்லை. ராஜினாமாவை திரும்பப் பெறும் கட்டாயச் சூழல் ஏற்பட்டால் திரும்பப் பெறுவேன். ஆளுநர் சென்னை வந்ததும் அவரை சந்திப்பேன்.
சட்டமன்றம் கூடும்போது எனக்கான ஆதரவு தெரியவரும். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன். அ.தி.மு.க.வுக்கு சோதனை ஏற்பட்ட காலத்தில் 2 முறை முதல்வராக இருந்துள்ளேன். என் மீதான குற்றச்சாட்டுக்கு காலம் பதில் சொல்லும் என அவர் கூறியுள்ளார்.








