Breaking News

கேப்பாப்புலவு விமானப்படையின் மீது அம்பெய்த சிறுவன்



முல்லைத்தீவு கேப்பாப்புலவில் விமானப்படையினரிடமுள்ள தமது பூர்வீக நிலங்களை மீட்பதற்காக எட்டு நாட்களாக பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த இடத்திற்கு பல அரசியற்பிரமுகர்கள் வந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களின் போராட்டத்திற்கு இன்னமும் தீர்வு வரவில்லை.

குறித்த போராட்ட இடத்தில் இருக்கும் சிறுவர்கள் பல்வேறுபட்ட மன உளைச்சல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் அங்குள்ள சிறுவர்கள் சிலர் பச்சைத்தடி கம்பினால் அம்பு செய்து விமானப்படை முகாம் நோக்கி எய்கின்றனர்.

இன்று பிற்பகல் ஒரு சிறுவன் விமானப்படையினரின் முகாமிற்கு எதிரே காணப்படும் மற்றுமொரு முகாமிற்கு இராணுவ வாகனம் செல்வதற்காக வாயில் கதவை திறக்க முற்பட்ட வேளை விமானப்படை வீரர் ஒருவரை நோக்கி அம்பை எய்துள்ளார்.

குறித்த காரியத்தை விளையாட்டு என்று நாம் கருத முடியாது. அது அவர்களின் மனதில் தோன்றிய தாக்கத்தின் வெளிப்பாடு.

இதே போன்று பல சிறுவர்கள் மனங்களில் கறைபடியும் பல நினைவுகள் உருவாகி வருகின்றது.

இவற்றிற்கு எல்லாம் யார் காரணம்..? என்பதை நாம் ஆராய்ந்து அவர்களை குற்றம் சாட்டி அவர்களை வெளிப்படுத்துவதை விட, எதிர்காலத்தில் வடக்கில் மீண்டும் ஒரு இரத்த ஆறு ஓடாமல் தடுக்க வேண்டும் என்பதில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.