மைத்திரிக்கு எதிராக மஹிந்த விசேட அறிக்கை
ஒழுங்கு முறையின்றிய விதத்தில் நீதிமன்றமொன்றின் நீதிபதியொருவர் நியமிக்கப்படுவது நீதிமன்றத்தின் சுயாதீன செயற்பாட்டுக்கு ஓர் அச்சுறுத்தலாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றின் மூலம் அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் சட்டத்தரணியாக பணியாற்றிய ராமநாதன் கண்ணன் என்பவர், ஜனாதிபதியினால் உயர் நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
இதற்கு நீதிபதிகள் சங்கம் தனது எதிர்ப்பையும் தெரிவித்துள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. இந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
கடந்த 16 வருடங்கள் சேவையில் உள்ள நீதிபதிகள் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரை கருத்தில் கொள்ளாது இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் பேசும் நீதிபதியொருவரை நியமிக்க வேண்டிய தேவை இருந்திருப்பின், இவரை விடவும் தகுதிவாய்ந்த பலர் காணப்படுவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய நீதிபதியின் நியமனம் அரசியல் சார்ந்தது என தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








