Breaking News

பன்னீர்செல்வத்துக்கு ஒரு மாதம் அவகாசம் கொடுப்பார் ஆளுநர்!'

'எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், 131 பேர்
கலந்து கொண்டனர்' எனப் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார் அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன். ' நம்பிக்கை வாக்கெடுப்பு என்று வரும்போது எம்.எல்.ஏக்களில் பெரும்பாலானோர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்க உள்ளனர். மைத்ரேயன் தலைமையில் அ.தி.மு.கவின் மாநிலங்களவைக்குள்ளும் பிளவு ஏற்பட்டுவிட்டது' என அதிர வைக்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.


தமிழக அரசியல் வரலாற்றில் நேற்றைய பொழுதை அ.தி.மு.க தொண்டர்களால் அவ்வளவு எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது. முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் அதிரடியைத் தொடர்ந்து, களமிறங்கினார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. அவரைத் தொடர்ந்து, நீண்ட தியானத்துக்குப் பிறகு மனம் திறந்தார் முதலமைச்சர் பன்னீர்செல்வம். இதையடுத்து, போயஸ் கார்டனுக்குச் சென்ற அமைச்சர்கள் விடிய விடிய ஆலோசனையில் ஈடுபட்டனர். அதேநேரம், டெல்லியில் சுப்ரமணியன் சுவாமி மூலமாக காய்களை நகர்த்தினார் சசிகலா. டெல்லியில் இருந்து எந்தவித அதிர்வும் தென்படாததால், 'எம்.எல்.ஏக்கள் தன்பக்கம்தான்' என்பதைக் காட்டும்விதமாக தலைமைக் கழகம் வந்தார். 
அப்போதும், 'குறைவான எம்.எல்.ஏக்களே கலந்து கொண்டனர்' என்ற தகவல் வெளியானது." அ.தி.மு.கவின் தற்காலிக பொதுச் செயலாளராகத்தான் பதவி வகிக்கிறார் சசிகலா. கட்சித் தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம் உள்ளனர். எம்.எல்.ஏக்கள் பெரும்பாலானோர் ஓ.பி.எஸ் பக்கம் வந்துவிட்டனர். அவர்களை வெளியில் விடாமல் சிறைப்படுத்தி வைத்திருக்கிறார் சசிகலா. நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது, உண்மையான செல்வாக்கு யார் பக்கம் என்பது நிரூபணமாகும்" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 
"நாடாளுமன்றத்தில் அ.தி.மு.கவுக்கு 49 எம்.பிக்கள் உள்ளனர். இவர்களில் பலரும் மைத்ரேயன் தலைமையின்கீழ் வந்துள்ளனர். இதை கார்டன் தரப்பில் உள்ளவர்கள் எதிர்பார்க்கவில்லை. தொடக்கம் முதல் சசிகலாவுக்கு எதிராக களத்தில் இறங்கி வேலை பார்த்த, சசிகலா புஷ்பாவும் பன்னீர்செல்வம் அணிக்கு வர இருக்கிறார். 'ஜெயலலிதா மரணத்தில் மர்மம்; பொதுச் செயலாளர் தேர்தல் முறைப்படி நடத்தவில்லை' என மத்திய அரசின் கவனத்துக்குத் தொடர்ச்சியாக புகார் மனுக்களை அனுப்பி வந்தார். அவரது மனுவின் அடிப்படையில், சசிகலாவிடம் விளக்கம் கேட்டு, தேர்தல் ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறதுதற்போது, 'எங்கள் பக்கம்தான் அ.தி.மு.க தொண்டர்கள் உள்ளனர். கட்சித் தேர்தலை முறைப்படி அறிவிக்க வேண்டும். இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரும் தகுதி சசிகலாவுக்கு இல்லை' என ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
முழுமையான நேர்காணல்





சென்னையில் நடக்கும் விவகாரங்களை மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. அதன்படி, ஓ.பி.எஸ் அணியை பலம் சேர்க்கும் வேலைகள் தொடங்கிவிட்டன. 'என்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தனர்' என அவர் கூறியபோதே, அவரது ராஜினாமாக் கடிதமும் செல்லாததாகிவிட்டது. அதை முறைப்படி அறிவிப்பார் ஆளுநர். 'நம்பிக்கை வாக்கெடுப்புக்கு 15 நாள் அவகாசம் கேட்கலாம்' என்ற முடிவில் இருக்கிறார் ஓ.பி.எஸ். 'நீங்கள் விரும்பினால் ஒரு மாதம் வரையில் அவகாசம் கொடுக்கத் தயாராக இருக்கிறார் ஆளுநர்' என மத்திய அரசின் பிரதிநிதிகள் உறுதியாகக் கூறிவிட்டனர். 
இதனால் கூடுதல் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஓ.பி.எஸ். குதிரைப் பேரம் நடத்தாமலேயே, அ.தி.மு.கவின் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ் பக்கம் வர இருக்கிறார்கள். இதையே காரணம் காட்டி, சசிகலா உள்பட மன்னார்குடி கும்பலை கட்சியை விட்டே அகற்றுவோம். உண்மையான அ.தி.மு.கவை தொண்டர்கள் மத்தியில் அடையாளம் காட்டுவோம்" என்கிறார் விரிவாக. 
பன்னீர்செல்வம்
"ஆட்சி அதிகாரம் நிறைவடைய இன்னும் நான்கரை ஆண்டுகாலம் இருக்கிறது. எதிர்பார்க்கும் அளவுக்கு மேலாகவே எம்.எல்.ஏக்களின் ஆதரவை அவர் பெறுவார். அண்ணா பிறந்தநாளில் தீபாவுக்குக் கூடிய கூட்டமும் அ.தி.மு.க-வுக்குக் கூடிய கூட்டமும் எம்.எல்.ஏக்களை யோசிக்க வைத்துவிட்டது. இதனால்தான், 'உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க சசிகலா பயப்படுகிறார்' என்பதையும் அவர்கள் உணர்ந்து வைத்துள்ளனர். 
இப்படியே நீடித்தால், 'இனி எதிர்காலத்தில் எம்.எல்.ஏ ஆக முடியாது' என உறுதியாக நம்புகின்றனர். ஓ.பி.எஸ் அணியில் இருப்பதே நல்லது என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். எம்.எல்.ஏக்களைக் கைப்பிடிக்குள் வைத்துக் கொள்வதற்காக சகல அஸ்திரத்தையும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார் சசிகலா. எத்தனை பேரம் நடந்தாலும் ஓ.பி.எஸ் முதல்வராக நீடிப்பதை யாராலும் தடுக்க முடியாது" என்கின்றனர் ஓ.பி.எஸ் ஆதரவு அணியினர். 
2019 நாடாளுமன்றத் தேர்தலைக் கணக்கில் வைத்துக் கொண்டு காய்களை நகர்த்துகிறது பா.ஜ.க மேலிடம். நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். 

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்