Breaking News

நடப்பதை மக்களுக்குத் தெரிவிப்பது த.தே.கூட்டமைப்பின் கடமை

தகவல் அறியும் உரிமை பற்றி நாம் பேசும் போது அது நம்மிடம் உள்ளதா? என்பதை முதலில் அறிவது அவசியம்.

தகவல் அறியும் உரிமை என்பது மிகவும் முக்கியமானது என்ற அடிப்படையில், அது தொடர்பான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

தகவல் அறியும் உரிமை தொடர்பில் உரத்துக் குரல் கொடுப்பதில் தமிழர் தரப்புக்கும் நிறைந்த பங்கு உண்டு.அவ்வாறாயின், தமிழ் மக்களின் அரசியல் தலைமையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் அமைப்புச் சீர்திருத்தம் பற்றியும் ஜெனிவாக் கூட்டத் தொடரின் போது தனது நிலைப்பாடு பற்றியும் தமிழ் மக்களுக்குத் தகவல் வழங்கியுள்ளதா? என்று கேட்டால் எதுவும் இல்லை என்பதே பதிலாக இருக்கும்.

தமிழ் மக்களின் நலன்கள் மற்றும் உரிமைகள் தொடர்பில் குரல் கொடுப்போம் என்ற உத்தரவாதத்தை வழங்கியே கூட்டமைப்பினர் பாராளுமன்றப் பதவியைப் பெற்றனர்.

இப்போது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமை என்ற அந்தஸ்தையும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் தனதாக்கியுள்ளார்.இந்நிலையில், அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பான விடயங்கள் நடந்து கொண் டிருக்கின்றன.

கூடவே ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாக இருக்கின்றது.

இக்கூட்டத்தொடரில்; ஏலவே ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இலங்கை அரசு அமுல்படுத்துவதற்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதான தகவல்களும் உண்டு.

இந்நிலையில் ஈழத் தமிழர்களின் அரசியல் தலைமை என்ற வகிபாகத்தைக் கொண்டிருக்கக்கூடிய கூட்டமைப்பின் நிலைப்பாடு எவ்வாறாக இருக்கிறது என்ற விடயங்கள் தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும்.

ஆனால் அவ்வாறு எந்தத் தகவலும் கூட்டமைப்பால் வெளிப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டு விட்டோம். எனவே நாங்கள் எது சொன்னாலும் எதைச் செய்தாலும் அது ஒட்டுமொத்தத் தமிழ் மக்களினது கருத்தாகவும் செயலாகவுமே இருக்குமென்ற நிலைப்பாட்டை கூட்டமைப்பின் தலைமை கொண்டிருப்பது எந்த வகையிலும் ஏற்புடையதன்று.

தமிழ் மக்கள் தொடர்பில் எந்தத் தீர்மானத்தை எடுத்தாலும் அதனை முதலில் தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.அதுமட்டுமல்ல, தாங்கள் எடுத்த தீர்மானங்களுக்கு தமிழ் மக்களின் அனுமதி உண்டா? அதை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? என்பதை அறிவதற்கான ஏற்பாடுகளும் இருத்தல் அவசியம்.

இதைவிடுத்து தேர்தலில் தெரிவு செய்யப்பட்டவர்கள் நாங்கள். எனவே நாங்கள் எடுக்கின்ற தீர்மானங்கள் எதுவும் தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்தத் தேவையில்லை.

இது தொடர்பில் எவரும் கருத்துரைக்கவோ நியாயம் கேட்கவோ முடியாது என்ற இறுமாப்பில் செயற்படுவது,அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவை, தன்னைத் தவிர வேறு எவரும் பார்ப்பதற்கு அனுமதிக்க முடியாது என்ற கர்வத்தோடு செயற்பட்ட சின்னம்மா சசிகலாவின் போக்குக்கு இணையானது என்று கூறுவது எந்த வகையிலும் பிழையன்று.