Breaking News

உரிமைகள் மறுக்கப்படும் போது போராட்டங்களை தவிர்க்க முடியாது: டெனீஸ்வரன்

உரிமைகள் மறுக்கப்படும் போது போராட்டங்களும் புரட்சியும் வெடிப்பதை தவிர்க்க முடியாது என்பதை கடந்த கால அனுபவங்களில் கண்டிருக்கின்றோம் எனக் குறிப்பிட்டுள்ள வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன், இதனை மனதிற்கொண்டு தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.


படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்களை நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்த பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்-

”நல்லாட்சி அரசு என்பது வெறும் வாய்ப்பேச்சில் மாத்திரம் இருந்துவிடாமல் தமது செயற்பாடுகளிலும் அதனை நிரூபிக்கவேண்டும். மக்கள் தமது காணிகளுக்கான ஆவணங்களை தம்மோடு வைத்துள்ளனர். தமது பூர்வீக வாழ்விடங்களை தரும்படி கேட்பது அவர்களது அடிப்படை உரிமை. அவர்களை சொந்த காணிகளுக்கு செல்வதற்கும் குடியிருப்பதற்கும் அனுமதிக்காமல் இருப்பதானது அடிப்படை உரிமை மீறலாகும். எங்கே உரிமைகள் மறுக்கப்படுகின்றதோ அங்கே புரட்சிகளும் போராட்டங்களும் வெடிப்பது தவிர்க்கமுடியாதது என்பதனை எமது கடந்த கால அனுபவங்களின் மூலம் கண்டிருக்கின்றோம். எனவே காலம் தாழ்த்தாது விரைந்து காணிகளை மீள வழங்குவது காலத்தின் கட்டாயம்.

அத்தோடு, படையினரின் தேவைக்கு போதியளவு அரச காணிகள் இருக்கும்போது மக்களது காணிகளை ஆக்கிரமித்திருப்பதை யாராலும் நியாயப்படுத்தவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாது. சொந்த இடங்களுக்குச் செல்லமுடியாமல் மக்கள் இன்னும் அகதி வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பது வேதனை தரும் விடயமாகும். எனவே வடக்கு மாகாணத்தில் விடுவிக்கப்படாத அனைத்து காணிகளையும் விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.