கடும் நிபந்தனைகளுடன் கால அவகாசத்தைப்பெற்ற அரசாங்கம் - THAMILKINGDOM கடும் நிபந்தனைகளுடன் கால அவகாசத்தைப்பெற்ற அரசாங்கம் - THAMILKINGDOM
 • Latest News

  கடும் நிபந்தனைகளுடன் கால அவகாசத்தைப்பெற்ற அரசாங்கம்

  கடந்த ஒரு மாதகாலமாக ஜெனிவா மனித

  உரிமைப்பேரவையானது உலகநாடுகளின் மனித உரிமை விவகாரம் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வந்த நிலையில் இலங்கையின் மனித உரிமை குறித்தும் பரபரப்பான விவாதங்கள் இடம்பெற்றன.இலங்கை தொடர்பாக இம்முறை கூட்டத் தொடரில் மூன்று அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டதுடன் ஒரு பிரேரணையும் நிறைவேற்றப்பட்டது.

  அத்துடன் இலங்கை தொடர்பாக விவாதம் ஒன்றும் நடைபெற்றது. இவ்வாறு கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் முழுவதும் இலங்கை தொடர்பான விடயங்கள் பரபரப்பாக ஆராயப்பட்டு வந்த நிலையில் மிக அதிகளவான உப குழுக்கூட்டங்களும் நடைபெற்றன. அந்தவகையில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் புலம்பெயர் அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் சிவில் சமூக அமைப்புக்களின் தலைவர்கள் என பல்வேறு தரப்புக்களும் ஜெனிவாவில் தங்கியிருந்து இலங்கை தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வந்தன.

  இந்த நிலையில் கடும் நிபந்தனைகளுக்கும் எதிர்ப்புக்களுக்கும் முரண்பாடுகளுக்கும் மத்தியில் இலங்கை அரசாங்கத்திற்கு இரண்டு வருடகால அவகாசம் வழங்குவதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டது. தமிழர் தரப்பு பிரதிநிதிகள் புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது என வலியுறுத்தி வந்த நிலையிலேயே மனிதஉரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு ஆதரவு வழங்கி அதை நிறைவேற்றின.

  இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் மகிழ்வடைந்தது என்றே கூறலாம். காரணம் தாம் நல்லிணக்கத்திலும் பொறுப்புக்கூறலிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு 2015 ஆம் ஆண்டு பிரேரணையை நிறைவேற்றுவதற்கும் 24 மாத கால அவகாசம் வழங்கப்படவேண்டுமென்று கோரியிருந்த நிலையில் அந்த கால அவகாசம் தற்போது கிடைத்துள்ளது. எனவே அரசாங்கம் நிச்சயம் மகிழ்வடைந்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், அரசாங்கமானது மேலும் பொறுப்புக்கூறலுக்கும் கடமைப்பாட்டிற்கும் உட்பட்டுள்ளது என்பதை இந்த இடத்தில் மறந்துவிடக்கூடாது. பிரேரணை நிறைவேற்றப்படும் சந்தர்ப்பத்தில் உரையாற்றிய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா இலங்கையின் நிலைமையை புரிந்துகொண்டதற்காக சர்வதேச சமூகத்திற்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

  மேலும் தொடர்ந்து எமக்கு உதவிகளை செய்துவரும் சர்வதேசத்திற்கு நன்றி தெரிவிக்கின்றோம். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நாம் மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம். அந்த வாக்குறுதியை நாம் செயற்படுத்துவோம். பொறுப்புக்கூறலை முன்னெடுப்போம். அரசாங்கத்தின் மீதும் மக்களின் மீதும் நம்பிக்கை வைத்தமைக்காக சர்வதேசத்திற்கு நன்றி கூறுகின்றோம். யாருக்கும் அநீதி ஏற்படாத வகையில் சர்வதேச ஆதரவுடன் அரசாங்கம் தலைமை வகிக்கும் ஒரு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு நீதி வழங்கப்படும் என்றும் பிரதி வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

  இந்த நிலையில் சர்வதேச நாடுகளின் கடும் நிபந்தனைகளுக்கு மத்தியிலேயே இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதாவது இலங்கை தொடர்பானபிரேரணை ஏகமனதாக வாக்கெடுப்பின்றி வியாழக்கிழமை ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் எந்தவொரு உறுப்புநாடும் இலங்கை குறித்த பிரேரணைக்கு எதிர்ப்பு வெளியிடவில்லை. இந்த பிரேரணை நிறைவேற்றும் போது ஒருசில அரச சார்பற்ற நிறுவனங்களின் சார்பான தமிழர் பிரதிநிதிகள் ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் கால அவகாசம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து உரையாற்றியிருந்தனர். அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவதன் மூலம் எந்தவொரு நன்மையும் ஏற்படப்போவதில்லையெனவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

  இவ்வாறான கடும் முரண்பாடான நிலைமையின் கீழேயே இலங்கை தொடர்பான பிரேரணை ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டது. இதேவேளை பிரேரணையை முன்வைத்த நாடுகளான பிரிட்டன் மற்றும் அமெரிக்கா, ஆகியன பிரேரணை நிறைவேற்றப்படும் சந்தர்ப்பத்தில் சில விடயங்களை கூறுவதற்கு தவறவில்லை. குறிப்பாக இதில் உரையாற்றிய அமெரிக்காவின் ஜெனிவாவிற்கான தூதுவர் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்க முன்வந்தமை பாராட்டத்தக்கதாகும்.

  அரசாங்கத்தின் ஐ.நா.வுடனான ஈடுபாடு வரவேற்கத்தக்கது. தற்போது வழங்கப்பட்டுள்ள இரண்டு வருடகாலத்தில் இலங்கை முன்னேற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறோம். மோதல்கள் வராமல் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அதேவேளை இலங்கைப் பிரேரணையைக் கொண்டுவந்த மற்றுமொரு நாடான பிரிட்டனின் பிரதிநிதி உரையாற்றுகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை அப்போதைய பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க முன்வந்தமையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும். நல்லிணக்க செயற்பாடுகளை அரசாங்கம் எடுத்துள்ள சில நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவையாகும். ஆனால், மேலும் முன்னேற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

  விசேடமாக இரண்டு வருட கால அவகாசம் தேவை என்பதை வரவேற்கின்றோம். அந்தக் காலப்பகுதியில் நல்லிணக்கத்தை மேம்படுத்த வேண்டும். மேலும் காணாமற்போனோர் அலுவலகம் விரைவாக இயங்க வைக்கப்பட வேண்டும். நல்லிணக்க செயலணியின் பரிந்துரைகளை வரவேற்கின்றோம். அரசாங்கம் கால அட்டவணையின் அடிப்படையில் ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்த வேண்டும். இதற்கான கட்டமைப்புத் திட்டம் அவசியமாகும் என்று கூறியிருந்தார். இவ்வாறு இலங்கையானது சர்வதேச நாடுகளின் பல்வேறு யோசனை மற்றும் நிபந்தனைகளுக்கு மத்தியிலேயே கால அவகாசத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

  இதேவேளை, நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை நான்கு செயற்பாட்டு பந்திகளைக் கொண்டுள்ளது. அந்த நான்கு செயற்பாட்டு பந்திகளும் 2015 ஆம் ஆண்டு ஜெனிவா பிரேரணையின் விடயங்களை சுட்டிக்காட்டுவதாகும். அவற்றில் அடுத்த கட்டத்தை வலியுறுத்துவதாகவும் அமைந்துள்ளன. அந்தவகையில்

  நான்கு பரிந்துரைகளை கொண்டுள்ள புதிய பிரேரணையானது 2015 ஆம் ஆண்டு பிரேரணையின் 1, 2,19,18 ஆகிய செயற்பாட்டு பந்திகளை திருத்தம் செய்கிறது. அந்த வகையில் பிரேரணையில் அந்த நான்கு விடயங்களையும் என்னவென்று பார்க்கலாம்.

  முதலாவது விடயம்

  கடந்த 2015 ஆம் ஆண்டு பிரேரணையின் கோரிக்கைக்கு அமைய ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பாக 34 ஆவது கூட்டத் தொடரில் முன்வைத்துள்ள பரந்துபட்ட அறிக்கையை பாராட்டுகின்றோம். அத்துடன் அந்தப் பிரேரணையை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் விசேடமாக அதில் நிலுவையில் உள்ள விடயங்களை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம். இவ்வாறு புதிய பிரேரணையை முதலாவது செயற்பாட்டு பந்தி வலியுறுத்தியுள்ளது.

  இரண்டாவது பந்தி

  கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அரசாங்கம் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளருடனும் அவரது அலுவலகத்துடனும் மேற்கொண்டுவரும் ஆரோக்கியமான ஈடுபாட்டை வரவேற்கின்றோம். அத்துடன் விசேட ஆணையாளர்களுடனான இந்த ஈடுபாட்டையும் வரவேற்கின்றோம். இதேவேளை இலங்கையின் மனித உரிமை, உண்மை, நீதி, நல்லிணக்கம், மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்காக இந்த ஈடுபாட்டை தொடருமாறு ஊக்குவிக்கின்றோம் என்றவாறு பிரேரணையின் இரண்டாவது பந்தி சுட்டிக்காட்டியுள்ளது.

  மூன்றாவது பந்தி

  அதாவது ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மற்றும் தொடர்புபட்ட விசேட ஆணையாளர்கள் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து ஆலோசனைகளை நடத்தவேண்டுமென்றும் இலங்கையின் மனித உரிமை, உண்மை, நீதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றோம் என பிரேரணையின் மூன்றாவது பந்தி அல்லது பரிந்துரை கூறியுள்ளது.

  நான்காவது பந்தி

  நான்காவது பந்தியே இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்குவதற்கான ஏற்பாட்டை கொண்டுள்ளது. அதாவது ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கையின் பிரேரணையின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பாக தொடர் மதிப்பீடுகளை செய்யவேண்டும். அத்துடன் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மனித உரிமை நிலைமை தொடர்பாகவும் மதிப்பீடு செய்யவேண்டும்.

  அதுமட்டுமன்றி இலங்கை ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துகின்றமை தொடர்பாக 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடரில் எழுத்துமூல அறிக்கையையும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடரில் பரந்துபட்ட விவரமான அறிக்கையையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றோம் என்று நான்காவது செயற்பாட்டு பந்தி சுட்டிக்காட்டியுள்ளது.

  அந்தவகையில் அரசாங்கமானது கால அவகாசத்தைப் பெற்றுக்கொண்டோம் என்று இருந்துவிட முடியாது. காரணம் மிகவும் வலுவான பொறுப்புக்கூறல்களும் கடப்பாடும் பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. எவ்வாறெனினும் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் கையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கையின் ஒரு சில அரசியல் கட்சிகள் அரச சார்பற்ற நிறுவனங்கள் மனித உரிமை அமைப்புக்கள் என பல்வேறு தரப்புக்கள் இணைந்து கடுமையாக எதிர்த்துள்ளன. இந்த அமைப்புக்களும் இணைந்து கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிராக கூட்டு அறிக்கையொன்றை நேற்று முன்தினம் வெளியிட்டன. அந்த அறிக்கையில் முக்கியமான சில விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.

  அதாவது இலங்கை விவகாரத்தினை ஐ,நா.வின் பொதுச்சபையின் விசாரணைக்கு அனுப்பிவிட வேண்டும். ஐ.நா. பொதுச்சபை வழியே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை பாரப்படுத்துவதற்கான பரிந்துரையினை ஐ.நா . பாதுகாப்பு பேரவைக்கு வழங்க வேண்டும் என்று இந்த அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. அத்துடன்

  இலங்கைத்தீவின் இனநெருக்கடிக்கு தீர்வுகாண வடக்கு, கிழக்கு பகுதியிலும், புலம்பெயர் தமிழர்களிடத்திலும் பொதுவாக்கெடுப்பினை நடத்துவதற்குரிய நிலையை ஏற்படுத்த வேண்டும். மார்ச் 23 ஆம் திகதி 2017இல் ஐ.நா. மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை முற்றாகம் நாம் நிராகரிக்கின்றோம்.

  மனித உரிமைச்சபையினால் அரசுக்கு கொடுக்கப்படும் கால அவகாசத்தினைக் வைத்துக்கொண்டு, ஒரு புறத்தில் தமிழர்களிடத்தில் இயங்கும் நீதிக்கான மனநிலையை குலைப்பதும், மறுபுறத்தில் வளமான கட்டமைப்புகளை தமிழர் பகுதியில் கொண்டுவருவதன் மூலமும் சிங்கள குடியேற்றங்களையும் அரசாங்கம் செய்தும் வருகின்றது என்றும் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூக நிறுவனங்கள் வடக்கு, கிழக்கின் சில அரசியல் கட்சிகளும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

  அந்தவகையில் அரசாங்கம் கால அவகாசத்தினைப் பெற்றுக்கொள்வதற்கான பயணம் மிகவும் இலகுவாக அமைந்துவிடவில்லை. மாறாக பல்வேறு தடைகளைத் தாண்டியே அரசாங்கம் இந்த கால அவகாசத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. மேலும் பிரேரணை நிறைவேற்றப்பட்டு முடிந்ததும் ஜெனிவா பேரவை வளாகத்தில் தமிழர் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். குறிப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடமாகாணசபை உறுப்பினர்கள் இந்தியாவிலிருந்து ஜெனிவாவிற்கு வருகை தந்திருந்த ஈழ ஆதரவு பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் இலங்கை தொடர்பான பிரேரணையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டமையையும் கடுமையாக எதிர்த்திருந்தனர்.

  ஐ.நா. பாதுகாப்பு சபை மற்றும் பொதுச்சபைக்கு செல்வதை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதற்கான ஒரே வழியாக அமையும் என்றும் இவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். அதாவது மனித உரிமை பேரவை உறுப்பு நாடுகள் மூன்று முக்கிய விடயங்களை கூறியே இலங்கைக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. அதாவது 2015 ஆம் ஆண்டு அமுல்படுத்துவதில் அரசாங்கம் கால அட்டவணையுடன் கூடிய கட்டமைப்புத் திட்டமொன்றை முன்வைக்கவேண்டுமென்றும் ஐ.நா. மனித உரிமை பேரவை இலங்கை நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கவேண்டுமென்றும் உறுப்புநாடுகள் வலியுறுத்தியிருந்தன. அந்த வகையில் அடுத்த கட்டமாக என்ன நடக்கப்போகின்றது என்பதை அனைத்துத் தரப்பினரும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமான ஜெனிவா மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.

  ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ்.ஸ்ரீகஜன்

  முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: கடும் நிபந்தனைகளுடன் கால அவகாசத்தைப்பெற்ற அரசாங்கம் Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top