காணாமல்போனவர்களை கையளிக்க வேண்டியது அரசே: வடக்கில் தொடரும் ஆர்ப்பாட்டம்
காணாமல்போன தமது உறவுகளை தேடித் தருமாறு கோரி, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக காணாமல் போனவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் சத்தியாக்கிரக போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 12ஆவது நாளாக நீடித்து வருகிறது.
இதேவேளை, வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களினால் நடத்தப்படும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 8ஆவது நாளாக நீடித்துவரும் அதேவேளை, இது குறித்து ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட தபாலட்டை அனுப்பும் நடவடிக்கைகள் நான்காவது நாளாக தொடர்ந்து வருகிறது.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ராணுவத்திடம் கையளித்த தமது பிள்ளைகளை தேடவேண்டிய அவசியம் தமக்குக் கிடையாதென தெரிவித்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர், அவர்களை கையளிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்று தெரிவித்துள்ளனர்.