Breaking News

வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து போயுள்ளோம் : வடமாகாண பட்டதாரிகள்



வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று ஐந்தாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கடந்த 27ஆம் திகதி ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு பேராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

வடமாகாணத்தில் 4 ஆயிரத்து 500 க்கும் அதிகமான பட்டதாரிகள் பட்டப்படிப்பை நிறைவுசெய்த நிலையில், வேலைவாய்ப்பு அற்ற நிலையில், இருக்கின்றனர்.

இந்த நிலையில், தீர்வு கிடைக்கும் வரை காலவரையறையற்ற தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

நூற்றிற்கும் அதிகமான பட்டதாரிகள் இரவு, பகலாக இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

பல்வேறு வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து போயுள்ளதாகவும் இதுவே தமது இறுதி போராட்டம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சனைகள் தொடர்பாக யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் 4ஆம் திகதி வருகை தரும் ஜனாதிபதியிடம் தமிழ் அரசியல் தலைமைகள் தெளிவுபடுத்த வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் இந்த போராட்டத்தில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் இணைந்துகொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.