பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை உரிய வகையில் செயற்படவில்லை: பிரித்தானியா
இலங்கையின் மனித உரிமைகள் நிலைப்பாடு தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) விவாதத்தினை ஆரம்பித்து வைத்த தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் ஜேம்ஸ் பெரி, பொறுப்புக்கூறல், மனித உரிமை பாதுகாப்பு மற்றும் மீள்கட்டமைப்பு விடயங்களில் இலங்கை உரியவகையில் செயற்படவில்லை எனவும், இந்த விடயத்தில் சிறிய அளவிலான முன்னேற்றத்தையே கண்டிருப்பதால் அவை போதுமானதாக இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் போர்க்குற்றங்கள் தொடர்பான நீதிப் பொறிமுறைகளை உருவாக்குவதற்கான கால அட்டவணை எதையும் இலங்கை கொண்டிருக்கவில்லை என்றும், போர்க்குற்றங்கள் தொடர்பான நீதிப்பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு இலங்கை மறுப்புத் தெரிவித்து வருவது குறித்தும் கருத்துத் தெரிவித்திருந்தார்.
மேலும் வடக்கு – கிழக்கில் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டுள்ள தனியார் காணிகள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பிரித்தானியா தொடர்ந்தும் கோரி வருகிறது. காணாமல் போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதற்குத் தேவையான நிதியை வழங்கி அதனை செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
எனினும் இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் இயன் பாஸ்லே, சமாதானத்தை கட்டியெழுப்புவது இலகுவான விடயம் அல்ல எனவும், அதனை வரவேற்க வேண்டும் என அவர் தமது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.