இராணுவத்தினரால் கிளிநொச்சியில் 1500 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் இதுவரையில் ஆக்கிரமிப்பு!
கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலக பிரிவுகளில் இராணுவத்தினர் 1515.7 ஏக்கர் நிலப்பகுதியை ஆக்கிரமிப்புச் செய்துள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலக புள்ளி விபரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பிலான கூட்டத்தின் போதே இத்தகவல்கள் வெளியிடப்பட்டன.
இதனடிப்படையில் தனியார் அனுமதிப்பத்திர காணிகள் 374 ஏக்கரும், தனியார் உறுதிக்காணிகள் 168. 2 ஏக்கரும், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் 973.5 ஏக்கர் காணியும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றன.
கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 667 ஏக்கர் காணியும், கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் 185 ஏக்கர் காணியும், பூநகரியில் 592.7 ஏக்கர் காணியும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் 71 ஏக்கர் காணியும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளன.
 

 
 
 
 
 
 











