Breaking News

மஹிந்தவுக்கும் மைத்திரிக்கும் வித்தியாசம் இல்லை..!!

“நாட்டின் தலைவர்களாக மஹிந்த ராஜபக்‌ஷ இருந்தாலும் ஒன்றுதான் மைத்திரிபால சிறிசேன இருந்தாலும் ஒன்றுதான். இவர்கள் இருவருக்கும் இடையில் என்ன வித்தியாசத்தை கண்டுவிட்டோம்?” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் சாடியுள்ளார்.


தமிழர் தாயக பகுதிகளில் இடம்பெற்றுவரும் போராட்டங்கள் தொடர்பில் யாழ். ஊடக மையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், வெள்ளைவான் கடத்தல்கள் இல்லை என்று ஒருபுறம் கூறினாலும் மறுபுறத்தில் பாலியல் துஷ்பிரயோகம் என பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளதென அவர் மேலும் கூறினார்.

அத்துடன், இந்த ஆட்சியில் பல்வேறு விடயங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக, ரவிராஜ் கொலை மற்றும் குமாரபுரம் கொலை தொடர்பான விடயங்கள் என பல்வேறு விடயங்கள் நீதிமன்றத்தில் எவ்வாறு சீர்கெட்டு போனது என்பதை பார்க்கக் கூடியதாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டங்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டுமே தவிர, போராட்டங்கள் நடத்தினால் அரசாங்கம் மாறிவிடும் என்று அஞ்சக்கூடாது என வலியுறுத்தினார்.