Breaking News

இரசாயன தாக்குதலின் எதிரொலி: சிரியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடை



சிரியாவில் இம்மாதத்தின் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட சந்தேகத்திற்கிடமான இரசாயன தாக்குதலின் எதிரொலியாக, சிரிய அரச அமைப்பிலுள்ள அதிகாரிகள் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

அந்தவகையில், சிரிய அறிவியல் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் 271 ஊழியர்களின் அமெரிக்காவிலுள்ள அனைத்து சொத்துக்களையும் முடக்குமாறு கருவூலத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி குறித்த 271 அதிகாரிகளுடன் அமெரிக்க நிறுவனங்கள் எந்தவொரு வர்த்தக தொடர்புகளையும் பேணக்கூடாது என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சிரிய சர்வாதிகார ஜனாதிபதி பஷர் அல-அசாத்தின் கொடூரமான இரசாயன ஆயுத தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டமையினாலேயே விஞ்ஞான ஆதரவு மையத்தை இலக்குவைத்து இந்த கடுமையான பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளதாக கருவூலத்துறையின் செயலாளர் ஸ்டீவன் நியூச்சன் தெரிவித்துள்ளார்.

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள கான் ஷேக்ஹூன் நகரில் இம்மாத ஆரம்பத்தில் நடத்தப்பட்ட சந்தேகத்திற்கிடமான இரசாயன தாக்குதலில் நரம்பு பாதிப்பிற்குள்ளாகி 80இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

எனினும் இதுவொரு கட்டுக்கதை எனத் தெரிவித்துவரும் சிரிய தரப்பு, இரசாயன தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.