Breaking News

‘அனுமன் பாலம்’ குறித்து சிறிலங்கா பிரதமருடன் நிதின் கட்கரி பேச்சு



இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் வீதி இணைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், இந்தியாவின் மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, புதுடெல்லியில் உள்ள தாஜ் விடுதியில் நேற்றுக்காலை இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சந்தித்தார்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர், நிதின் கட்கரி தனது கீச்சகப் பக்கத்தில் இட்டுள்ள பதிவில், “இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் வீதி இணைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடினேன்” என்று குறிப்பிட்டுள்ளார். எனினும் மேலதிக விபரங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை.

சில மாதங்களுக்கு முன்னதாக, சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தரைவழிப்பாலத்தை அமைக்கும் திட்டம் இந்தியாவிடம் இருப்பதாகவும் அதுகுறித்து சிறிலங்காவுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் நிதின் கட்கரி கூறியிருந்தார்.

23 ஆயிரம் கோடி இந்திய ரூபா செலவு ஏற்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்ட இந்த திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியும் உதவ முன்வந்திருந்தது.

எனினும், தலைமன்னாரையும், இராமேஸ்வரத்தையும் இணைக்கும் அனுமன் பாலத்தை அமைப்பது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சு நடத்தப்படவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் மறுத்திருந்தது.

அத்துடன், அத்தகைய துரோகச் செயலுக்கு தாம் ஒருபோதும் அனுமதி அளிக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.