Breaking News

வடக்கு, கிழக்கு பகுதிகளில் இன்று முழு அடைப்புப் போராட்டம்

வடக்கு- கிழக்கு மாகாணங்கள் தழுவிய மிகப்பெரிய முழு அடைப்புப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அழைப்பின் பேரில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.


காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கிலும், கிழக்கிலும் இரண்டு மாதங்களுக்கு மேலாக நடத்தி வரும் போராட்டங்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் உரிய பதில் அளிக்காத நிலையில், முழு அடைப்புப் போராட்டத்துக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தமது காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் நடத்தும் போராட்டத்தையும், அரசாங்கம் கவனத்தில் கொள்ளாத நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளது என்பதை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில் இன்றைய போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள், தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈபிடிபி உள்ளிட்டவையும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் போன்ற முஸ்லிம் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

மேலும் வடக்கு, கிழக்கில் உள்ள தொழிற்சங்கங்கள், பொதுஅமைப்புகளும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், வடக்கு கிழக்கு மாகாணங்கள் இன்று முற்றிலும் செயலிழக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ், முஸ்லிம் கட்சிகள், அமைப்புகள் கூட்டாக ஆதரவு தெரிவித்துள்ளதால், வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியாக நீண்ட காலத்துக்குப் பின்னர் முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய போராட்டமாக இது அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.