சரத் பொன்சேகாவுக்கு உயர் பாதுகாப்பு பதவி – எதற்காக இந்த திட்டம்? - THAMILKINGDOM சரத் பொன்சேகாவுக்கு உயர் பாதுகாப்பு பதவி – எதற்காக இந்த திட்டம்? - THAMILKINGDOM
 • Latest News

  சரத் பொன்சேகாவுக்கு உயர் பாதுகாப்பு பதவி – எதற்காக இந்த திட்டம்?  முப்படைகள், காவல்துறையை உள்ளடக்கிய வகையில், ஒட்டுமொத்த பாதுகாப்பு விவகாரங்களையும் கவனிக்கும் உயர்நிலைப் பதவிக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

  அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் இருந்து விலகி, இந்த உயர்நிலைப் பதவிக்கு பீல்ட் மார்ஷல் சரத் நியமிக்கப்படுவதற்கான காரணங்களை நேற்று கொழும்பில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன வெளியிட்டார்.

  இந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்ட தகவல்கள், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகள், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களின் விபரம் வருமாறு-

  “அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்தி நாட்டில் ஒழுக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அதிகாரங்கள் அடங்கிய இராணுவ பதவியொன்றை வழங்குவதற்கு சிறிலங்கா அதிபர் முன்வந்திருக்கிறார்.

  முப்படையையும் காவல்துறையையும் கொண்டு நாட்டில் ஒழுக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் பதவியை பொறுப்பேற்பதற்காக, தற்போது வகிக்கும் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை விட்டு விலக சரத் பொன்சேகா தயாராக இருக்கிறார்.

  அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் ரீதியான ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்துள்ளன. எந்தவொரு விடயம் தொடர்பிலும் பேச்சு நடத்தாமல் திடீரென ஆர்ப்பாட்டங்களையும் வேலைநிறுத்தப் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

  பேச்சு நடத்தி தீர்த்துக் கொள்ளக்கூடிய விடயங்களுக்கும் கூட, ஆர்ப்பாட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் நடத்தி மக்களை அசௌகரியங்களுக்கு உட்படுத்துகின்றனர். இந்த நிலைமையை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.

  இவ்வாறு அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் ரீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி மக்களை அசௌகரியப்படுத்துபவர்கள் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

  இதன்போது அமைச்சர் பதவியையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும், விட்டு விலகி அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களை கட்டுப்படுத்தி நாட்டில் ஒழுக்கத்தை ஏற்படுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சிறப்பு பதவியொன்றை ஏற்க முடியுமா என அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பினார்.

  முப்படைகளையும் காவல்துறையையும் கொண்டு நாட்டில் ஒழுக்கத்தை ஏற்படுத்தும் சிறப்பு பதவியொன்றை தான் வழங்குவதாகவும் அதற்கு உடன்பட முடியுமா என்றும் சிறிலங்கா அதிபர் கேட்டிருந்தார். அதிகாரங்களை கொண்ட இராணுவ தளபதி போன்ற ஒரு பதவியையே பொன்சேகாவுக்கு வழங்க அவர் முன்வந்துள்ளார்.

  கேள்வி:- மற்றுமொரு கோத்தாபயவை உருவாக்குவதற்காக பொன்சேகாவுக்கு இராணுவத் தளபதி பதவியை வழங்கப்போகின்றீர்களா?

  பதில்: அப்படி இல்லை. கோத்தாபய யார் என்று உங்களுக்குத் தெரியும். கோத்தாபயவுக்கு மகிந்த ராஜபக்சவே அஞ்சி கொண்டிருந்தார். ஒருமுறை மஹிந்த ராஜபக்ச சமாதானம் தொடர்பாக ஒரு குழுவினருடன் பேச்சு நடத்திக்கொண்டிருந்த போது அங்கே கோத்தா வந்து கொண்டிருந்தார். அதனை கண்ட மகிந்த ராஜபக்ச கோத்தா வருகிறார் என பதறியடித்துக் கொண்டு கூறியதுடன் பேச்சு நடத்த வந்திருந்தவர்களை ஒரு அறையில் போட்டு பூட்டிவிட்டார். இவ்வாறு தான் மகிந்த ராஜபக்ச போர் செய்தார்.

  கேள்வி: சரத் பொன்சேகாவை நியமித்து ஆர்ப்பாட்டங்களை நிறுத்த முடியுமா?

  பதில்: அவர் நிறுத்துவார்.

  கேள்வி: எவ்வாறான பதவி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படும்?

  பதில்: அதிகாரம் கொண்ட இராணுவத் தளபதி போன்ற பதவி வழங்கப்படும். ஆனால் அனைத்துப் படைகளையும் அவர் நிர்வகிப்பார்.

  கேள்வி: பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கைவிடத் செய்யத் தயாரா?

  பதில்: அதிகாரம் உடைய பதவி கிடைத்தால் அவர் விலகத் தயாராக இருக்கிறார்.

  கேள்வி: தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முயலுகின்றீர்களா?

  பதில்: அரசியல் ரீதியாக செயற்படுவதற்கு அவர்களுக்கு இடமளிக்க முடியாது.

  கேள்வி: ஏன் அரசாங்கத்தினால் ஒழுக்கத்தை ஏற்படுத்த முடியாதா?

  பதில்: இங்கு பல்வேறு விடயங்களை கருத்தில் கொள்ளவேண்டும். நாட்டின் பாதுகாப்பும் முக்கியம் அதேநேரம் ஒழுக்கமும் முக்கியம் எனவே இந்த இரண்டு விடயங்களையும் முன்னெடுப்பதற்காகவே சரத் பொன்சேகாவை நியமிக்கின்றோம்.

  கேள்வி: அண்மையில் கடற்படை தளபதி ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியிருந்தார். அப்படியிருந்தும் இது போன்ற தீர்மானங்களை நீங்கள் எடுப்பது சரியா?

  பதில்: அவர் ஊடகவியலாளரின் சட்டையை மட்டும் தான் பிடித்தார்.

  கேள்வி: இவ்வாறு செய்வதற்கு பதிலாக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றலாமே?

  பதில்: எவ்வளவு கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளோம் என்று உங்களுக்குத் தெரியும். வரவு, செலவுத்திட்டத்தின் ஏற்பாடுகளைக் கூட நாங்கள் திருத்தியிருக்கின்றோம். தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியே வருகின்றோம். ஆனால் யாரோ ஒரு அதிகாரி எதனையோ கூறினார் என்பதற்காக ஒருநாள் வேலைநிறுத்தம் செய்த மருத்துவ அதிகாரிகள் சங்கம் எமது நாட்டில்தான் உள்ளது.

  மனிதாபிமானமற்ற முறையில் எதனையும் செய்வதற்கு அனுமதிக்க முடியாது. முன்னர் கொழும்பில் வந்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அஞ்சினர். கோத்தாவுக்கு அஞ்சி ஆர்ப்பாட்டம் செய்யாமல் இருந்தனர். இப்போது அந்தப் பயம் போய்விட்டது. அதனால் நினைத்தவுடன் கொழும்பு வந்து ஆர்ப்பாட்டங்களை செய்கின்றனர்.

  கேள்வி: வேலைநிறுத்தங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடந்தால் சரத் பொன்சேகா அவற்றை எவ்வாறு நிறுத்துவார்?

  பதில்: அவற்றை அவர் அழகாக செய்வார்.

  கேள்வி: ஏன் காவல்துறையினரைக் கொண்டு சிவில் நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாதா?

  பதில்:- இராணுவத்தைக் கொண்டு செய்வதிலும் தவறில்லை தற்போது போர் இல்லை. இராணுவமும் ஏதாவது செய்வதற்காகப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எனவே அவர்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை.

  கேள்வி: இதன்மூலம் நாடு இராணுவமயமாகுமே?

  பதில்: அவ்வாறு இல்லை. இராணுவத்தின் சேவைகளை பெற்றுக்கொள்வதில் தவறில்லை.

  கேள்வி: சிவில் நிர்வாகத்தில் இவற்றை மேற்கொள்ள அரசாங்கத்திற்கு முதுகெலும்பில்லையா?

  பதில்: இவற்றை செய்வதன் மூலமே முதுகெலும்பை நாம் காட்டுகின்றோம். இந்த புதிய நியமனம் மூலம் நாம் முதுகை நிமிர்த்த முடியும்.

  கேள்வி: ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுமா?

  பதில்: பார்ப்போம்.

  கேள்வி: கோத்தா செய்ததையே பொன்சேகா செய்வாரா?

  பதில்: அப்படி இல்லை. பொன்சேகா கஷ்டப்பட்டவர், கஷ்டங்களை அறிந்தவர். அநீதிக்கு எதிராக அவர் செயற்படுவார்.

  கேள்வி: அப்படியாயின் நாட்டில் சிவில் நிர்வாகம் வீழ்ச்சியடைந்து விட்டதா?

  பதில்:- அப்படித்தான் மக்களும் கூறுகின்றனர். அதனால்தான் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்கின்றோம். முன்னைய அரசாங்கத்தின் திருடர்களையும் கொலைகாரர்களையும் பிடிப்போம்.

  கேள்வி: அமைச்சரவையின் அமைச்சர்கள் அனைவரும் இந்த யோசனையை ஏற்றுக்கொண்டனரா?

  பதில்: சிறப்பான தீர்மானம் என்று கூறி ஏற்றுக்கொண்டனர்.

  கேள்வி: சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டனரா?

  பதில்: சுதந்திரக்கட்சியின் தலைவரான சிறிலங்கா அதிபர் தான் இந்த யோசனையையே முன்வைத்தார்.

  கேள்வி: இதன்மூலம் தொழிற்சங்கங்களை அச்சுறுத்துகின்றீர்களா?

  பதில்: அமைச்சரவையில் பேசப்பட்டதை கூறுகின்றேன்.

  கேள்வி: பொன்சேகாவுக்கு இராணுவ தளபதி பதவி வழங்குவதற்கு பதிலாக சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி வழங்கலாமே?

  பதில்: அது நல்ல யோசனை, அது தொடர்பில் நாங்கள் பேசலாம். ஆனால் சட்டம் ஒழுங்கு அமைச்சை வழங்கினால் அதில் காவல்துறையினர் மட்டுமே உள்ளடங்குவர்.

  கேள்வி: குப்பை பிரச்சினைக்கு என்ன தீர்வு?

  பதில்: குப்பைகளைக் கொட்டுவதற்காகத்தான் முத்துராஜவெல மற்றும் தொப்பை ஆகிய பிரதேசங்களை தெரிவு செய்தோம். ஆனால் அங்கும் குப்பைகளை கொட்டவேண்டாமென ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். மீதொட்டமுல்ல குப்பை எங்களுக்கு வேண்டாமெனக் கூறுகின்றனர். நாட்டின் ஒருமைப்பாடு தொடர்பாக பேசுபவர்கள் குப்பை விடயத்தில் பிரித்து பார்க்கின்றனர். ஒவ்வொரு சந்தி சந்தியாக சமஷ்டியை கொண்டுவரவே முயற்சிக்கின்றனர்.

  கேள்வி: அப்போது இதற்கு என்னதான் தீர்வு?

  பதில்: அதற்குத்தான் சரத் பொன்சேகாவை விசேட பதவிக்கு கொண்டுவர முயற்சிக்கின்றோம்.

  கேள்வி : அப்படியானால் அமைச்சர்களாகிய உங்களால் எதனையும் செய்ய முடியாதா?

  பதில்: ஒருவரால் அனைவரையும் கட்டுப்படுத்த முடியாது. உங்களால் உங்கள் நிறுவனத்தின் அனைவரையும் கட்டுப்படுத்த முடியுமா? முடியாது. அதனால் தான் இவ்வாறான ஏற்பாடுகளை செய்கிறோம். என்று குறிப்பிட்டார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: சரத் பொன்சேகாவுக்கு உயர் பாதுகாப்பு பதவி – எதற்காக இந்த திட்டம்? Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top