Breaking News

வவுனியாவில் வீதியை முடக்கி போராட்டம்


வடக்கு, கிழக்கில் காணி விடுவிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி முன்னெடுக்கப்பட்டுவரும் ஹர்த்தாலைக் குழப்பும் வகையில் போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தாயகம் தழுவிய ரீதியில் இன்றைய தினம் பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டுவரும் நிலையில், இன்று காலை வவுனியாவில் ஏ9 வீதி வழியாக போக்குவரத்து முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் உள்ளூர் நேரப்படி 8.30 அளவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம் நடத்திவரும் ஏ9 வீதியில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக வீதியை மறித்து அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டன.

இதன்போது சம்பவ இடத்துக்கு சென்ற வவுனியா பொலிஸார், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன் இது குறித்து கலந்துரையாடினர்.

எனினும் போராட்டக்காரர்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில், தொடர்ந்தும் வீதி மறிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு விஜயம் செய்த, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டோருடன் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து வீதிமறிப்பு போராட்டத்தைக் கைவிட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சுழற்சி முறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.