நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டுக்கு 3 முறைக்கு மேல் செல்லக் கூடாது: பிரதமர்
ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு வருடத்துக்குள் மூன்று முறைக்கு மேல் வெளிநாட்டுப் பயணத்தில் ஈடுபடக் கூடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்தல் விடுத்துள்ளார்.
கட்சியைச் சேர்ந்த யாராவது வெளிநாட்டுப் பயணத்தில் ஈடுபடுவதாக இருந்தால், தன்னிடம் எழுத்து மூலம் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என கட்சித்தலைமையகத்தில் இடம்பெற்ற ஐ.தே.கட்சியின் அமைப்பாளர்களை அறிவிக்கும் கூட்டத்தில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் எப்பொழுதும், கட்சி ஆதரவாளர்களினதும், பொது மக்களினதும் தேவைகளை இனங்கண்டு நிறைவு செய்பவர்களாக இருக்க வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். குழுக்களுக்கு பெயரிடப்பட்டுள்ளவர்கள் கட்டாயமாக அக்குழுக் கூட்டங்களுக்கு சமூகமளிக்க வேண்டும்.
சபைகளுக்கு பொறுப்பாக இருப்பவர்கள் அச்சபைக் கூட்டங்களில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும். கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்துக்கு அதில் அங்கம் வகிக்கும் ஒருவர் மூன்று கூட்டங்களுக்கு சமூகமளிக்காது போனால், அவர் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார் எனவும் பிரதமர் அவ்வறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார்.








