Breaking News

மோடி யாழ்ப்பாணம் செல்ல வேண்டும்: பழ.நெடுமாறன்



சிறீலங்கா செல்லும் பிரதமர் மோடி யாழ்ப்பாணத்திற்கு சென்று அங்குள்ள தமிழர்களின் நிலையை நேரில் கண்டறிய வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”புத்த மாநாட்டில் கலந்து கொள்ள கொழும்பு செல்லவிருக்கும் பிரதமர் மோடி யாழ்ப்பாணத்திற்கும் சென்று அங்குள்ள தமிழர்களின் நிலையை நேரில் கண்டறிய வேண்டும்.

2012-ம் ஆண்டில் காமன்வெல்த் அதிபர்கள் மாநாடு நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட பிரிட்டிஷ் பிரதமர் யாழ்ப்பாணம் சென்று தமிழர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து சிறீலங்கா அதிபரிடம் தனது கண்டனத்தை நேரில் தெரிவித்தார்.

அதைப்போல பிரதமர் மோடியும் ஈழத் தமிழர்களையும் அவர்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை நேரில் கேட்டறிந்து சிறீலங்கா அரசிடம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு வற்புறுத்த வேண்டும். சிறீலங்கா நட்புறவுக்காக அங்கிருக்கும் தமிழர்களை பலிகடாக்களாக ஆக்கக் கூடாது.

அதைப்போல தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுடுவதையும் தாக்குவதையும் உடனடியாக நிறுத்துமாறு கண்டிப்பாகக் கூறவேண்டும். இவற்றையெல்லாம் செய்வதற்கு சிறீலங்கா அரசு முன்வராவிட்டால் அந்த நாட்டிற்கு எத்தகைய பொருளாதார மற்றும் ராணுவ ரீதியான எந்த உதவிகளையும் இந்திய அரசு செய்யக் கூடாது” என பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.