Breaking News

ஐயா, ஐயா, சம்பந்தர் ஐயா இன்னும் இரண்டு கிழமை ஆகலையோ!

நாடு தர வேண்டும்; இல்லையேல் நகரம் தர வேண்டும்; அதுவும் இல்லையாயின் ஐந்தூர் தர வேண்டும்;

அதுவும் முடியாது என்றால் ஐந்து வீடு தந்தால் பஞ்ச பாண்டவர்களாகிய நாம் ஒவ்வொரு வீட்டில் இருந்து வாழ்ந்து போவோம் என்பது தருமபிரானின் கோரிக்கை.

ஐந்து வீடென்ன ஒன்றும் தர முடியாது என்கிறான் துரியோதனன். யுத்தம் நடப்பதை தடுப்பது தருமரின் நோக்கம். அதனாலேயே ஐந்து வீடேனும் தருக என்று தருமர் கேட்கிறார்.

தருமரின் கோரிக்கையை பலவீனமாகக் கருதிய துரியோதனன் எதுவும் தர முடியாது என்கிறான். இதன் பின்பே பாரத யுத்தம் நடக்கிறது. நாடு முழுவதும் பாண்டவர்களுக்காகிறது.

ஐந்து வீட்டை அன்பாக வழங்கியிருந்தால் துரியோதனனே மன்னனாக இருந்திருப்பான். என்ன செய்வது தர்மத்தை மறந்து அதர்மத்தின் வழியில் நின்று கர்ச்சித்தாலும் தர்மமே வெல்லும் இதுதான் உண்மை.

எனினும் இந்த உண்மையை பலர் பல இடங்களில் மறந்து போகின்றனர். ஆட்சித் தலைவர்கள் அரசியல் தலைவர்கள் எப்போதும் உண்மையை உரைக்க வேண்டும்.

பொய்யுரைப்பது, மக்களை ஏமாற்றுவது, தங்கள் சுயநலனை மட்டுமே சிந்திப்பது இவையெல்லாம் என்றோ ஒருநாள் ஆபத்தைத் தரும்.இதை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, எங்கள் அரசியல் தலைமையாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மறந்து போகிறது.

அண்மையில் கூட்டமைப்பின் மே தின நிகழ்வு அம்பாறை ஆலையடிவேம்பு என்ற இடத்தில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய இரா.சம்பந்தர் அவர்கள், 

அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் இரண்டு கிழமைக்குள் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து நல்லதோர் தீர்வு வரும் எனக் கூறியிருந்தார்.அதைக் கேட்ட மக்கள் கரகோ­ம் செய்து எங்கட ஐயா! ஐயா தான் எப்படியோ அரசாங் கத்தோட கதைத்து இரண்டு கிழமைக்குள்ள தீர்வு வரச் செய்து போட்டார் என்று மகிழ்ச்சி ஆரவாரத்தில் எல்லாம் மறந்தனர்.

இரண்டு கிழமை முடிந்து விட்டது. இன்னும் ஒன்றையும் காணவில்லை. முன்பு 2016ஆம் ஆண்டு டிசம்பருக்குள் தீர்வு இதை நம்புங்கள் என்று சம்பந்தர் ஐயா சொல்ல, அதை மக்கள் மலையாக நம்பினர்.2016 டிசம்பர், 2017 தீபாவளிக்குள் தீர்வு சாத்தியம் என்றார். இப்போ மே தினத்தன்று இரண்டு கிழமைக்குள் அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் நல்லதொரு முடிவை அரசாங்கம் வெளியிடும் என்றார்.

சம்பந்தர் ஐயா சொன்ன இரண்டு கிழமை முடிந்து விட்டது. இன்னும் அரசாங்கத்தின் முடிவு வெளிவரவில்லை.ஐயாவுக்கு என்ன நடந்தது; நல்ல தீர்வுக்கு என்னாச்சு. என்ன சொன்னாலும் மக்கள் ஏற்பர் என்ற நினைப்பில் எதுவும் சொல்லுவம் என்று சொல்வதா?என்னவாக இருந்தாலும் மக்களை ஏமாற்றாதீர்கள் என்பதை மட்டுமே நாம் இவ்விடத்தில் சொல்ல முடியும்.