Breaking News

சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரிடம் முதலமைச்சர்

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்ப டுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் பில் ஜோன்சனிடம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.


அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் பில் ஜோன்சன் நல்லிணக்க விவகாரங்களின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர் நேற்று, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப்புடன் இணைந்து, யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண முதலமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்ட வடமாகாண முதலமைச்சர்,

“அரசியல் ரீதியான பயணம் எப்படி இருக்கின்றது என கேள்வி எழுப்பியிருந்தார். 2015 ஜனவரி மாதம் 8ஆம் நாள் நாம் எதிர்பார்த்தமைக்கு மாறாக, இன்னும் இரண்டு ஆண்டுகள் தாமதமாக இருப்பதனால், மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல இடங்களில் எமது மக்கள், போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். துணிவான சில நடவடிக்கைகளை எடுக்காமையினால், அரசியல் காரணங்களுக்காக நாம் எடுக்க வேண்டிய எமது நடவடிக்கைகளையும் முக்கியமான செயற்பாடுகளையும் எடுக்காமல் இருப்பது, மக்களிடையே ஒரு விதமான விசன நிலையை ஏற்படுத்தும்.

இதுவரையில் மக்களின் காணிகளைத் திருப்பிக் கொடுக்காமை, மீண்டும் மக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள், வேலைவாய்ப்பு, காணாமல் போனோர் பிரச்சினைகள், மக்களின் காணிகளை இராணுவத்தினர் வைத்திருப்பது போன்ற பல விடயங்கள் பற்றிக் கலந்துரையாடினோம்.

ஜெனிவா கூட்டத்தொடரில் 2 ஆண்டுகள் காலஅவகாசம் சிறிலங்காவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவோம் என வாக்குறுதி அளித்துள்ளது.

அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஏற்ற அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். என்ன விடயங்கள் நடைபெறுகின்றன, எப்போது நடைபெறுகின்றது, என்ன விடயங்கள் நடைபெறவில்லை, குறிப்பிட்ட காலப்பகுதியில் நிறைவேற்ற முடியுமா, 2 ஆண்டு காலத்தில் கூட எடுத்துக்கொண்ட விடயங்களை நடைமுறைப்படுத்த முடியுமா என, இப்போதே கேட்க வேண்டும்.

சிறிலங்கா அரசாங்கம் உலக நாடுகளுக்கு வழங்கிய உத்தரவாதத்தை, எப்படியாவது நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும், அவற்றை நடைமுறைப்படுத்தவதற்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்தினேன்” என, தெரிவித்தார்.

நேற்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த பில் ஜோன்சன் அமெரிக்கத் தூதுவருடன் இணைந்து, யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை, தனியார் துறை மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசினார்.

அத்துடன் முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளையும் அவர் பார்வையிட்டுள்ளார்.