Breaking News

விசாரணை எதுவும் நடத்த முடியாது! - ஆளுநர் கூரே

காணாமல்போனோர் பிரச்சினை தொடர்பில் பதில்
கொடுப்பதற்காக எத்தனை தடவைகள் யாரிடம் கலந்துரையாடினாலும் அதற்கு பதில் ஒன்றுதான். அது காணாமல்போனோர் தொடர்பாக யாரிடமும் விசாரணை செய்ய முடியாது என்பதாகவே அமையும் என தெரிவித்துள்ள வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, இந்த விடயத்தில் மத்திய அரசால் உதவிகள் மற்றும் சான்றிதழ்களை வழங்குவது மட்டுமே நோக்கமாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுமக்கள் காணாமல் போனதற்கு யார் காரணம்? அதற்கு பதில் கூறவேண்டியது யாருடைய கடமை? மத்திய அரசின் கடமை மட்டுமா? இந்த நாட்டில் முன்னைய காலத்தில் பிள்ளைகள் காணாமல் போனதற்கு யார் காரணம்? யார் அவர்களை கடத்தியும் கூட்டியும் சென்றார்கள்.

உங்களுக்கு தெரிந்த வகையில் முன்னைய காலத்தில் தமிழீழ விடுதலை புலிகள், புளொட், ஈரோஸ், இந்திய இராணுவம், இலங்கை இராணுவத்தினர் இருந்தார்கள். இவர்கள் அனைவரும் இந்த வேலை செய்தார்கள் தானே. இவர்கள் அனைவரும் பொதுமக்களை காணாமல்போனவர்கள் தொடர்பில் விசா ரணை செய்வதற்கு இரு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அந்த குழுவுக்கு பொதுமக்கள் வழங்கிய விபரங்களை பார்த்தால் அதிகளவில் புலிகள் தான் தமது பிள்ளைகளை பிடித்துச்சென்றார்கள் என்றும் மற்றும் இந்திய -இலங்கை இராணுவத்தினர் பிடித்து சென்றா ர்கள் என தெரிவித்திருக்கிறர்கள்.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தற்போது உயிருடன் இல்லை, அவர்கள் பிடித்து சென்ற பிள்ளைகளை யாரிடம் போய் கேட்பது? யாரிடம் விசாரணை செய்ய முடியும்? உயிருடன் இருந்தால் மட்டும் தான் பதில் கொடுக்க முடியும்.
ஜே.வி.பி காலத்திலும் இவ்வாறு நடந்தது. இவ்வாறு காணாமல்போனார்கள். ஆனால் என்ன செய்வது? போனது போனதுதான். இதற்கு விரைவில் தீர்மானம் எடுக்க வேண்டும்.

இந்த அரசு இளைஞர்களை பிடித்து வைத்துக்கொண்டு அவர்களை காணவில்லை என பொய் சொல்லவில்லை. அவர்கள் இருந்தால் அவர்களின் உறவுகளுக்கு உண்மையை சொல்வார்கள். அவர்கள் இறந்து விட்டால் இறந்தவர்களின் பாதிக்கப்பட்ட உறவினர்களுக்கு உதவி செய்வதுதான் மத்திய அரசினு டைய நோக்கமாக இருக்கிறது.

மூன்று, நான்கு வருடங்களுக்கு மேலாக காணாமல் போயிருந்தால் அவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற தீர்மானம் அரசில் உள்ளது. அந்த வகையில், மேற்படி காணாமல்போனவர்களுக்கு சான்றிதழ் கொடுக்க அரசால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி ஒரு குழு அமைத்து இறந்தவர்களுடைய உறவினர்களுக்கு உதவியை செய்வதற்கு திட்டமிட்டுள்ளார்.

ஆனால் காணாமல்போனவர்கள் தொடர்பில் சான்றிதழ் எடுப்பதற்கு தாய் தந்தையினருக்கு விருப்பமும் இல்லை. சான்றிதழை பெற்றால் தானே உதவியை பெற முடியும். அதையும் எடுக்காமல் எப்படி உதவி செய்ய முடியும்.காணாமல்போனவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று சிலர் சில அடையாளங்களை தெரிவித்தார்கள். அங்கு சென்று பார்த்தால்; அங்கு அவர்கள் இல்லை.

இந்த மக்கள் மத்தியில் நம்பிக்கை ஒன்று இருக்கிறது. அதாவது எமது உறவுகள் உயிருடன் எங்கோ ஒரு இடத்தில் உள்ளார்கள் என நம்புகிறர்கள். ஆனால் எங்கு உள்ளார்கள் என தெரியாது. உயிருடன் தான் உள்ளார்கள் என அவர்கள் தமது ஆறுதலுக்காக தான் அவ்வாறு சொல்கிறார்கள்.அந்த நம்பிக்கைதான் பெரிய பிரச்சினையாகவுள்ளது. எல்லா பிரச்சினைக்கும் மத்திய அரசிடம் தான் வந்து கேள்வி கேட்கிறார்கள்.

500 இராணுவத்தினர் காணாமல்போயுள்ளார்கள். அவர்களின் உறவுகள் வந்து எம்மிடம் கேட்டால் நாம் யாரிடம் போய் விசாரிப்பது? பிரபாகரன், கிட்டு, சூசை இதில் யார் உயிருடன் உள்ளார்கள்? யாரிடம் போய் கேட்பது.

எனவே பதில் கொடுக்க முடியாத பிரச்சினைக்கு எவ்வாறு பதில் கொடுப்பது. இரண்டு மணித்தியாலங்கள் கடந்து கலந்துரையாடினாலும் இரண்டு வாரங்கள் கடந்து கலந்துரையாடினாலும் பதில் ஒன்றுதான். காணாமல்போனவர்கள் தொடர்பாக யாரிடமும் எந்தவிதமான விசாரணை செய்ய முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் நேற்று ஏ-9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவேளை வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல். இளங்கோவனின் கையொப்பத்துடன் மாவட்டச் செயலகத்திற்கு தொலைநகல் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு அமைவாக மாலையில் போராட்டம் கைவிடப்பட்டிருந்தது.

குறித்த கடிதத்தில் இரண்டு வாரத்திற்குள் ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திப்பதற்கு இணக்கம் தெரிவித்த நிலையில் வடக்கு ஆளுநர் ரெஜி னோல்ட் கூரே ஆளுநர் அலுவலகத்தில் வைத்து மேற்படி தனது கருத்தை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்