Breaking News

நாளை மாகாணசபையில் முதலமைச்சருக்கு நெருக்கடி

வடக்கு மாகாண சபையின்
அமைச்சரவையின் கூட்டு பொறுப்புத்தன்மையினை புறந்தள்ளி தமது கட்சி நாளிதழில் வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை அறிக்கையினை தனக்கேற்ற வகையினில் வெளிப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வடமாகாண அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களினை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு தனது அறிக்கையினை முதலமைச்சரிடம் ஏற்கனவே கையளித்துவிட்டது. குறித்த அறிக்கையினை கூட்டு அமைச்சரவை பொறுப்புக்கள் அடிப்படையினில் முதலமைச்சர் நேற்று மின்னஞ்சல் மூலம் தனது அமைச்சர்களிற்கு அனுப்பிவைத்துள்ளார். அதனையே சுகாதார அமைச்சரான சத்தியலிங்கம் தமது கட்சிப்பத்திரிகைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகின்றது.

இதனிடையே தமது கட்சி பத்திரிகை உரிமையாளரான சரவணபவனின் அரசியல் எதிர்முனையிலுள்ளவர்களென அடையாளப்படுத்தப்பட்டுள்ள கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராசா மற்றும் விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, கூட்டுறவு மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோரை பதவி விலகவேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

நாளை செவ்வாய்க் கிழமை நடைபெற இருக்கும் வடக்கு மாகாண சபை அமர்வில் இந்த அறிக்கை முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்ற நிலையினில் அதற்கு முன்னராக முதலமைச்சரது நம்பிக்கைக்கு துரோகமிழைத்து அறிக்கையினை திரிபுபடுத்தி ஊடகமூடாக வெளிப்படுத்தியமை தொடர்பினில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.

இதனிடையே பரிந்துரைகளின்படி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஊழல்குற்றச்சாட்டுக்கள் எவையும் நிரூபிக்கப்படவில்லை என்று முதலமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

அறிக்கையினில் சத்தியலிங்கம் சொக்கதங்கமென சொல்லப்பட்டுள்ளதாகவும் கட்சி நாளிதழில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண அமைச்சர்கள் இருவரை பதவி நீக்குமாறு பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் நிபுணர் குழுவில் அங்கத்துவம் பெற்றிருக்கின்ற நபர்கள் தொடர்பிலான தகவல்களும் வெளியாகியுள்ளன.

ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.தியாகேந்திரன் வடக்குமாகாணசபையின் சட்டத்தரணியாக சுன்னாகம் மின் உற்பத்தி நிலையம் தொடர்பிலான வழக்கு விசாரணையில் வடக்குமாகாணசபை சார்பில் முற்பட்டு எதிராளிகளுக்கு சார்பாக நடந்துகொண்டதாகத் தெரிவித்து நீக்கப்பெற்று பின்னர் கொழும்பில் இருந்து இன்னொரு சட்டத்தரணி நியமிக்கப்பட்டிருந்ததாக தெரியவருகிறது. 

இதனிடையே முன்னாள் வடக்குமாகாணசபை பிரதம செயலர் ரங்கராஜனின் சகோதரரே எஸ்.தியாகேந்திரன் என்றும் ரங்கராஜன் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் நெருங்கிய சகா என்றும் தெரியவருகிறது.

இதேவேளையில்,
ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.தியாகேந்திரன் தொடர்பில் தெரியவருவதாவது,
வடமராட்சி கிழக்கில் அமைப்பு ஒன்றில் செயற்பட்டுவந்த நபர் ஒருவரை மோசடி அடையாளம் காணப்பட்டதன் அடிப்படையில் கூட்டுறவு அமைச்சினால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். குறித்த நபர் தொடர்பிலான வழக்கு விசாரணையில் அதே நபருக்கு ஆதரவாக விசாரித்து வருகின்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பரமராஜா, அமைச்சர்கள் மீதான விசாரணையில் குறித்த வழக்கை நீதிபதியாக அமர்ந்து விசாரித்துவந்தார் என்று தெரியவருகிறது.

வடக்கு மாகாணசபையின் நாளைய அமர்வில் குறித்த விடயம் முன்வைக்கப்பட்டு தீர்மானம் கொண்டுவருவதற்கான உள் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக தெரியவருகிறது. இதன்போது அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமா அல்லது நேரடியாக விலக நிர்ப்பந்திப்பதா என்பதுபற்றி சுமந்திரன் தரப்பு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் கிடைக்கின்றது.

முதலமைச்சர் நியமித்துள்ள குழுவில் எப்படியானவர்கள் இருந்துள்ளார்கள் அவர்களின் கட்சி பின்னணிபற்றி அறிந்திருந்திருக்கவில்லை என்றும் இது முதலமைச்சருக்கு சார்பாக செயற்பட்டுவந்த இரு அமைச்சர்களையும் ஓரங்கட்டுவதன் ஊடாக முதலமைச்சரையும் ஓரம்கட்டி வடமாகாணசபையிலும் ஒரு மென்வலு ஆட்சியை கொண்டுவரும் செயற்பாடாக அமையும் என தகவலறிந்த வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கிறது.

இவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட இரு அமைச்சர்கள் மற்றும் அவர்களின் செயலாளர்களும் பதவி விலகும் பட்சத்தில் அடுத்த கட்டமாக விவசாய மற்றும் கல்வி அமைச்சு பதவிகளுக்கு யார்யாரை நியமிக்கலாம் என்பது பற்றி தமிழரசுக்கட்சி உயர்பீடம் அவைத்தலைவர் சிவஞானத்துடன் கலந்துரையாடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரு அமைச்சர்கள்மீது குற்றச்சாட்டுக்கள் ஒப்புக்கொள்ளப்பட்டால் அதனை முதலமைச்சர் ஏன் கண்காணிக்கவில்லை என்பதோடு அவரது நிர்வாக திறன்பற்றியும் கேள்விக்குட்படுத்தி அவருக்கும் நெருக்கடி கொடுத்து அவரை வெளியே அனுப்பினால் அவர் மாற்று தலைமை ஒன்றை தோற்றுவித்துவிடுவார் என்ற அச்சம் இருப்பதால் அவரை வைத்திருப்பதன் ஊடாக சம்பந்து தரப்புக்கு எதிரான ஒரு தலைமை தோன்றாமல் தடுப்பது சிறந்ததா என்பதுபற்றியும் ஆராயப்படுவதாக தெரிகிறது. எது எவ்வாறு இருந்தாலும் நாளை சுமந்திரன் தரப்புக்கு ஆட்சி கிடைத்த சந்தோசத்தை சபையில் காணலாம் என்கிறார் மாகாணசபை உறுப்பினர் ஒருவர்.

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்