சீ.வி, கதிர்காமம் முருகன் ஆலய தலைமை மதகுரு சந்திப்பு
வட மாகாணத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணி விடுப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் தொடர்பில் கதிர்காமம் முருகன் ஆலயத்தின் தலைமை மதகுரு பஸ்சநாயக்க நிலமேயிடம் எடுத்துக் கூறியதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வடக்கில் இருந்து கதிர்காமத்திற்கு செல்லும் யாத்திரிகர்களின் வீழ்ச்சி தற்பொழுது குறைவடைந்தமைக்கு, மக்கள் மத்தியிலுள்ள அச்சமே காரணம் என பஸ்சநாயக்க நிலமேயிடம் கூறியதாகவும் வடமாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் செய்த கதிர்காமம் முருகன் ஆலயத்தின் தலைமை மதகுரு பஸ்சநாயக்க நிலமே நல்லூர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீசோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் ஆறுதிருமுகன் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருந்தார்.
இதன்பின்னர் நல்லூர் கந்தசுவாமி ஆலயம், தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயம் ஆகியவற்றுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் வடமாகாண முதலமைச்சருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டார்.
இந்தச் சந்திப்பின் போது, யாழ். மாவட்டத்தில் இருந்து கதிர்காமத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் யாத்திரிகர்களின் வருகை மிக குறைவடைந்துள்ளமை ஏன் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், அச்சம் காரணமாகவே யாத்திரீகர்களின் வருகை குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்திலுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில், உடன்பாட்டுடன் நில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றதொரு செய்தியை அவர் கூறியதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.








