Breaking News

விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் – மஹிந்த



இலங்கையில் விரைவில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதில் ஜப்பானில் வாழும் இலங்கையர்கள் ஆர்வம் கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜப்பான் சென்றுள்ள மஹிந்த, இலங்கையிலிருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய தொலைபேசி செவ்வியில் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களினால் நாட்டை சீராக வழிநடத்த முடியாமல் உள்ளதால், ஆட்சியாளர்கள் மீது ஜப்பானில் உள்ள இலங்கையர்கள் விரக்தி அடைந்துள்ளதாகவும், இதனால் இலங்கையில் உடனடியாக ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென அவர்கள் அழைப்பு விடுப்பதாகவும் குறிப்பட்டுள்ளார்.

மேலும், இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகளினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதிலிருந்து தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள ஜப்பான் வாழ் இலங்கையர்கள் அதற்கு ஒரே தீர்வு ஆட்சி மாற்றம் என்பதனை நன்கு உணர்ந்துள்ளதாகவும் மஹிந்த கூறியுள்ளார்.

அத்துடன், ஜப்பானிலுள்ள வாகன ஏற்றுமதி வர்த்தகர்கள் பெரும் பாதிப்படைந்துள்ள நிலையில், அது குறித்து இலங்கை அரசாங்கத்திடம் எடுத்துரைக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.