Breaking News

சிறப்பான ஆட்டத்திற்காக வங்கதேச அணி பெருமை கொள்ளலாம்: சங்ககாரா புகழாரம்

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் வங்காளதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தி தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது.


வங்கதேசம் அணி லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மழை காரணமாக தப்பித்தாலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் லீக் சுற்றில் வெளியேறிய நிலையில் வங்கதேசம் அணி அரையிறுதி வரை சென்றது. 

இந்நிலையில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்திற்காக வங்கதேச அணி பெருமை கொள்ளலாம் என்று இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “இந்த போட்டியில் வங்கதேசம் அனைத்து துறைகளிலும் சிறப்பாக விளையாடியது. ஆஸ்திரேலியா உடனான தொடருக்காக அந்த அணி நம்பிக்கையுடன் டாக்கா திரும்புகிறது. அதேபோல், 2019-ம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பையில் தந்திரமான திட்டமிடலுடன் தீவிர போட்டியாளர்களாக இருக்க வேண்டும். 

தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தால் இரண்டு பெரிய ஐ.சி.சி தொடர்களில் நாக்-அவுட் சுற்றுவரை வங்கதேசம் அணி சென்றுள்ளது. பயிற்சியாளர் மற்றும் வங்கதேச கிரிக்கெட் சங்கத்தின் முழு ஒத்துழைப்பு, முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹாசன் தலைமையிலான மூத்த வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி அதிக முன்னேற்றம் அடைந்துள்ளது” என்றார்.