ஐங்கரநேசன், குருகுலராஜாவை பதவி விலக்குமாறு அறிக்கை பரிந்துரை!
வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் ஆகியோரை பதவி விலக்குமாறு முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண அமைச்சர்களின் ஊழல், மோசடிகள் தொடர்பாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் விசாரணை நடாத்துவதற்காக கடந்த வருடம் நவம்பர் மாதம் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் ஓய்வுபெற்ற நீதிபதிகள் மூவரைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இதில் ஓய்வுபெற்ற நீதிபதிகளான எஸ்.தியாகேந்திரன், எஸ்.பரமராஜா மற்றும் ஓய்வு பெற்ற மாவட்டச் செயலர் செ.பத்மநாதன் ஆகியோர் அந்த விசாரணைக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இவ்விசாரணைக்குழு கடந்த மாதம் 19ஆம் திகதி தனது அறிக்கையை வட மாகாண முதலமைச்சரிடம் ஒப்படைத்தது. முற்று முழுதாக தமிழில் உருவாக்கப்பட்ட இவ்விசாரணை அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள வட மாகாணசபை அமர்வில் முதலமைச்சரால் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.








