மறக்கப்படும் பாதிக்கப்பட்டோர்
அரசாங்கத்தைப் பொறுத்தவரை யில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கவேண்டிய பாரிய பொறுப்பைக் கொண்டிருக்கின்றது. மக்களுக்கு நீதிவழங் குவோம் என நாட்டுக்கு உறுதி வழங்கியிருக்கிறது. ஏன் சர்வதேசத்திற்குக் கூட அந்த வாக்குறுதியை வழங்கியிருக்கிறது.
அதன்படி அநீதிக்குட்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நீதியை நிலைநாட்டியே ஆகவேண்டும். அந்த நீதி வழங்கும் செயற்பாட்டிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் விலகி நிற்கமுடியாது
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வழங்கும் விடயத்தில் எதுவும் நடக்காது போன்றே தெரிகின்றது.
மக்கள் தொடர்ந்து ஏமாற்றத்துடனேயே போராடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் மக்களுக்கு நீதியை வழங்கவேண்டிய அரசாங்கம் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சவால்களை சமாளிப்பதற்கு வியூகம் அமைத்துக்கொண்டிருக்கின்றது.
இதன் முக்கிய விளைவாக வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் மறக்கடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இல்லை. அந்த மக்களே மறக்கடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என்று கூறலாம்.
பாதிக்கப்பட்ட மக்கள் ஏக்கங்கள், ஏமாற்றங்கள், மற்றும் வேதனையுடன் நீதிக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய நீதியானது தூரமாகிக்கொண்டே போகின்றதே தவிர நீதியானது மக்களை நெருங்கிவருவதாக எந்தவொரு சமிக்ஞையும் தெரியவில்லை.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கவேண்டிய பாரிய பொறுப்பைக் கொண்டிருக்கின்றது. மக்களுக்கு நீதிவழங்குவோம் என நாட்டுக்கு உறுதி வழங்கியிருக்கிறது.
ஏன் சர்வதேசத்திற்குக் கூட அந்த வாக்குறுதியை வழங்கியிருக்கிறது. அதன்படி அநீதிக்குட்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நீதியை நிலைநாட்டியே ஆகவேண்டும். அந்த நீதி வழங்கும் செயற்பாட்டிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் விலகி நிற்கமுடியாது.
ஆனால் அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பார்க்கும்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிவழங்கும் செயற்பாட்டிலிருந்து எங்கே விலகி நிற்கின்றதோ, அல்லது தூரப் போகின்றதோ என்ற சந்தேகம் ஏற்படுவதை தவிர்க்க முடியாதிருக்கின்றது.
குறிப்பாக தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள சலசலப்புகள் அவற்றை தீர்த்து வைப்பதற்காக முன்னெடுக்கப்படும் நகர்வுகள், அவற்றை எதிர்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் காய்நகர்த்தல்கள் என்பன பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை தாமதித்துக்கொண்டிருக்கின்றன.
அதற்கான சந்தர்ப்பத்தை அழித்துக்கொண்டிருக்கின்றன.
இவ்வாறான நிலைமையே தற்போது தொடர்ந்து நீடித்துக்கொண்டிருக்கின்றது. தென்னிலங்கை அரசியலில் தற்போது ஒரு வகையான சலசலப்பு ஏற்பட்டுள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது.
நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற இரு பிரதான அரசியல் கட்சிகளும் இந்த அரசியல் சலசலப்பை சமாளிப்பதற்காக பல்வேறு வியூகங்களை அமைத்துக்கொண்டிருக்கின்றன.
இரு துருவங்களிலிருந்து செயற்படும் ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்து அதனைக் கொண்டுசெல்வது என்பது இலகுவான விடயமல்ல. அதுமிகவும் சவாலுக்குரிய மற்றும் சிக்கல்களுக்கு உட்பட்டுள்ள ஒரு விடயதானமாகும்.
இவ்வாறான அரசியல் பின்னணிகளுக்குள் பாதிக்கப்பட்ட மக்கள் சிக்கித் தவிக்கின்றனர் என்பதே உண்மையாகும். ஆனால் இவ்வாறான தென்னிலங்கையின் சலசலப்புக்களை முன்னிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களின் நீதியை மறுதலிப்பதற்கு எந்தவொரு தரப்பும் முயற்சிக்கக்கூடாது.
கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததும் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் தமக்கு ஏதோ ஒரு வழியில் நீதி நிலைநாட்டப்படும் என நம்பியிருந்தனர். இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமானதொரு திருப்புமுனையாக காணப்பட்ட அந்த சந்தர்ப்பத்தில் அந்த மக்களுக்கு எதிர்பார்ப்புக்கள் அதிகம் இருந்தாலும் இறுதியில் ஏமாற்றமே சொந்தமாகியது.
உள்நாட்டில் ஒரு விசாரணைப்பொறிமுறையை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களின் குறைதீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் எதுவுமே நடக்கவில்லை. கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு நியமிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சமூகத்தின் செல்வாக்கு மிகுந்தவர்களின் சாட்சியங்கள் பெறப்பட்டபோதிலும் அவற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த விமோசனமும் கிடைக்கவில்லை.
பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களாகவே இருந்தனர். இந்நிலையில் இலங்கை அரசாங்கம் தன்னிச்சையாக எதனையும் செய்யாது என்று தெரிந்துகொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அநீதிக்குட்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டவேண்டும் என்ற நோக்கில் 2012 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பான ஒரு பிரேரணையை நிறைவேற்றியது.
அந்தப் பிரேரணையில் உள்நாட்டில் ஒரு பொறிமுறை முன்னெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படவேண்டுமென பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன. ஆனால் அந்த பிரேரணை முழுமையாக அப்போதைய அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டது.
தொடர்ந்தும் 2013ஆம் ஆண்டும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் மற்றுமொரு பிரேரணை முன்வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 2012ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு ஒப்பானதாகவே இந்தப் பிரேரணையும் அமைந்தது.
ஆனால் அதனையும் அப்போதைய அரசாங்கம் முழுமையாக நிராகரித்துவிட்டது.
தொடர்ந்து பொறுமை இழந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை 2014 ஆம் ஆண்டு மற்றுமொரு பிரேரணையை நிறைவேற்றியது.
அதில் இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கியநாடுகள் மனித உரிமை அலுவலகம் விசாரணை நடத்தவேண்டுமென பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
எனினும் அந்தப் பிரேரணையையும் அப்போதைய அரசாங்கம் நிராகரித்தது. ஆனால் ஐக்கியநாடுகள் மனித உரிமை அலுவலகம் அந்த விசாரணையை சர்வதேசத்திலிருந்தவாறே நடத்தியது.
2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆகும்போது இலங்கை தொடர்பான ஐ.நா.வின் விசாரணை முடிவுக்கு வந்திருந்தது. தொடர்ந்து ஐ.நா.வுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டுவந்தன. அந்த நேரத்தில் இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்படும் சூழல் உருவாகியது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்குமிடையில் புதுவிதமான உறவு கட்டியெழுப்பப்பட்டது. அதாவது ஒரு புரிந்துணர்வுடன் கூடிய நல்லுறவு இலங்கைக்கும் ஐ.நா.வுக்குமிடையில் கட்டியெழுப்பப்பட்டது என்று கூறலாம்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளகப் பொறிமுறையின் அடிப்படையில் விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்டுவதாக வாக்குறுதி வழங்கிவிட்டு புதிய அரசாங்கம் ஆட்சிக்கும் வந்தது.
இதனிடையில் 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஐ.நா. அலுவலகம் இலங்கை குறித்த விசாரணை அறிக்கையை வெளியிட்டது. அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதற்காக விசாரணை பொறிமுறையை முன்னெடுக்க கலப்பு நீதிமன்றம் பயன்படுத்தப்படவேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டது.
அதனை இலங்கையின் புதிய அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டியது. இதற்கிடையில் 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற 30ஆவது ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் இலங்கை தொடர்பாக மற்றுமொரு பிரேரணையை சமர்ப்பித்தன.
அதில் கலப்பு நீதிமன்றத்திற்கு பதிலாக சர்வதேச நீதிபதிகளுடன் கூடிய விசாரணை பொறிமுறை முன்னெடுக்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டது.
அந்த பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. அத்துடன் அப்போது இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு ஒரு வாக்குறுதியையும் வழங்கியது.
அதாவது உண்மை, நீதி, நஷ்டஈடு, மீள்நிகழாமை ஆகிய நான்கு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதாக இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கும் ஐக்கியநாடுகள் சபைக்கும் வாக்குறுதி அளித்தது.
எனினும் 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்ட காலத்திலிருந்து 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கக்கூடிய வகையில் பெரிதாக எதனையும் செய்யவில்லை.
2016ஆம் ஆண்டு காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்த இடைப்பட்ட காலமானது பாதிக்கப்பட்ட மக்கள் விடயத்தில் முன்னேற்றமின்றியே காணப்பட்டது.
தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத் தொடரில் அமெரிக்காவினால் மற்றுமொரு பிரேரணை கொண்டுவரப்பட்டது.
அதாவது 2015 ஆம் ஆண்டு கொண்டுவந்த பிரேரணையை அமுல்படுத்துவதற்கு மேலும் இரு வருடகால அவகாசத்தை வழங்கும் வகையில் புதிய பிரேரணை 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
அந்த இடத்தில்தான் தமிழ் மக்களுக்கு தமக்கான நீதி கிடைக்காமல் போய்விடுமோ என்ற சந்தேகம் மற்றும் ஏமாற்றம் ஏற்பட ஆரம்பித்தது.
அதாவது தமது பிரச்சினையை காலத்தை இழுத்தடிக்கும் ஒரு கருவியாக மட்டுமே அரசாங்கமும் சர்வதேசமும் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனவா என்ற நியாயமான சந்தேகம் மக்கள் மத்தியில் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதமே ஏற்பட்டது.
ஏனெனில் கடந்த இரு வருடகாலத்தில் பெரிதாக எதனையும் முன்னெடுக்காத அரசாங்கத்தை கிட்டத்தட்ட பாராட்டும் வகையிலேயே சர்வதேசம் கால அவகாசத்தை வழங்கியது.
சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இந்த விடயத்தில் கடும் எதிர்ப்புக்களை வெளியிட்ட போதிலும் அதிகாரத்தில் உள்ள நாடுகள் அவற்றைக் கவனத்தில்கொள்ளவில்லை.
எனினும் பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் இந்த இரு வருட கால அவகாசத்திலும் அரசாங்கம் எதனையும் செய்யப்போவதில்லை என்ற நிலைப்பாடே காணப்பட்டது.
அதனால் பாதிக்கப்பட்ட மக்களும் இதனை விமர்சித்தனர். இந்தப் பின்னணியிலேயே தற்போதைய சூழல் உருவாகியிருக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் சொல்லொணாத் துன்பங்களை எதிர்கொண்டு வாழ்க்கையை நடத்துகின்றனர்.
குறிப்பாக காணாமல்போனோர் விவகாரம், காணிகள் மீள்வழங்கப்படாமை, அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமை, நஷ்டஈடு செயற்பாடு முன்னெடுக்கப்படாமை, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்படாமை, அரசியல்தீர்வு முன்வைக்கப்படாமை போன்ற பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் நீண்டுகொண்டே செல்கின்றன.
அரசாங்கம் இந்த விடயத்தில் தொடர்ந்தும் இழுத்தடிப்புக்களை மேற்கொள்வதற்கும் மௌனமாக இருப்பதற்குமே முயற்சிப்பதாகவே தெரிகிறது. காரணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிவழங்கும் செயற்பாட்டை ஆழமான முறையில் முன்னெடுத்தால் எங்கே தமது அரசாங்கத்திற்கான இருப்பு ஆட்டம் கண்டுவிடுமா என்று அரசாங்கம் சிந்திப்பதை காணமுடிகின்றது.
அதற்கு ஏற்றாற்போல் தென்னிலங்கையின் கடும்போக்குவாதிகளும் பல்வேறு அரசியல் காய்நகர்த்தல்களை முன்னெடுத்து வருகின்றனர். அதனை சமாளிப்பதற்கே அரசாங்கம் பாரிய சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கின்றது.
எவ்வாறெனினும் இந்த விடயங்களை காரணம் காட்டி பாதிக்கப்பட்ட மக்க ளுக்கான நீதிவழங்கும் செயற்பாட்டை எந்தவொரு தரப்பும் மறுத்து செயற்பட முடியாது.
மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றத்துடனேயே இருக்கின்றனர். கடந்த 8 வருடங்க ளாக நீதி கிடைக்காமல் காத்திருந்த மக்கள் தற்போது பொறுமையிழந்து வீதிக்கு இறங்க ஆரம்பித்து விட்டனர்.
எனவே உலக நாடுகளும் அரசாங்கமும் ஐக்கியநாடுகள் சபையும் இந்த விடயத்தில் பொறுப்புடன் செயற்படவேண்டிய தேவை காணப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களை விரக்தியின் விளிம்பிற்கு கொண்டு செல்ல வேண்டாம்.
இதுபோன்ற நிலைமைகளை கொண்டிருந்த உலக நாடுகளில் நீதிவழங்கும் செயற்பாடுகள் பாரிய வெற்றி அடைந்ததாக கூறமுடியாது. ஆனால் நீதி வழங்கும் செயற்பாட்டில் வெற்றியடைந்தமைக்கு நியாயம் கற்பிக்கும் நாடாக தென்னாபிரிக்கா இருக்கிறது.
எனினும் அவ்வாறான காரணங்களைக் கொண்டு இலங்கையில் பாதிக்க ப்பட்ட மக்களை அந்தரத்தில் விடமுடியாது. இந்த விடயத்தில் அரசா ங்கத்திற்கு சவால்கள் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்கிறோம். அந்த சவா ல்களை காரணம் காட்டி பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுடன் விளை யாடக்கூடாது.
எனவே அரசாங்கம் விரைந்து செயற்பட்டு முடங்கிப்போய் காணப்படும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டை அவசரப்படுத்தி மக்களுக்கு நீதியை நிலை நாட்ட முன்வரவேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தில் அவசரத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிக்காட்டும் என மக்கள் இன்னும் நம்புகின்றனர். ஏதோவொரு வகையில் மக்கள் நம்புகின்றனர். அந்த நம்பிக்கையை சிதறிடிக்க வேண்டாம்.
ரொபட் அன்டனி









