Breaking News

அமைச்சர்களை நீக்க விக்கிக்கு அதிகாரமில்லை-சுமந்திரன் தரப்பு நீதிமன்றில் வாதம்

13 ஆம் திருத்த சட்டத்தின் பிரகாரம் வட மாகாண
சபைக்கு இருக்கும் அற்பசொற்ப அதிகாரத்தையும் இல்லாமல் செய்யும் கைங்கரியம் ஒன்றை சிறிலங்காவின் நீதிமன்றம் ஊடாக செய்யும் கடும் பிரயத்தனம் ஒன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரனின் கனிஷ்ட சட்டத்தரணி நிரான் அங்கிட்டெல் மேற்கொண்டுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் ஊடாக மேற்கொள்ளப்பட்ட இந்த சதி முயற்சி பற்றிய தகவல்கள் தமிழ்கிங்டொத்திடம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . தமிழ் அரசியல்வாதிகள், தேசியவாதிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தையும் , சந்தேகத்தையும், சினத்தினையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,

முன்னைய அமைச்சர் டெனீஸ்வரன் அவர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்மறையீட்டு நீதிமன்றம் அண்மையில் பூர்வாங்கப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது. திரு.டெனீஸ்வரன் சார்பில் சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோவும் முதலாம் எதிர்மனு தாரரான முதலமைச்சர் விக்னேஸ்வரன் சார்பில் ஜனாதிபதி சிரேஷ்ட சட்டத்தரணி கனக ஈஸ்வரன் ஆஜராகினார். முன்னால் அமைச்சர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் சார்பில் சட்டத்தரணி நிரான் அங்கிட்டெல் தெரிபட்டார்.

எதிர் மனுத்தாரர்களுக்கு நோட்டீஸ் பிறப்பிப்பதா என்றும் இடைக்காலத் தடைக்கட்டளை ஒன்றை விதிப்பதா என்பது பற்றியும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆராயப்பட்டது. அப்போது முன்னாள் அமைச்சர் சத்தியலிங்கம் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி நிரான் அங்கிட்டெல் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரமும், அமைச்சர்களை பதவியில் இருந்து விலக்கும் அதிகாரமும் ஆளுநரிடமே இருப்பதாகவும் முதலமைச்சருக்கு அவ்வாறான அதிகாரம் எதுவும் இல்லை என்றும் வாதாடினார். 

சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோவும் அதனையே கூறி முதலமைச்சருக்கு இவ்வாறான அதிகாரங்கள் எவையும் சட்டப்படி கொடுக்கப்படவில்லை என்றும் கூறினார். ஆகவே தனது கட்சிக்காரரான முன்னைய அமைச்சர் டெனீஸ்வரன் அவர்களைப் பதவியில் இருந்து நீக்க முதல்வருக்கு உரித்தில்லை என்று கூறினார்.

முதலமைச்சர் சார்பில் தெரிபட்ட சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி திரு.கனக ஈஸ்வரன் 13வது திருத்தச்சட்டம் அரசியல் யாப்பின் ஒரு பகுதி என்றும் அரசியல் யாப்பின் ஏற்பாடுகளை அலசி ஆராய்வதென்றால் அது உச்ச நீதிமன்றத்தாலேயே முடியும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அந்த உரித்து இல்லை என்றும் வாதாடினார். 

அத்துடன் முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஆளுநர் புதிய அமைச்சர்களை நியமித்ததில் இருந்து மேற்படி சட்டத்தரணிகளின் வாதானது அடிப்படைத் தன்மை எதுவும் இல்லாததாகி விட்டது என்றும் கூறினார். 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு போதிய அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கலாம் என்பவர்களே தற்போது முதலமைச்சருக்கு அதிகாரமில்லை ஆளுநருக்கே அதிகாரம் உண்டு என்று வாதாடுகின்றார்கள். 

சட்டத்தரணி நிரான் அங்கிட்டெல் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனின் கனிஷ்ட சட்டத்தரணி என்பது குறிப்பிடத்தக்கது. நோட்டீஸ் பிறப்பிப்பதா இடைக்கால தடை விதிப்பதா என்பது குறித்து தமது முடிவை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒக்டோபர் மாதம் 03ம் திகதி அறிவிக்கும் என்று கூறி வழக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.