வடக்கு ஸ்தம்பிதம் ஹர்த்தால் காரணமாக இயல்பு நிலை முற்றாக பாதிப்பு
(எம்.நியூட்டன்,கே.குமணன்,கரைச்சி, கண்டாவளை,ஓமந்தை,வவுனியா, தலைமன்னார் நிருபர்கள்)
அநுராதபுரம் சிறைச்சாலையில் தொ டர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கை திகளின் கோரிக்கைகள் நிறைவேற்ற ப்பட வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நாடளாவிய சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுக்கப்படவேண்டும் ஆகிய கோரிக்கைகளை அழுத்தமாக வலியுறுத்தி வடக்கில் நேற்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. வடமாகாணத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், மத அமைப்புக்கள் உட்பட சகல தரப்பினரும் எவ்வித பேதமின்றி வழங்கிய முழுமையான ஒத்துழைப்பால் வடமாகாணம் நேற்று வெள்ளிக்கிழமை ஸ்தம்பித்தது.
முன்னதாக அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நேற்று வடமாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் வடக்கில் அரசியல் கட்சிகள் உட்பட 19 அமைப்புக்களும்
வவுனியா மாவட்டத்தினைச் சேர்ந்த 17அமைப்புக்களும் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம், வடமாகாண காணமல்போனோரின் உறவினர்களின் ஒன்றியம், வடமாகாண த்தின் ஐந்து மாவட்டங்களின் பிரஜைகள் குழுக்கள்,
தனியார் போக்குவரத்து சங்கங்கள், கமநல அமைப்புக்கள், ஐந்து மாவட்டங்களின் தமிழ், முஸ்லிம் வர்த்தக சமூகத்தினர், மீனவ அமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவை வழங்குவதாக அறிவித்திருந்தனர்.
யாழ்.மாவட்டம்
இந்நிலையில் அதிகாலை முதலே பரபரப்பாகும் யாழ்.நகரம், உள்ளிட்ட யாழ்.மாவட்டத்தின் பிரதான நகரங்கள் அனைத்தும் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே ஆள்நடமாட்டம் அற்ற நிலையில் வெறிச்சோடிக் காணப்பட்டன.
யாழ்.மாவட்டத்தின் வடமாராட்சி, தென்மராட்சி, தீவகம் ஆகியவ ற்றின் முக்கிய நகரங்களில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.
யாழ்.மாவட்டத்தில் பிரதான சந்தைகளும் இயங்கியிருக்கவில்லை.
யாழிற்குள் பிரவேசிக்கும் நெடுந்தூர பயணிகள் பஸ் வண்டிகள் மட்டுமே சேவையில் ஈடுபட்டன. யாழிலிருந்து ஏனைய பகுதிகளுக்கோ அல்லது வெளிமாவட்டங்களுக்கோ எந்தவொரு அரச, தனியார் போக்குவரத்து சேவைகளும் இடம்பெற்றிருக்கவில்லை.
பாடசாலைகளில் பல மூடப்பட்டிருந்த நிலையில் சில கிராமப்புற பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவாக இருந்தது. எனினும் நண்பகலாகின்ற போது அனைத்து பாடசாலைகளும் முழுமையாக மூடப்பட்டிருந்தன.
அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மருந்தகங்கள் பகுதியளவில் மாத்திரம் இயங்கியதோடு எரிபொருள் நிரப்பு நிலையங்கள், உணவங்கள் உள்ளிட்ட எவையும் திறக்கப்பட்டிருக்கவில்லை.
மாவட்ட, பிரதேச செயலகங்கள், அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் உள்ளிட்டவற்றின் பிரதான வாயில்கள் அனைத்தும் பூட்டப்பட்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களினால் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.
இதேநேரம் யாழ்.மாவட்டத்தின் கரையோரக் கிரமங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்திருந்ததோடு சந்தைப்படுத்தல் செயற்பாடுகளையும் புறக்கணித்திருந்தனர்.
யாழ்.மாவட்டத்தின் நகரப்பகுதிகளிலும் ஏனைய பகுதிகளிலும் உள்ள முஸ்லிம் வியாபார நிறுவனங்களும் மூடப்பட்டு பூரண ஹர்த்தாலை அனுஸ்டிப்பதற்கு ஆதரவு வழங்கப்பட்டிருந்து.
கிளிநொச்சி மாவட்டம்
வடக்கின் பூரண ஹர்த்தாலுக்கு கிளிநொச்சி மாவட்டமும் பூரண ஒத்துழைப்பை நல்கியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான சந்தை தொகுதி, வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட எவையும் இயங்காதிருந்தன.
குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஊடான போக்குவரத்துகளும் நடைபெறாது முழுமையாக ஸ்தம்பிதமடைந்த நிலைமை காணப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பொது அமைப்புக்கள் அனைத்து தரப்பினரிடத்திலும் ஹர்த்தாலுக்கான ஆதரவைக் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்டம்
வவுனியாவிலும் பூரண கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. நகரில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததோடு பாடசாலைகள், அரச அலுவலகங்கள், வங்கிகள் போன்றவற்றின் பணிகளும் முழுமையாக பாதிப்படைந்திருந்தன.
யாழ். உட்பட வவுனியாவிலிருந்து வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுக்கு செல்லும் அரச, தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாத காரணத்தினால் பயணிகள் சிரமங்களுக்கு உள்ளாகியிருந்தனர். ஆயினும் வவுனியாவில் இருந்து நாட்டின் தென்பகுதிகளுக்கான சேவைகள் இடம்பெற்றன.
இதேவேளை தமிழ் விருட்சம் அமைப்பினர் அந்தணர் ஒன்றியத்துடன் இணைந்து அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியா குட்செட் வீதி கருமாரியம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் விடுதலையை வலியுறுத்தியும் வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காணமல்போனவர்களின் உறவினர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
குறித்த உண்ணாவிரதப்போராட்டமானது காலை முதல் மாலை நான்கு மணி வரையில் அந்த உறவுகளால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு மாவட்டம்
19ஆவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும், முன்னெடுக்கபட்ட ஹர்த்தாலுக்கு முல்லைத்தீவு மாவட்டமும் பூரணமாக ஒத்துழைப்பை வழங்கியதால் அம்மாவட்டத்தின் அனைத்தச் செயற்பாடுகளும் முடங்கியது.
முல்லைத்தீவு மாவட்டம்
தழுவிய ரீதியில் முழுமையான கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அரச ,தனியார் போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டு முழுமையான ஆதரவு வழங்கப்பட்டது.
முல்லைத்தீவு நகரம், முள்ளியவளை,புதுக்குடியிருப்புஒட்டிசுட்டான், மாங்குளம்,மல்லாவி துணுக்காய் விசுவமடு,பாண்டியன்குளம் போன்ற பிரதேசங்களில் வணிக நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டு போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை என்பனவும் சேவைகளை இடைநிறுத்தி ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியிருந்தன.
மன்னார் மாவட்டம்
அரசியல் கைதிகளுக்கான பூரண ஹர்த்தால் மன்னார் மாவட்டத்திலும் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் காரணமாக மன்னார் பகுதியில் ஒரு சில உணவகங்கள் தவிர்ந்த பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு காணப்பட்டன. பாடசாலை மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்லாததினதால் பாசாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
அத்துடன் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை போக்குவரத்துச் சேவையும் ஸ்தம்பித நிலையை அடைந்திருந்தன.
காலையில் மன்னாரிலிருந்து கொழும்புக்கு சென்ற இ.போ.ச பஸ் வண்டி ஒன்று தாக்குதலுக்கு உள்ளா ன சம்பவம் மன்னனாரில் இடம் பெற்றதாகதத் தெரிவிக்கப்படுகின்ற போதும் அது தொடர்பான முறைப்பாடுகள் எவையும் பதிவாகவில்லை.
அரச திணைக்களங்கள் வழமைப் போன்று இயங்கியபோதும் பொது மக்கள் எவரும்அரச சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சென்றிருக்கவில்லை. கடற்தொழிலாளர்கள், அன்றாடம் கூலிக்குச் செல்பவர்களும் வீட்டுடன் முட ங்கியிருந்தனர்.
அழைப்பு விடுத்த அமைப்புக்கள் நன்றி
வடமாகாணத்தின் அனைத்து தரப்பி னரின் பூரணமான ஒத்துழைப்புக்களுடன் அரசியல் கைதிகளுக்கான பூரண ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது.
இதற்காக தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்த அனைத்து தரப்பினரும் கூட்டாக அறிவித்துள்ளனர்.
மீண்டும் ஆரம்பமான போக்குவரத்து சேவைகள்
இதேவேளை ஹர்த்தாலை யடுத்து நேற்று இரவு முதல் வடமாகாணத்திலிருந்து வௌிமாவட்டங்களுக்கு செல்லும் போக்குவரத்து சேவைகள் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்த க்கது.








