Breaking News

விக்னேஸ்வரன் ஒத்துழைக்கவில்லை- அமெரிக்காவில் சுமந்திரன்

முதலமைச்சர் விக்னேஸ்வரனை மாற்றி வேறு மிதவாத தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டிய அவசியம் குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் அமெரிக்காவில் கூறியதாக அறிய முடிகின்றது.


விக்னேஸ்வரன் கடும்போக்கு நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதால் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் அடுத்து நடைபெறவுள்ள வடமாகாண மாகாண சபைத் தேர்தலில் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட அனுமதிக்க முடியாது எனவும் சுமந்திரன் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

நாடாளுமன்றக் குழுவுடன் அமெரிக்காவுக்குச் சென்ற சுமந்திரன், அங்கு அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகளை சந்தித்து சமகால அரசியல் செயற்பாடுகள் குறித்து உரையாடும்போது இவ்வாறு தெரிவித்தார் என்று அங்குள்ள தகவல்கள் கூறுவதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்துடன் ஒத்துழைத்து பணியாற்றக்கூடிய முறையில் வடமாகாண முதைலமைச்சர் செயற்பட வேண்டும் என்றும் அதற்கேற்ப அமெரிக்கா ஒத்துழைப்பு வழக்க வேண்டும் எனவும் சுமந்திரன் கேட்டுக் கொண்டதாக அறிய முடிகின்றது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, விஜித ஹேரத், ரவீந்திர சமவீர, உள்ளிட்ட ஆறுபேர் அடங்கிய குழு ஒருவாரகால பயணம் ஒன்றை மேற்கொண்டு அமெரிக்கா சென்றிருந்தது. இந்த குழுவுடன் சுமந்திரனும் சென்றிருந்தார். கடந்த மாதம் 29 ஆம் திகதி வரை அங்கு நின்ற குழுவினர் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்திட்டங்கள், குறிப்பாக புதிய அரசியல் யாப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக விளக்கமளித்துள்ளதாக ஐ.பி.சி. தமிழ் செய்தியாளர் கூறினார்.

இதேவேளை வொஷிங்டனில் சந்திப்புக்களை முடித்துக் கொண்டு நியூயோர்க் சென்றுள்ள சுமந்திரன் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட இராஜதந்திரிகளை சந்தித்து வருவதாகவும் அங்குள்ள தகவல்கள் கூறுவதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார். சுமந்திரன் எதிர்வரும் ஆறாம் திகதி கொழும்புக்கு திரும்பவுள்ளார்.

அதேவேளை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் முன்னாள் நிதியரசர் ஸ்ரீபவன், தற்போதைய அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோரில் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நியமிப்பது குறித்து ஆலோசிப்பதாக தமிழரசுக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.