மாநகர, நகர, பிரதேச திருத்தச்சட்டங்களில் சபாநாயகர் கரு ஜயசூரிய கைச்சாத்து
திகதியை தீர்மானிக்க அடுத்தவாரம் கூடுகின்றது ஆணைக்குழு
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுடன் தொடர்புடைய மாநகரசபை, நகர சபை, பிரதேச சபை ஆகியவற்றுக்கான தேர்தல் திருத்தச் சட்டங்களில் சபாநாயகர் கரு ஜயசூரிய கைச்சாத்திட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய மேற்கண்ட சட்டங்களில் கையொப்பம் இட்டார். சபாநாயகர் கையொப்பம் இட்டவேளையில் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் பாராளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பிரசன்னமாகியிருந்தனர்.
கடந்த திங்கட் கிழமை நடைபெற்ற விசேட பாராளுமன்ற அமர்வின் போது மாநாகர, நகர, மற்றும் பிரதேச சபைகளுக்கான தேர்தல் திருத்தச்சட்டங்கள் திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டிருந்தன.
குறித்த கையொப்பம் இடும் நிகழ்வினை அடுத்து சபாநாயகர் கருஜயசூரிய ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுகையில்,
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் சட்டங்கள் திருத்தப்பட்டமை இலங்கை அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சந்தர்ப்பமாகும்.
உள்ளுாராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்குரிய எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளுராட்சி மன்றங்களுக்கான பெண்கள் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மாநகர, நகர, பிரதேச சபைகளுக்கான சட்டங்கள் நிறைவேற்றப்படுவதோடு உள்ளுாராட்சி தேர்தலை நடத்துவதில் காணப்பட்ட சகல தடைகளும் நீங்கியுள்ளன.
இந்த சட்டங்களில் கையெழுத்திட முன்னர் நான் தேர்தல் ஆணைக்குழு தலைவருடனும் எல்லை நிர்ணய தலைவருடனும் கலந்துரையாடினேன்.
அடுத்த ஜனவரியில் தேர்தல் நடத்துவதற்கான சந்தர்ப்பம் இருப்பதாக அவர்கள் எனக்கு தெரிவித்துள்ளார்கள் என்றார்
இதேவேளை இங்கு கருத்து வௌியிட்ட மாகாண சபைகள் உள்ளுாராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா, தேர்தல் முறையை மாற்றுதல், விருப்பு வாக்கு முறையை மாற்றுதல் என்பன இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் பாரிய மாற்றங்களாகும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேர்தல்கள் முறைமை மாற்றம் தொடர்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகளினால் எனக்கும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.
தேர்தல் சட்ட திருத்தத்திற்கு அமைவாக உள்ளுாராட்சி சபை உறுப்பினர்களின் தொகையை மாற்ற எதிர்பார்க்கிறோம். உள்ளுாராட்சி தேர்தலை ஜனவரி மாதத்திலும் மாகாண சபை தேர்தலை மார்ச் மாதத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்த சட்டத்துடன் தொடர்புள்ள குறிப்பாக உறுப்பினர் தொகை போன்ற விடயங்கள் தொடர்பாக நாளை(இன்று) வௌ்ளிகிழமை தேர்தல் ஆணைக்குழு தலைவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன்.
தேர்தலில் முழுக் குடும்பமும் போட்டியிடும் நிலை மாற வேண்டும். அரசியிலில் ஈடுபட்டுள்ளவர்களின் குடும்பத்தினரே அதிகமாக தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டும்.
குடும்பத்திற்கு ஒருவர் என்ற தொனிப் பொருளின் கீழ் அரசியல் நடத்த வேண்டும். நாட்டில் 22 மில்லியன் பேர் உள்ளனர். இதிலிருந்து தகுதியானவர்களை தெரிவு செய்ய முடியும்.
குடும்ப அரசியலுக்குப் பதிலாக கிராம சங்கங்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
தற்பொழுது 23 மாநகர சபைகள் இருக்கின்றன. அம்பகமுவ நுவரெலியா பிரதேச சபைகளின் அளவுக்கேற்ப பிரதேச சபைகளாக அதனை பிரிக்க இருக்கிறோம்.
அவ்விடயம் தொடர்பில் மலையக கட்சிகள் முன்வைத்துள்ள யோசனை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
திகதியை அறிவிக்க தயார்
இதேவேளை உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திருத்தச்சட்டங்கள் தொடர்பில் இறுதித் தடையாகவிருந்த மாநகர, நகர, பிரதேச சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமான அறிவித்தல் வௌி வந்தவுடன் தாமதமின்றி தேர்தலுக்கான திகதி அறிவிப்பைச் செய்ய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவி த்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் தரப்பினருடன் இன்றைய தினம் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ள அமைச்சர் பைசர் முஸ்தாபா அதனையடுத்து தாமத மின்றி வர்த்தமானி அறிவித்தலை வௌியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அடுத்தவாரம் தேர்தல் ஆணைக்குழு கூடவுள்ளதாக தெரியவரு கின்றது.








