Breaking News

மோசடிக்காரருக்கு ஆதரவாக ஆஜரானாரா சுமந்திரன்?(காணொளி)

முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணைகளை
மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் நேற்று (20) ஆஜராகியிருந்தார்.

மத்திய வங்கி முறிகள் கொடுக்கல் வாங்கலின் போது இடம்பெற்ற பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைக்கப்பட்டிருந்தார்.

பிரதமர் ஆணைக்குழுவில் பிரச்சனமான போது பல அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தனர்.

இவர்களில் பல தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளையும் காண முடிந்தது.

இந்தப் பின்புலத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவுகள் ஆரம்பமான போது, மத்திய வங்கியின் ஊழியரான எஸ். பதுமநாபன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆணைக்குழுவில் விசேட வாதம் ஒன்றை முன்வைத்தார்.

தமது சேவை பெறுநரான பதுமநாபன் சார்பில் சாட்சியங்களை நெறிப்படுத்த தான் எழுத்து மூலம் அனுமதி கோரியும் அதற்கு அனுமதி கிடைக்கவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு எதிராக சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதன்போது அரசாங்கத்தின் சிரேஷ்ட சொலிசிட்டர் ஜெனரல் தப்புல டி லிவேரா கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார்.

எம்.ஏ. சுமந்திரன் எட்டாவது பாராளுமன்ற கோப் குழுவில் அங்கத்தவர் என்ற வகையில், அவருக்கு இந்த விவகாரம் தொடர்பில் ஆஜராக முடியாது எனவும் அதனை தாம் எதிர்ப்பதாகவும் சிரேஷ்ட சொலிசிட்டர் ஜெனரல் தப்புல டி லிவேரா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இதற்கு முன்னரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து காய் நகர்த்திய பல சம்பவங்கள் பதிவாகியிருந்தன.


பிரதமர் உள்ளிட்ட குழுவினர் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி வடமராட்சி பருத்தித்துறை – துறைமுக பகுதிக்கு விஜயம் செய்திருந்தனர்.

அதனையடுத்து, வடமராட்சி – குடத்தனை பகுதியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் வீட்டிற்கும் பிரதமர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.