மழை கைகொடுத்தபோதிலும் 172 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்தியா

காரணம் நேற்றும் போட்டி ஆரம்பமாகி சிறிது நேரத்தில் 2 விக்கெட்டுக்களை இழந்து இந்திய அணி திணற மழை குறுக்கிட்டு போட்டியை நிறுத்தி விட்டது.
முதல் நாளில் சுரங்க லக்மால் வேகத்தில் மிரட்டியதுபோல நேற்றைய போட்டியில் தசுன் சானக்க அசத்தினார்.
இலங்கை – இந்திய அணிகளுக்கிடையில் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் நேற்றைய 2ஆ-வது நாள் ஆட்டத்தின் பெரும்பகுதியும் மழையால் தடைப்பட்டது. 21 ஓவர்களே வீசப்பட்டன.
நேற்றுமுன்தினம் தொடங்கிய இந்த போட்டியில் இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று களத்தடுப்பை தேர்வு செய்தார்.
மழைக்காரணமாக மதியம் 1.30 மணிக்குத்தான் ஆட்டம் தொடங்கியது, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லக்மாலின் அபார பந்து வீச்சால் லோகேஷ் ராகுல் (0), தவான் (8), கோஹ்லி (0) ஆகியோரை வீழ்த்தி அசத்தினார்.
இதனால் இந்திய அணி 11.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 17 ஓட்டங்களை எடுத்திருக்கும்போது மீண்டும் மழை குறுக்கிட்டது.
இதனால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடித்துவைக்கப்பட்டது, புஜாரா, ரஹானே களத்தில் இருந்தனர். சுரங்க லக்மால் 6 ஓவர்களில் ஓட்டமேதும் விட்டுக்கொடுக்காமல் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது.
காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி 15 நிமிடம் முன்னதாக 9.15-க்கே தொடங்கியது. நேற்றைய போட்டியில் 98 ஓவர்கள் வீச முடிவு செய்யப்பட்டது.
புஜாரா, ரஹானே ஆட்டத்தை தொடர்ந்தனர்.
ரஹானே 4 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அஷ்வின் 4 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினார். ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் புஜாரா நம்பிக்கையுடன் விளையாடினார்.
6ஆ-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் சஹா ஜோடி சேர்ந்தார்.
இந்தியா 32.5 ஓவர்களில் 74 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டு உணவு இடைவேளை விடப்பட்டது. அதன்பின்பும் மழை தொடர்ந்து பெய்தது.
பின்னர் மழை விட்டாலும் பவுண்டரி லைன் அருகே ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் 2ஆ-வது நாள் ஆட்டம் அத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டது. 2ஆ-வது நாளில்இந்தியா 21 ஓவர்கள் மட்டுமே விளையாடியது.
புஜாரா (47), சஹா (6) களத்தில் உள்ளனர்.
லக்மால் 11 ஓவர்கள் வீசி 5 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். 9 ஓவர்கள் ஓட்டமற்ற ஓவர்களாக வீசியுள்ளார்.
நேற்றைய இரண்டு விக்கெட்டுக்களையும் இலங்கையின் மற் றொரு வேகப்பந்து வீச்சாளரான தசுன் சானக்க வீழ்த்தினார்.
இந்நிலையில் 75 ஓட்டங்களுடன் இன்றைய 3 ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி மிகுதி 5 விக்கெட்டுகளையும் 100 ஓட்டங்களைப் பெறுவதற்குள் இழந்து 172 ஓட்டங்களை பெறுவதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி சார்பாக புஜாரா மாத்திரம் 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக சுரங்க லக்மால் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.