அமைச்சர் மனோவிடம் பிறந்தநாள் பரிசு வேண்டுமாம் - பிரதமர் ரணில் !

அமைச்சர் மனோ கணேசனின் பிறந்த தினம் நேற்று முன்தினமாகும். அன்று காலை மனோ கணேசனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் தனக்கு பிறந்த நாள் பரிசு வழங்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான சம்மதத்தை பிறந்த நாள் பரிசாக வழங்கு மாறு பிரதமர் கோரியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கையை அடுத்து நேற்று முன் தினம் இரவு அமைச்சர் மனோ கணேசன் பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நேற்று இரவும் மீண்டும் இவ்விடயம் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து தமிழ் முற்போக்குக் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.
இதன்போது தொகுதிப் பங்கீடு விடயத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கோரிக்கைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி நிதிகள் உரிய இணக்கப்பாட்டைத் தெரிவித்திருக்கவில்லை.
இதனால் இப் பேச்சில் இழுபறி நிலை ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து கொழு ம்பு மாநகர சபைக்கான தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஜனநாயக மக்கள் முன்னணியின் சின்னமான ஏணிச் சின்னத்தில் தனித்து களமிறங்குவதற்கு முடிவு செய்திருந்தது.
தனித்துப் போட்டியிடுவதற்கான ஆயத்தங்களை முன்னணியின் தலைவரும் அமைச்சருமான மனோகணேசன் மேற்கொண்டிருந்தார்.இந்த நிலையில்தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் மனோ கணேசனுடன் தொடர்பு கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட வருமாறு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
தனக்குப் பிறந்த நாள் பரிசு வழங்குமாறும் அவர் கோரியிருக்கின்றார்.
இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது தொட ர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுக்கள் தொடர்ந்து வருகி ன்றன.
தொகுதிப் பங்கீட்டில் இணக்கம் காணப்பட்டால் தமிழ் முற்போக்குக் கூட்டணி கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடும். இல்லை யேல் தனித்து ஏணிச் சின்னத்தில் களமிறங்குமென கட்சி வட்டாரங்கள் தெரி வித்துள்ளன.