சர்வதேச மெய்வல்லுநர் போட்டியாளர்கள் கௌரவிக்கப்படுவர் !
சர்வதேச மெய்வல்லுநர் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மற்றும் தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்த வீர, வீராங்கனைகளை விருது வழங்கி கௌரவிப்பதற்கு வர்த்தக மெய்வல்லுநர் சங்கம் தீர்மானித்துள்ளது.
வர்த்தக மெய்வல்லுநர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டமும் நிருவாகிகள் தெரிவும் பொரளை ஒட்டர்ஸ் கழகத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது விருது விழாவுக்கான யோ சனை முன்வைக்கப்பட்டு தீர்மானிக்கப்பட்டதாக வர்த்தக மெய்வல்லுநர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டோர்னாடோ ஜயசுந்தர தெரிவித்தார். அத்துடன் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையில் வீத ஓட்டப் போட்டியை அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இப் போட்டி ஐந்து வயதுப் பிரிவுகளில் நடத்தப்படுமெனவும் டோர்னாடோ தெரிவித்தார்.
மேலும் அடுத்த வருடம் வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான மெய்வல்லுநர் போட்டிகளை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் செப்டெம்பர் 21, 22, 23ஆம் திகதிகளில் நடத்துவதற்கு சங்கம் தீர்மானித்துள்ளது.
இவ் வருடம் நடைபெற்ற 34ஆவது வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தைச் சேர்ந்த ப்ரசன்ன இந்திக்க புதிய தலைவராக போட்டியின்றித் தெரிவானார். இவர் முன்னாள் உதவித் தலைவராவார்.
பொதுச் செயலாளராக சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த டோர்னாடோ ஜயசுந்தர 6ஆவது தடவையாக போட்டியின்றி தெரிவானார்.
பொருளாளராக அட்டன் நெஷனல் வங்கியைச் சேர்ந்த கே. சுந்தரராஜன் ஏகமனதாகத் தெரிவானார்.
சிரேஷ்ட உதவித் தலைவராக பெசில் சில்வா (ஹொங் கொங் ஷங்காய் வங்கி), உதவித் தலைவர்களாக ஹன்ச வித்தானவாசம் (ஸ்ரீலங்கா ஏயார் லைன்ஸ்), நிஷான்த ரணதுங்க (கொமர்ஷல் லீசிங் அண்ட் பினான்ஸ் லிமிட்டெட்), மஹேஷ் குணரட்ன (நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி), வி.டி. லியனகே (கலம்போ டொக் யார்ட்). ஆகியோர் தெரிவாகினர்.
உதவிச் செயலாளர்: வாசனா பெர்னாண்டோ (அட்டன் நெஷனல் வங்கி).
உதவிப் பொருளாளர்: எல். ஜயவர்தன (சிலோன் பிஸ்கிட்ஸ்).