Breaking News

இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்துமாறு கோரிக்கை

இங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்தக்கோரி புலம்பெயர் தமிழர்களான சிவரஞ்சன் கணபதிப்பிள்ளை தலைமையில், சிவதீபன் நகுலேஸ்வரன், புவிதா பாலச்சந்திரன், அஷந்தன் தியாகராஜா ஆகியோர் ஒன்றிணைந்து ஹறோ கிழக்கு ஆளும் கட்சி நா.உ பொப் பிளக்மன் அவர்களைச் சந்தித்தனர்.

இச் சந்திப்பின் போது பிரித்தானியா தெடரந்து இலங்கைக்கு இராணுவ ஆயுதங்களை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டதுடன், ஸ்கொட்லாந்து காவல்துறை இலங்கையின் விசேட அதிரடிப்படையினருக்கு பயிற்சியளிக்கப்பட்டமை தொடர்பான ஆதாரங்களையும் சமர்ப்பித்தனர். மேலும் சுமார் அரை மணி நேரம் நீடித்த இச்சந்திப்பின் போது இலங்கையில் இடம்பெற்ற ஆட்கடத்தல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, சித்திரவதை முகாம்கள் போன்றவை குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

ஆயுத விற்பனை குறித்து நா.உ கருத்துத் தெரிவிக்கையில், வர்த்தக செயலரின் கவனத்திற்கு குறித்த விடயத்தை எடுத்து செல்வதாகவும், பிரி.பாராளுமன்றில் Early Day Motion ஒன்று நடைபெறும் போது தான் அதில் பங்கு கொள்வதாகவும், அதிரடிப்படைப் படை பயிற்சி குறித்து கருத்து தெரிவிக்கையில் இப் பயிற்சியானது முறைப்படி கண்காணிக்கப்படுகிறதா என தாம் ஆராய்வதாகவும் கூறினார்.

இதே வேளை 2012 ஆம் ஆண்டு அன்றைய பிரித்தானியப்பிரதமர் டேவிட் கமரூனுடன் தான் இலங்கை சென்றிருந்த வேளை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தமிழர் நிலைப்பாடு குறித்து தனிபபட்ட சந்திப்பொன்றை தாமும் பிரதமரும் விரும்பியதாகவும் அரச அதிகாரிகள் உடன் இருந்தமையால் த.தே.கூ.வுடனான சந்திப்பு சாத்தியமாகவில்லை என கவலையும் விசனமும் தெரிவித்தார்.

தொடர்ந்து எமது செய்தி பிரிவிற்கு கருத்து தெரிவித்த தமிழர் தகவல் நடுவத்தின் பிரதான ஏற்பாட்டாளர் அஷந்தன் தியாகராஜா;
இதுவரை இலங்கைக்கான ஆயுத விற்பனையை தடை செய்வது தொடர்பில் பத்திற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தம் குழு சந்திப்புகளை மேற்கொண்டு உள்ளதாகவும், . மேற்படி சந்திப்புகள் யாவும் ஈழத் தமிழர்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் எம் இன அழிப்பிற்கெதிரான தமிழர் தகவல் நடுவகத்தின் இம் முன்னெடுப்பானது பிரித்தானியாவில் மட்டுமின்றி ஏனைய புலம்பெயர் நாடுகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை எனவும், ஏனைய சர்வதேச நாடுகளிலும் இவை போன்ற சந்திப்புகளை ஏற்பாடு செய்து இலங்கைக்கான சர்வதேச ஆயுத விற்பனைகள் யாவற்றையும் நிறுத்துவதே தமது குறிக்கோள் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அஷந்தன் ஆயுத விற்பனை நிறுத்துதல் தொடர்பாக எம்முடன் இணைய விரும்பும் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தம்மை தெடர்பு கொள்ளும் படியும் கேட்டுக்கொண்டார்.