பிரதமர் இதற்கு என்ன பதில் தெரிவிப்பாா்.?
தொடர்ச்சியாக சிறுபான்மை மக்களுக்கு எதிரான சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் இவற்றை தடுக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
சட்டம் நிலை நாட்டப்படுவதில் ஏன் தவறிழைக்கப்பட்டுள்ளது? பிரதமர் இத ற்கு என்ன பதில் கூறப்போகின்றார் என்று எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் சபையில் கேள்வி எழுப்பினார்.
சம்பவங்களின் பின்னணியில் எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் சர்வதேச மட்டத்தில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அம்பாறை, திகனை பகுதிகளில் இடம்பெற்ற இன வன்முறைகள் தொடர்பிலும் அவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறக் கூடாது என்பதை வலியுறுத்தியும் ஜே.வி.பி.யின் தலைவரும் எதிர்க்கட்சி பிரதம கொரடாவுமாகிய அனுரகுமார திசாநாயகவினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் இங்கு மேலும் கூறுகையில்,.
அண்மையில் நாட்டில் இடம்பெற்று வரும் இனவாத சம்பவங்கள் மிகவும் கண்டிக்கத்தக்க விடயங்களாகும். இதில் அம்பாறை சம்பவம் தொடர்பில் எமக்கு சந்தேகம் உள்ளது.
உணவகத்தில் உணவுகளில் மருந்து கலந்து கொடுக்கப்பட்டு வருவதாக கூறி அதனை அடிப்படையாக கொண்டு குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் பின்னணியில் உள்ள உண்மைத் தன்மை குறித்து நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். உரிய தரப்பினர் விசாரணைகளை முன்னெடுத்து அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும்.
இந்த சம்பவத்தை அடிப்படியாக வைத்து அம்பாறையில் பள்ளிவாசல் தாக்கப்பட்டுள்ளது, கடைகள் சேதமாக்கப்பட்டுள்ளன . அதேபோல் இந்த சம்பவத்தில் பேருந்துகளில் சந்தேக நபர்கள் வந்துள்ளனர். மோட்டர்சைக்கிள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
எனினும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்ற நிலையில் காவல்துறையி னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை. மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்தப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்ற நிலையில் சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்படவில்லை. அதேபோல் சில நாட்களுக்கு முன்னர் கண்டியில் இதேபோன்றதொரு இனவாத சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனால் உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் பல்வேறு முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளன.
கடந்த காலங்களில் இலங்கையில் இவ்வாறான ஒரு இனத்துக்கான அடக்குமுறை சம்பவங்கள் இடம்பெற்றன. இவ்வாறான நிலையில் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் குறிப்பிட்ட காலகட்டம் வரையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றவிலை. இப்போது இனவாத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இதனை ஏற்றுகொள்ள முடியாது.
நல்லாட்சியில் இனவாதம் தூண்டப்படுவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளவும் முடியாது. இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் நிலையில் சட்டத்தின் மூலமாக அவற்றை நாம் கட்டுபடுத்த வேண்டும். இல்லையென்றால் சட்டம் நீதி எம்மை எதுவும் செய்யாது என்ற நிலைப்பாட்டில் இனவாத குழுக்கள் தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுவார்கள்.
ஆகவே குற்றவாளிகளுக்கு எதிராக சட்டம் மற்றும் ஒழுங்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
தொடர்ச்சியாக இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இவற்றை தடுக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
சட்டத்தை நிலைநாட்டுவதில் ஏன் தவறிழைக்கப்பட்டுள்ளது? பிரதமர் இதங்கு என்ன பதில் கூறப்போகின்றார் என்ற கேள்வியை நான் அரசாங்கத்திடம் கேட்கின்றேன்.
உரிய நேரத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படாமையே இவ்வாறான விளைவுகள் ஏற்படவும் காரணமாக அமைந்துள்ளது.
ஆகவே வன்முறைகளுக்கான முழுமையான பொறுப்பை அரசாங்கமே ஏற்றுகொள்ள வேண்டும். நடுநிலையாக சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படாவிட்டால் இந்த நாட்டின் நல்லாட்சி பயணம் எங்கே செல்லும். பிரதமர் இதற்கு பதில் கூற வேண்டும். அனைவருக்கும் சமத்துவம் கிடைக்க வேண்டும்.
மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் இந்த அரசாங்கம் எதன் அடிப்படையில் சட்டம் ஒழுங்கை கையாள்கின்றது என்ற கேள்வி எம்மத்தியில் எழுகின்றது. சிலர் தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என நினைத்துகொண்டு ஏனையவர்களை குறைந்த எண்ணிக்கையிலான மக்களை அடிமைகள் என்ற ரீதியில் நடத்த முயற்சிக்கின்றனர்.
இந்த அரசாங்கத்திலும் தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் உள்ளனர். அவர்களின் பங்களிப்பும் உள்ளது. ஆகவே அவர்களின் உரிமைக்காக அரசாங்கமாக என்ன நடவடிக்கைகளை எடுக்கின்றது என்ற கேள்வி இன்று எழுந்துள்ளது.
எனவே மக்களை பாதுகாப்பதில் அரசாங்கத்தின் திட்டங்களில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். இந்த நாட்டில் சகல மக்களும் சமத்துவமாக பாதுக்காக்கப்படவேண்டும். உரிமைகள் உறுதிப்படுத்தபட வேண்டும். இவ்வாறான சம்பவங்களின் மூலம் சர்வதேச விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.
பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் மீறப்பட்டுள்ளன. இது சர்வதேச தரப்பு மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தும். இந்த நாட்டில் இனவாதம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. அதற்கு இடமளிக்க முடியாது. உரிய நேரத்தில் சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும்.
இந்த நாட்டில் இனவாதத்தை பரப்பி முன்னோக்கி செல்ல வேண்டிய நாடாக இல்லாது தொடர்ந்தும் பின்னோக்கி பயணிக்கின்றோம்.
எம்மைவிட பின்னோ க்கி இருந்த நாடுகள் அனைத்தும் எம்மைவிடவும் அபிவிருத்தி கண்டு நாட்டின் வளர்ச்சியில் முக்கியத்துவம் செலுத்தும் நிலையில் நாம் இன்றும் இனவாத செயற்பாடுகளில் மூழ்கி செயற்படுவது தடுக்கப்பட வேண்டும்.
எனவே அரசியல் கட்டமைப்பில் மாற்றங்களை கொண்டுவந்து உரிய அதிகா ரிகள் தமது கடமையினை சரியாக முன்னெடுக்க வேண்டும். பிரதமர் இந்த விடயத்தில் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனத் தெரிவி த்துள்ளாா்.