Breaking News

”விக்கியின் நிபந்தனையே கூட்டைக் குழப்புகிறது“: கஜேந்­தி­ர­குமார் பிரத்தியேக செவ்வி

"ஈ.பி.ஆர்.எல்.எப்.தங்களின் சுயரூபத்தை மாற்றவில்லை"

ஈ.பி.ஆர்.எல்.எப்பை விட்டு மாற்று அணியை அமைக்க முடியாது என்று நீதி யரசர் விக்னேஸ்வரன் கொண்டிருக்கும் கடுமையான நிபந்தனையே கொள்கை ரீதியான கூட்டு அமைவதை குழப்புவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் பிரத்­தி­யேக செவ்­வியின் போதே இவ்­வாறு தெரி­வித்துள்ளாா்.

கேள்வி:- தமிழ் மக்­க­ளுக்கு மாற்­றுத்­த­லை­மை­யொன்று அவ­சியம் என்­பதில் உறு­தி­யாக இருக்­கின்­றீர்­களா? 

பதில்:- தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியே மாற்­றுத்­த­லைமை என்ற சொற்­ப­தத்­தினை தமிழ் மக்கள் மத்­தியில் அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. எமது முன்­னணி மட்டும் தான், போர் நிறை­வ­டைந்­ததன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தவ­றான பய­ணத்­தையும், அணுகு­மு­றை­க­ளையும் அந்­தந்தக் காலங்களில் மக்கள் மத்­தியில் வெளிப்­ப­டுத்தி வரு­வ­தோடு கொள்கை ரீதி­யான மாற்­றுத்­த­லை­மை­யொன்றின் அவ­சி­யத்­தி­னையும் எடுத்­து­ரைத்து வரு­கின்றது.

அந்­த­வ­கையில் தமிழ் மக்­க­ளுக்­கான மாற்­றுத்­த­லைமை உண்­மை­யா­ன­தாக இருக்க வேண்டும் என்­பதே எமது இலக்­காகும். கொள்­கை­யி­லி­ருந்து விலகிச் சென்­றுள்ள கூட்­ட­மைப்­புக்கு மாற்­றாக கூட்­ட­மைப்பு போன்றே பிறி­தொரு அணியை ஒருவர் தலை­மையில் உரு­வாக்கி தேர்­தலில் கூட்­ட­மைப்­பினை தோற்­க­டித்து மாற்­றாக உரு­வாக்­கப்­பட்­டுள்ள கூட்டு மட்­டுமே வெற்­றி­பெற வேண்டும் என்ற அடிப்­ப­டையில் செயற்­ப­டு­வதால் எவ்­வி­த­மான பய­னு­மில்லை.

ஆகவே கூட்­ட­மைப்­பினை தமிழ் மக்கள் நிரா­க­ரிக்க வேண்டும் அவர்­களை அர­சி­யலில் இருந்து வெளி­யேற்ற வேண்­டு­மாயின் கூட்­ட­மைப்பின் கொள்­கை­களை கைவிட்டு தமிழ்த் தேசிய கொள்­கை­களை நேர்­மை­யான முறையில் பின்­பற்றும் இதய சுத்­தி­யான தரப்­புக்­க­ளுடன் இணைந்து தான் மாற்­றுத்­த­லை­மை­யொன்றை உரு­வாக்க முடியும்.

அதற்கு நாம் என்­றுமே தயா­ராக இருக்­கின்றோம். கூட்­ட­மைப்பின் முக­மூ­டியை நீக்கி பிறி­தொரு அணிக்கு அந்த முக­மூ­டியை பொருத்­து­வ­தற்கு நாம் ஒரு­போதும் ஒத்­து­ழைப்­புக்­களை வழங்க முடி­யாது என்­பதில் தெளி­வா­கவும் உறு­தி­யா­கவும் இருக்­கின்றோம்.

கேள்வி:- வி­க்­னேஸ்­வ­ரனை மாற்­றுத்­த­லை­மை­யாக ஏற்றுக்­கொள்­கின்றோம் என்ற நிலைப்­பாட்டில் தற்­போதும் இருக்­கின்­றீர்­களா? 

பதில்:- தமிழ் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியும், நீதி­ய­ரசர் விக்­­னேஸ்­வரன் தலை­மை­யி­லான அணி­யி­னரும் இணைய வேண்டும் என்று தான் விரும்­பு­கின்­றார்கள். தாய­கத்தின் பல்­வேறு இடங்­களில் நாம் மக்­களைச் சந்­தித்த தரு­ணங்­களில் இந்த ஒற்­று­மை­யையே விரும்­பு­கின்­றார்கள் என்­பதை எம்­மி­டத்தில் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார்கள்.

வேறு தரப்­புக்­கள் குறித்து அவர்­க­ளையும் இணைத்­துக்­கொள்­ளுங்கள் என்று எமக்கு யாரும் கூற­வில்லை. மக்­களின் இந்த விருப்­பிற்­காக இத­ய­சுத்­தி­யுடன் செயற்­ப­டு­வ­தற்­கு நாம் தயார் என்று 2015ஆம் ஆண்­டி­லி­ருந்தே பகி­ரங்­க­மாக கூறி­வ­ரு­கின்றோம்.

தற்­போதும் அதே நிலைப்­பாட்டில் தான் இருக்­கின்றோம். ஆனாலும், சுரேஸ்­ பி­ரே­மச்­சந்­திரன் தலை­மை­யி­லான ஈ.பி.ஆர்.எல்.எப் பங்­கேற்பு இல்­லாத ஒரு கூட்­ட­ணியை ஏற்­ப­டுத்த முடி­யாது என்று நீதி­ய­ரசர் விக்­னேஸ்­வரன் நிபந்­தனை விதித்து மக்கள் விரும்பும் நேர்­மை­யான கூட்டு ஏற்­ப­டு­வதை குழப்­பு­கின்றார். ஆகவே விக்­­னேஸ்­வ­ரனும் மற்­றொரு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பையே உரு­வாக்­கு­கின்றார்.

கேள்வி:- ஈ.பி.ஆர்.எல்.எப் தவிர்ந்து சி.வி.தலை­மையில் ஐங்­க­ர­நேசன், அனந்தி சசி­தரன் போன்ற தரப்­புக்­களை உள்­வாங்­கிய கூட்டில் இணை­யத்­த­யா­ராக இருக்­கின்­றீர்­களா? 

பதில்:- ஐங்­க­ர­நேசன், அனந்தி, போன்­ற­வர்கள் எல்லாம் விக்­­னேஸ்­வ­ரனின் பங்­கா­ளி­க­ளாக இருப்­பார்கள். அவர் தலை­மை­யி­லான அணிக்கும் எமக்கும் இடையில் தான் கூட்­டணி அமையும். மாறாக நாங்கள் நேர­டி­யாக விக்­கி­னேஸ்­வரன் தவிர்ந்த தரப்­புக்­க­ளுடன் கூட்­டணி அமைக்­கப்­போ­வ­தில்லை. இந்த அடிப்­ப­டையில் தான் பேச்­சுக்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன.

அதற்கு நாங்கள் எதிர்ப்­பு­களை தெரி­விக்­க­வில்லை. ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எப்­பையும் தன்­னுடன் உள்­வாங்­கு­வ­தற்கே நாம் எதிர்ப்­பினை வெளி­யிட்­டி­ருந்தோம்.

கேள்வி:- கூட்­ட­மைப்­பி­லி­ருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் வெளி­யே­றி­ய­போதும் அதன் பின்­ன­ரான காலத்­திலும் உங்­க­ளுக்கும் அத்­த­ரப்­புக்கும் இடையில் நல்­லு­றவு நீடித்­தி­ருந்­த­தல்­லவா? 

பதில்:- 2010ஆம் ஆண்­டி­லி­ருந்து நாம் கூட்­ட­மைப்பின் போக்­கினை அம்­ப­லப்­ப­டுத்­தி ­வ­ரு­கின்றோம். அதன் பின்னர் சுரேஸ்­ பி­ரே­மச்­சந்­திரன் தலை­மை­யி­லான ஈ.பி.ஆர்.எல்.எப்பும் கூட்­ட­மைப்பின் போக்­கினை புரிந்­து­கொண்டு பகி­ரங்க விமர்­ச­னங்­க­ளுடன் வெளி­யே­றி­யி­ருந்­தது.

அது வ­ரையில் அவர்­களின் போக்கும் செயற்­பா­டு­களும் சரி­யா­கவே இருந்­தன. அப்­போது அவர்­க­ளுடன் இணைந்து பய­ணிப்­ப­திலோ செயற்­ப­டு­வ­திலோ எமக்கு தயக்­கங்கள் காணப்­பட்­டி­ருக்­க­வில்லை.

ஆனால் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளி­யே­றிய ஈ.பி.ஆர்.எல்.எப், தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­க­ரனால் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து முதன்­மு­த­லாக வெளி­யேற்­றப்­பட்ட தமிழர் விடு­தலைக் கூட்­டணி உள்­ளிட்ட தமிழ்த் தேசியக் கொள்­கை­யி­லி­ருந்து வில­கி­யி­ருந்த ஈரோஸ் உள்­ளிட்ட தரப்­புக்­க­ளுடன் இணைந்து கடந்த உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலில் போட்­டி­யிட்­டி­ருந்தார்.

இந்த செயற்­பாடு கொள்­கையின் மீதான அவர்­களின் பிடிப்­பினை வெளிப்­ப­டுத்­தி­யது. அது மட்­டு­மன்றி, உள்­ளூராட்சி மன்­றத்­தேர்­தலின் பின்னர், கூட்­ட­மைப்பு சபை­களின் ஆட்­சியை கைப்­பற்­று­வ­தற்­காக எவ்­வாறு ஐ.தே.க, சுதந்­தி­ரக்­கட்சி, ஈ.பி.டி.பி போன்­ற­வற்­றுடன் இணைந்து செயற்­பட்­டதோ அதே­போன்று ஈ.பி.ஆர்.எல்.எப்பும் வவு­னியா நக­ர­ச­பையில் செயற்­பட்­டது.

மேலும் வவு­னியா வடக்கு பிர­தேச சபையில் ஈ.பி.ஆர்.எல்.எப், மஹிந்த அணி­யுடன் கூட்­டி­ணைந்து தவி­சாளர் பத­விக்­காக போட்­டி­யிட்டு கூட்­ட­மைப்­பினை விடவும் ஒரு­படி மேலே­ சென்று செயற்­பட்­டி­ருந்­தது.

இதன்­மூலம் ஈ.பி.ஆர்.எல்.எப் தங்­களின் சுய­ரூ­பத்­தினை எந்­த­வொரு இடத்­திலும் மாற்­றிக்­கொள்­ள­வில்லை என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. 

கேள்வி:- இந்­தி­யாவின் முக­வர்­க­ளாக ஈ.பி.ஆர்.எல்.எப் செயற்­ப­டு­கின்­றது என்ற குற்றச்­சாட்­டினை எந்த அடிப்­ப­டையில் முன்­வைக்­கின்­றீர்கள்? 

பதில்:- 2017 நவம்பர் 12ஆம் திகதி தமிழ் மக்கள் பேர­வையின் அங்­கத்­துவ தரப்­புக்­களின் பங்­கேற்­புடன் உள்­ளூ­ராட்சி தேர்­த­லுக்கு எவ்­வாறு முகங்­கொ­டுப்­ப­தென்று பேசப்­பட்­டது. அதன்­போது ஈ.பி.ஆர்.எல்.எப் உத­ய­சூ­ரியன் சின்­னத்தில் போட்­டி­யிட வேண்டும் என்று கூறவும் ஈற்றில் அச்­சின்­னத்தில் தேர்­த­லுக்குச் செல்­வ­தில்லை என்றும் பொதுச் சின்னம் மற்றும் பெயரில் கள­மி­றங்­கு­வ­தென்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

அதன்­பின்னர் கூட்­ட­ணிக்­கான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக தேர்­தல்கள் திணைக்­க­ளத்­திற்குச் சென்று ஆலோ­ச­னை­களை பெற்று நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­தி­ருந்தோம். அத்­த­ரு­ணத்தில் சுரேஸ்­ பி­ரே­மச்­சந்­திரன் புது­டெல்­லிக்கு அழைக்­கப்­பட்டார்.

அவர் புது­டெல்­லிக்கு செல்­வதை எம்­மி­டத்­திலும் கூறி­யி­ருந்தார். புது­டெல்­லி­யி­லி­ருந்து திரும்­பி­யதும் அவர் உதய சூரியன் சின்­னத்தில் போட்­டி­யி­டப்­போ­வ­தாக உறு­தி­யாக அறி­வித்தார். நாங்­களும் வெளி­நா­டு­க­ளுக்குச் சென்று வரு­கின்றோம். ஆனால் எமது அடிப்­படை கொள்­கைகள், நிலைப்­பா­டுகள் அதன் பின்னர் மாறி­ய­தாக இல்லை.

1980களி­லி­ருந்து ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ, புளொட் ஆகி­ய­வற்றை இந்­தியா தமது முக­வர்­க­ளாக பயன்­ப­டுத்­தி­யது என்­பதை அனை­வரும் அறி­வார்கள். அந்த வகையில் நாம் புதிய விட­ய­மொன்றை கூற­வில்லை. ஈ.பி.ஆர்.எல்.எப் உட்­பட எந்தத் தரப்பும் இந்­தி­யா­வுடன் நல்­லு­றவை பேணு­வதில் எமக்கு எவ்­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை.

ஆனால் தமிழ் மக்­களின் நலன்­களை விடவும் இந்­தி­யாவின் நலன்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளித்து முக­வர்­க­ளாக செயற்­ப­டு­வதை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

கேள்வி:- பிராந்­திய அர­சி­யலில் செல்­வாக்கு செலுத்­த­வல்ல இந்­தி­யாவை புறந்­தள்ளி தமிழர் பிரச்­சி­னையை அணுக முடியும் எனக் கரு­து­கின்­றீர்­களா? 

பதில்:- நாங்கள் இந்­தி­யாவை எதி­ரி­யாக பார்க்கும் தரப்பு அல்ல மாறாக இந்­தி­யா­வுடன் நல்­லு­றவை பேணு­வ­தற்கு விரும்பும் தரப்­பா­கவே இருக்­கின்றோம். இந்­தி­யாவின் நலன்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­படும் வகையில் திட்­ட­மிட்ட வகை யில் நாங்கள் செயற்­ப­ட­போ­வ­தில்லை.

ஆனால், தமிழ் மக்­களின் நலன்­க­ளுக்கும், தமிழ்த் தேசத்­திற்கும் பாதிப்பு ஏற்­படும் வகையில் செயற்­ப­டு­வ­தற்கு நாம் ஒரு­போதும் தயா­ரில்லை. தமிழ்த் தேசத்தின் நலன்­களும், இந்­தி­யாவின் நலன்­களும் ஒரு­புள்­ளியில் சந்­திப்­ப­தற்­காக செயற்­ப­டு­வ­தற்கு தயா­ராக இருக்­கின்­றோமே தவிர, இந்­தி­யாவின் நலன்­க­ளுக்­காக தமிழ்த் தேசத்தின் நலன்­களை கிடப்பில் போடு­வ­தற்கு நாம் தயா­ரில்லை.

கேள்வி:- கூட்­ட­மைப்பை விட்டு வெளி­யே­றிய பின்னர் உங்­க­ளுக்கும் இந்­தியத் தரப்­பு­க­ளுக்கும் இடை­யி­லான உற­வுகள் எப்­ப­டி­யி­ருக்­கின்­றன?

பதில்:- இந்­திய இரா­ஜ­தந்­திர தரப்­புகள் எம்­முடன் சந்­திப்­பு­களை நடத்­தி­யி­ருக்­கின்­றன. குறிப்­பாக, யாழில் துணைத்­தூ­து­வ­ராக நட­ராஜன் இருந்த காலத்தில் பல சந்­திப்­புக்­களை நடத்­தி­யி­ருக்­கின்றோம். அவ­ரு­டைய காலத்தின் பின்னர் அவர்­க­ளுக்கும் எமக்கும் எவ்­வி­த­மான தொடர்­பு­களும் இருக்­க­வில்லை.

எம்­மைப்­ பொ­றுத்­த­வ­ரையில் அவர்­க­ளுடன் எமக்கு தொடர்­பினை ஏற்­ப­டுத்த வேண்­டிய அவ­சி­ய­மில்லை. காரணம், இந்­தி­யாவின் நலன்­களை நாம் அறி வோம். அவர்­களின் நலன்­க­ளுக்கு எதி­ராக நாம் திட்­ட­மிட்டு செயற்­ப­ட­வில்லை. எமது மக்­களின் விட­யங்­க­ளையே நாம் முன்­னி­லைப்­ப­டுத்­து­மாறு கோரு­கின்றோம். இத­னையும் அவர்கள் புரிந்­தி­ருப்­பார்கள் என்றே கரு­து­கின் றோம்.

கேள்வி:- தமி­ழர்கள் விட­யத்தில் இந்­தியா தனது நலன்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி செயற்­பட்­டி­ருக்­கின்­ற­மையை அனு­ப­வ­ரீ­தி­யாக கண்­டி­ருக்­கின்­றமை யால் தான் இந்­திய விட­யத்தில் தாங்கள் இறுக்­க­மான பிடி­மா­னத்­தினைக் கொண்­டி­ருக்­கின்­றீர்களா? 

பதில்:- இந்­தியா தனது நல­னுக்­காக, இந்­தி­ய-­ – இ­லங்கை ஒப்­பந்­தத்­தினை உயி­ரோடு வைத்­தி­ருக்க வேண்டும் என்­ற­வொரு கா­ரணத்­திற்­காக ஒற்­றை­யாட்­சிக்குள் 13ஆவது திருத்­தச்­சட்­டத்­தினை ஏற்­றுக்­கொள்ள வேண்டும் என்று தமிழ் மக்­களை வற்­பு­றுத்­து­கின்­றது.

ஒற்­றை­யாட்­சிக்குள் இருக்கும் 13ஆவது திருத்­தச்­சட்­டத்­தினை தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­வ­தற்­கான தீர்வின் ஆரம்பப் புள்­ளி­யாக கூட பார்க்க முடி­யாது. அப்­ப­டி­யி­ருக்­கையில் 13ஆவது திருத்­தச்­சட்­டத்­தினை தமிழ் மக்கள் ஏற்­றுக்­கொள்ள வேண்டும் என்று வலிந்து நிற்­பது தமிழ் மக்­க­ளி­னதும், தேசத்­தி­னதும் நலன்­களை முற்­று­மு­ழு­தாக உதா­சீனம் செய்யும் செய­லாகும்.

தமிழ் மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வாக 13ஆவது திருத்­தச்­சட்­டத்­தினை அமுல்­ப­டுத்த வேண்டும் என்று இந்­தியா பல­த­ட­வைகள் கூறி­யி­ருக்­கின்­றது. 2009ஆம் ஆண்டு போர் நிறை­வுக்கு வந்­த­வுடன் இலங்­கைக்கு வந்த இந்­திய இரா­ஜ­தந்­தி­ரிகள் ஒற்­றை­யாட்­சிக்குள் 13ஆவது திருத்­தச்­சட்­டத்­தினை ஏற்­றுக்­கொள்ள வேண்டும் என்று கூட்­ட­மைப்­புக்கு கட்­டளை பிறப்­பித்­தார்கள்.

கூட்­ட­மைப்பின் தலை­மையும் ஒற்­றை­யாட்­சிக்குள் 13ஆவது திருத்­தத்­தினை ஏற்­றுக்­கொண்டு செயற்­படும் தீர்­மா­னத்­தினை எடுத்­தது. இதனால் தான் எமக்கும் கூட்­ட­மைப்­புக்கும் இடையில் கொள்கை ரீதி­யான முரண்­பாடு ஏற்­பட்­டது. இதனால் தான் நாம் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளி­யே­றினோம்.

இந்­நி­லையில் கடந்த ஜெனீவா கூட்­டத்­தொ­ட­ரிலும் இந்­தியத் தூது­வரும் 13 ஆவது திருத்­தத்­தினை முழு­மை­யாக அமு­லாக்கி தமி­ழர்­க­ளுக்கு தீர்­வ­ளிக் கும்படி குறித்­து­ரைத்­தி­ருந்தார். இதன் மூலம் இந்­தியா தற்­போதும் அதே நிலைப்­பா­ட்டுடன் தான் இருக்­கின்­றது என்­பது தெளி­வா­கின்­றது.

இந்­தி­யாவின் இந்த நிலைப்­பாட்­டினை தமிழ் மக்­களின் அர­சியல் தரப்­பாக செயற்­படும் நாம் மாற்­றி­ய­மைக்க வேண்டும் என்று தான் செயற்­பட வேண்டும். அத­னை­வி­டுத்து, இந்­தியா பிராந்­திய வல்­ல­ரசு என்­பதால் அதனை பகைத்து விடக்­கூ­டாது என்ற அடிப்­ப­டையில் அவர்­களின் நலன்­க­ளுக்­காக தமிழ் மக்­களின் நலன்­களை மறுக்கும் 13 ஆவது திருத்­தத்­தினை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

கேள்வி:- கொள்­கை­யி­லி­ருந்து வில­கிப்­ப­ய­ணிப்­ப­தாக கூட்­ட­மைப்பை கடு­மை­யாக விமர்­சிக்கும் நீங்கள் அதற்கு மாற்­றாக பல­மான கூட்­ட­ணி­யொன்று அமை­வ­தற்­கான சூழ­மை­வுகள் ஏற்­பட்­டுள்ள தற்­போ­தைய சந்­தர்ப்பம் உங்­களின் கடு­மை­யான நிலைப்­பாட்டால் நழுவ விடப்­ப­டு­கின்­ற­தல்­லவா? 

பதில்:- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தமி­ழி­னத்­திற்கு துரோ­க­மி­ழைக்­கப்­போ­கின்­றது என்­பதை 2010ஆம் ஆண்டு நாம் கூறி­ய­போது யாரும் ஏற்­றுக்­கொண்­டி­ருக்­க­வில்லை. ஆனால் நாம் தீர்க்­க­த­ரி­ச­ன­மாக கூறிய விட­யமே தற்­போது நடை­பெற்­றுக்­கொண்­டிருக்­கின்­றது.

அதேபோன்று தான் கூட்­ட­மைப்­பினை தேர்­தலில் தோற்­க­டிக்க வேண்டும் என்ற ஒரே நோக்­கத்­துடன் கூட்­ட­மைப்­பினை விடவும் மோச­மான கொள்­கை­களைக் கொண்­டதும் கூட்­ட­மைப்பின் தவ­று­க­ளையே செய்­து­கொண்­டி­ருக்கும் தரப்­பு­களை ஒருங்­கி­ணைத்துக் கொண்டு உரு­வாகும் கூட்டு கொள்கை பற்­று­று­தி­யான அணியை உரு­வாக்­கப்­போ­வ­தில்லை.

அத்­த­கைய­தொரு கூட்டு உரு­வா­கி­வி­டக்­கூ­டாது என்­பதில் கவ­ன­மாக இருக்­கின்­ற­மையால் தான் இறுக்­க­மான நிலைப்­பாட்டில் உள்ளோம். மேலும் தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி மாற்று அணியை குழப்­பு­கின்­றார்கள் என்ற வகையில் முடி­வு­களை எந்­த­வொரு இடத்திலும் எடுக்க மாட்­டார்கள்.

காரணம், தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியும் நீதி­ய­ரசர் விக்­­னேஸ்­வ­ரனும் இணை­யவேண்டும் என்றே தமிழ் மக்கள் விரும்­பு­கின்­றார்­களே தவிர, கொள்­கை­களை கைவிட்டு தமிழ்த் தேசிய நீக்­கத்­திற்கும், காட்­டி­கொ­டுப்­பு­க­ளுக்கும் கார­ண­மாக இருக்கும் தரப்­புக்கள் அனைத்­தையும் இணைத்து கூட்­ட­மைப்­பினை தோற்­க­டிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்­ப­வில்லை.

கேள்வி:- விக்­­னேஸ்­வ­ர­னையும் இந்­தியா பின்­ன­ணியில் நின்று இயக்கு வதாக எந்த அடிப்படையில் கூறுகின்றீர்கள்? 

பதில்:- கடந்த ஒக்டோபர் 6ஆம் திகதி நீதியரசர் விக்னேஸ்வரனே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து செயற்படுவதை இந்தியா விரும்ப வில்லை என்று எம்மிடத்தில் கூறியிருந்தார். அதனையே நாம் வெளிப்படுத்தி யிருக்கின்றோம்.

கேள்வி:- விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணிக்குள் சென்றால் தமி ழர் அரசியலில் தலைமைத்துவம் அளிப்பதற்கு உங்களுக்கான சந்தர்ப்பங்கள் குறைவாக உள்ளமையால் பல்வேறு காரணங்களை முன் வைப்பதாக கூறப்படும் விமர்சனங்களை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? 

பதில்:- நீதியரசர் விக்னேஸ்வரன் எனக்கு அனுப்பிய கடிதத்தில், எமது கட்சி யின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தயார் என்றும் தற்போது உரு வாகப்போகும் கூட்டில் அவருக்கு பின்னர் நானே தலைமை வகிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் சுரேஸ் பிரேமச்சந்திரனையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என் றும் கோரியுள்ளார். நான் தலைமையை வகிக்க வேண்டுமென்றோ அல்லது எமது கட்சியை முன்னிலைப்படுத்த வேண்டுமென்றோ விரும்பியிருந்தால் நாம் அந்த எழுத்து மூலமான ஆவணத்தை ஏற்றுக்கொண்டு இணைந் திருப் போம் அல்லவா? எமக்கு பதவிகள், அடையாளங்கள் முக்கியமில்லை. மக்க ளுக்காக நேர்மையான கொள்கையே அவசியம்.

கேள்வி:- கொள்கை ரீதியான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் அடுத்த தேர்தல்களை தனித்து நின்று முகங்கொடுப்பீர்களா? 

பதில்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனோ அல்லது அதனை விட மோசமான கொள்கைகளைக் கொண்ட கூட்டணிகளுடனோ நாம் ஒருபோதும் இணையப் போவதில்லை. தமிழ்த் தேசியக் கொள்கையில் பற்றுறுதியாக இருக்கும் தரப்பு களுடன் கைகோர்ப்பதற்கு தயாராகவே உள்ளோம்.