Breaking News

இந்தியா – சீனா மோதலின் பின்புலம் !

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல்கள், பாங்காங் ஏரிப் பகுதியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுகள் யாவற்றையும் ‘திபெத்தின் ஐந்து விரல்கள்’ என்ற உருவகத்தோடு சீனா பிணைக்கிறது. அது என்ன திபெத்தின் ஐந்து விரல்கள்? மாவோவால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கருத்தாக்கத்தின்படி, திபெத் பகுதிதான் சீனாவின் வலது உள்ளங்கை; லடாக், நேபாளம், சிக்கிம், பூட்டான், அருணாசல பிரதேசம் ஆகியவை அதன் ஐந்து விரல்கள். அவற்றை விடுவிப்பது தனது கடமை என்று சீனா கருதுகிறது. இந்த ஐந்து விரல்களும் தன்னுடனேயே இருக்கும்படி உறுதிசெய்துகொள்வதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுத்துவருகிறது.

நேருவின் மும்முனைக் கொள்கை

இந்தியாவும் சீனாவும் பஞ்ச சீல ஒப்பந்தத்தைச் செய்துகொண்ட 1954-க்கும், சீன-இந்தியப் போர் நடந்த 1962-க்கு முன்பும் இடையிலான காலட்டத்தில் சீனாவின் பிரகடனங்களில் சிலவற்றைக் குறித்து நேரு அரசு கவலை கொள்ள ஆரம்பித்தது. குறிப்பாக, 1959-ல் திபெத்திலிருந்து தலாய் லாமா தப்பி இந்தியாவுக்கு வந்த பிறகு ‘காஷ்மீருக்கு சுய-நிர்ணய உரிமை’ கிடைக்க வேண்டும் என்று சீனா கோருவதற்கு ஆரம்பித்தது என்று எழுதியிருக்கிறார் முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலர் டி.என்.கௌல். சீனப் பத்திரிகைகளும் வானொலியும் இந்தியாவுக்கு எதிராக எப்படி பிரச்சாரத்தை மேற்கொண்டன என்பதைப் பற்றியும், நாகா, மிசோ கிளர்ச்சியாளர்கள் தங்கள் நாட்டில் தஞ்சம் புகவும் ஆயுதப் பயிற்சி மேற்கொள்ளவும் சீனா அனுமதித்தது என்பதைப் பற்றியும் அவர் விவரித்துள்ளார்.

பிரதமர் நேருவின் கணக்குகள் 1962 போரில் தவறானது தொடர்பில் நிறைய விரிவாக அலசப்பட்டிருக்கிறது. ஆனால், நேரு அப்போது உருவாக்கிய மும்முனை வெளியுறவுக் கொள்கை அந்த அளவுக்குப் புரிந்துகொள்ளப்படவில்லை. நேருவாலும் பின்னவர்களாலும் முன்னெடுக்கப்பட்ட இந்தக் கொள்கை சென்ற நூற்றாண்டின் போக்கில், மாவோவின் ஐந்து விரல்கள் கொள்கைக்கு வலுவான போட்டியைக் கொடுத்தது.

எல்லையில் கட்டமைப்பு

முதலாவது கொள்கை, எல்லைப்புறத்தில் அடிப்படைக் கட்டமைப்பையும் நிர்வாகத்தையும் உருவாக்குவதற்கான முன்னெடுப்பு. 1950-களில் அருணாசல பிரதேசத்தையும் இந்தியா-சீனா எல்லையில் உள்ள மற்ற பகுதிகளையும் நிர்வகிக்க ‘இந்திய எல்லைப்புற ஆட்சிப் பணிகள்’ (ஐ.எஃப்.ஏ.எஸ்.) என்ற திட்டத்தை அரசு உருவாக்கியது. வெளியுறவுச் செயலர்தான் ஐ.எஃப்.ஏ.எஸ். தேர்வுக் குழுவின் தலைவர். இந்தப் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பலரும் எல்லையில் மிகவும் தொலைவில் இருந்த பழங்குடியினர் பகுதிகளிலும், அந்தப் பகுதியில் உள்ள தூதரகங்களிலும் மாறிமாறிப் பணிபுரிந்தனர். எல்லையில் நம்முடைய கட்டமைப்பைப் பலப்படுத்துவதில் வளர்ச்சியை ஒரு கருவியாக்கினர்.

அருணாசல பிரதேசத்திலிருந்து லடாக் வரை பயணித்து அந்தப் பகுதிகளின் விரைவான வளர்ச்சிக்காகப் பரிந்துரைகள் கொடுப்பதற்காகவே அதிகாரிகளுக்கென்று வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் சிறப்புப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டது. அடிப்படைக் கட்டமைப்புகளைப் பொறுத்தவரை சீனா பல பத்தாண்டுகளாக அடைந்த வளர்ச்சியை நாம் இப்போதுதான் துரத்திக்கொண்டிருக்கிறோம். இதற்கான அடிப்படை ஐ.எஃப்.ஏ.எஸ். இயங்கிய குறுகிய கால அளவுக்குள் உருவாக்கப்பட்டது. ஆயினும், 1968-ல் ஐ.எஃப்.ஏ.எஸ். முறை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

ஐ.எஃப்.ஏ.எஸ். என்பது அப்போது மிகவும் புதுமையான சிந்தனை. அதற்குப் பிறகு அது ஆற்றிய பணிகளை இந்திய ராணுவமும் எல்லைப்புற சாலைகள் அமைப்பும் பங்கிட்டுக்கொண்டன. ஆயினும், எல்லைப்புறத்தில் உள்ள பகுதிகள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் அரசின் கவனம் தங்கள் மீது விழுவதில்லை என்றும் முறையிடும் தருணத்தில் ஐ.எஃப்.ஏ.எஸ். அமைப்பை இன்று மீண்டும் கொண்டுவந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

அண்டைப் பிணைப்பு

இரண்டாவது கொள்கை, அண்டை நாடுகளுடனான பிணைப்பு. நேபாளத்துடனும் பூட்டானுடனும் தொடர்ச்சியாகச் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பலம் சேர்த்தன. ஜம்மு-காஷ்மீருடன் இணைக்கப்பட்ட லடாக்கையும் (1947), அருணாசல பிரதேசத்தையும் உள்ளடக்கிய பகுதிகள் மீது ராணுவரீதியிலும் நிர்வாகரீதியிலும் கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டது. 1950-ல் சிக்கிமுடன் செய்துகொண்ட ஒப்பந்தமானது இந்தியாவால் பாதுகாக்கப்படும் நாடாக சிக்கிமை ஆக்கியது. 1975-ல் இந்திரா காந்தியின் அரசு சிக்கிமை இந்தியாவின் ஒரு பகுதியாக ஆக்கி, அதை இந்தியாவின் 22-வது மாநிலமாகவும் ஆக்கியது.

இந்த ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றும் இரண்டு தரப்புகளுக்குமே லாபம் என்ற கணக்கில் இந்தியாவுடன் நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளைப் பிணைத்தன என்றாலும், காலப்போக்கில் இந்த ஒப்பந்தங்கள் காலாவதி ஆயின. நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளுடன் கொண்டிருக்கும் தனித்துவமான உறவுகளால் திறந்த எல்லைகள், சுலபமாகச் சென்றுவருதல், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள், கல்வி, உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு மிக்க ஆதரவு உள்ளிட்ட நன்மைகள் கிடைத்தாலும் பொதுமக்களின் நினைவிலிருந்து இவையெல்லாம் மறைந்துபோயின. சீனாவால் நேபாளத்துக்குள் நுழைய முடிந்தாலும் பூட்டானுக்குள் நுழைய முடியவில்லை. இதற்கான காரணங்களுள் ஒன்று, இந்தியாவும் பூட்டானும் 1949-ல் செய்துகொண்ட ‘நீடித்த சமாதானம் மற்றும் நட்புறவு’க்கான ஒப்பந்தம் 2007-ல் ‘இந்தியா-பூட்டான் நட்புறவு ஒப்பந்தம்’ ஆகப் புதுப்பிக்கப்பட்டது ஆகும். எனினும், இந்த ஒப்பந்தத்தில் பூட்டானின் வெளியுறவு விவகாரங்களில் இந்தியா வழிநடத்தும் என்ற பிரிவு மட்டும் நீக்கப்பட்டிருக்கிறது. இதுவே இந்தியா-பூட்டான் உறவுகளை நல்ல நிலையில் இதுவரை வைத்திருக்கிறது. 2017-ல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் டோக்லாமில் உரசல் ஏற்பட்டபோது, சீனாவிடமிருந்து பூட்டானுக்குப் பெரும் அழுத்தம் கொடுக்கப்பட்டபோதும், இரண்டு நாடுகளுக்கும் இடையே நல்லுறவே நிலவியது.

ஆயினும், 1950-ல் இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ‘சமாதானம் மற்றும் நட்புறவுக்கான ஒப்பந்த’த்தை மறுஆய்வுக்கு உட்படுத்தும்படி நேபாளம் பல ஆண்டுகளாகக் கேட்டுக்கொண்டிருந்தாலும் இந்தியா அப்படிச் செய்யாமல் இழுத்தடித்துக்கொண்டே வந்திருக்கிறது.

திபெத்துடனான நெருக்கம்

மூன்றாவது கொள்கை, ஐந்து விரல்களையும் கொண்ட கையாக சீனாவால் பார்க்கப்படும் திபெத்துடனான இந்தியாவின் நெருக்கம். தலாய் லாமாவுக்கும் அவருடைய லட்சக் கணக்கான தொண்டர்களுக்கும் 1959-லிருந்து தஞ்சம் கொடுப்பதான பாராட்டுக்குரிய இந்தியாவின் முடிவு இதன் பின்னணியிலேயே இயங்குகிறது. இன்றுள்ள சவால் என்னவென்றால், உலகம் முழுவதுமுள்ள திபெத்தியர்களின் ஆதரவை இப்போது தலாய் லாமா பெற்றிருக்கிறார். ஆனால், அவருக்குப் பிறகு யார் தலைமை என்ற கேள்வி அந்தச் சமூகத்தைச் சூழ்ந்திருக்கிறது. 2000-ல் சீனாவிலிருந்து தப்பி இந்தியா வந்த கர்மபா லாமா, எதிர்காலத் தலைமைக்கு வாய்ப்புள்ளவராக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்றாலும், தற்போது வேறொரு நாட்டின் குடிமகனாக இருக்கிறார்; பெரும்பாலும் அமெரிக்காவிலேயே வசிக்கிறார். இதற்கிடையே, சந்தேகத்துக்கு இடமின்றித் தனது தெரிவையும் அந்தச் சமூகத்தின் மீது சீனா திணிக்கும். ஏராளமான திபெத்தியர்களைத் தன்னிடம் கொண்டிருக்கும் இந்தியா, இந்த விவகாரத்தில் மிக முக்கியமான பங்கை ஆற்ற வேண்டும்.

செய்ய வேண்டியது என்ன?

ஆக, ‘உண்மையான கட்டுப்பாட்டு எல்லைப் பகுதி’யில் (Line of Actual Control) அடுத்து என்ன அடியெடுத்து வைப்பது என்று இந்தியா திணறும் சூழலில், அரசு செய்ய வேண்டிய முக்கியமான காரியம், மும்முனைக் கொள்கை போன்ற ஒரு மாபெரும் உத்தியை உருவாக்கி, இந்தப் பகுதிகள் ஒவ்வொன்றையும் தன்னுடன் நெருக்கிவைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதும், அண்டை நாடுகளுடனான ஒப்பந்தங்களைப் புதுப்பிப்பதும்தான்! மேலதிகம் இப்போதைய சீனாவின் எதிர்வினைக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. ஆகஸ்ட் 2019-ல் ஜம்மு-காஷ்மீரை இந்தியா மறுவரையறுத்தது, பாதுகாப்புச் சூழலையும் அச்சுறுத்தல் அளவுகளையும் மாற்றியமைத்திருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை, குறிப்பாக லடாக் தொடர்பாக சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. ‘சீனாவின் எல்லைப்புற இறையாண்மையைக் குறைத்து மதிப்பிடும் செயல்’ என்றது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும், அக்ஷய் சின்னையும் திரும்ப எடுத்துக்கொள்வதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆகஸ்ட்டில் சூளுரைத்ததும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படாது. ஏனெனில், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அந்த வழியாகத்தான் செல்கிறது. ஜம்மு-காஷ்மீரின் புதிய வரைபடம் நேபாளத்துடனான உறவிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது தற்செயலானது அல்ல. சீனாவை எதிர்கொள்ள இந்திய அரசு தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில், தனது எந்த விரலின் மீதிருந்தும் தன் பார்வை விலகிவிடாமல் இந்தியா பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம் என்று மட்டும் உறுதியாகக் கூறலாம்.

© 'தி இந்து' - சுஹாஸினி ஹைதர்