Breaking News

தேர்தலுக்காக நாம் எவரிடமும் பின் கதவின் வழியாக பணம் வேண்டவில்லை - விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் முன்னால் வடமாகாண முதலமைச்சருமான க.வி.விக்னேஸ்வரன் இன்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் 

கேள்வி – தேர்தல் நடவடிக்கைக்கு மக்களிடம் நிதி உதவி கோரியதை ஏனைய தமிழ் கட்சிகள் விமர்சிக்கின்றனவே? 

பதில் – இது அச்சத்தின் அடிப்படையிலான விமர்சனம். எமது மக்களுக்கான அரசியல் போராட்டத்துக்கு மக்களிடம் நிதி உதவி கேட்பதை விமர்சிப்பதற்கு என்ன இருக்கிறது? தேர்தலுக்காக நாம் எவரிடமும் பின் கதவுகளின் ஊடாக பணம் வாங்கி எமது மக்களின் உரிமைகளை அடைமானம் வைக்கவில்லை. அதனால் எம்மிடம் பணம் இல்லை. அதனால் வெளிப்டையாகவே எமது அரசியலை ஆதரிப்பவர்களிடமும் எம்மை நம்புபவர்களிடமும் உதவி செய்யுமாறு கூறினேனேன். இதில் கூச்சப்படவோ வெட்கப்படவோ எதுவும் இல்லை. "நக்கினார் நாவிழந்தார்” என்பது ஒரு பழமொழி. இதுதான் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நடந்தது. இந்த தவறை நான் செய்யப்போவதில்லை. அதனால் தான் எமது மக்களிடம் உதவி கோரினேன். இதன்மூலம் நாம் மக்களுக்கு பொறுப்பு கூற கடமைப்படுகிறோம். இது மிகவும் முக்கியமானது. எந்த ஒரு காரியத்தையும் செய்யும்போதும் எமது மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தும் தார்மீக பொறுப்பு இதனால் எம்மை வந்து சேர்கிறது. அதேபோல, எமது வெற்றியின் பங்காளிகளாக எமது மக்கள் இருப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் இதன்மூலம் அமைகிறது. இது எம்மை கேள்வி கேட்கும் அவர்களின் உரிமையை மேலும் வலுப்படுத்துகிறது. மக்கள் நலனை முன்னிறுத்தி அரசியல் செய்யும் கட்சிகள் பொதுமக்களிடம் நிதி உதவி கோருவது பல நாடுகளிலும் நடைபெறும் ஒரு நிகழ்வுதான். உதாரணமாக, கடந்த வருடம் பிரித்தானியாவில் நடைபெற்ற தேர்தலில் செலவுகளுக்காக ஜெரமி கோர்பின் தலைமையிலான தொழிற்கட்சி " சிலருக்காக அன்றி, பலருக்காக என்ற கோட்பாட்டை முன்னிறுத்தி சாதாரண மக்களை நாடிச் சென்றிருந்தது. ஆகவே, நான் முதலில் கூறியபடி, மக்களிடம் நிதி உதவி கோரியமை தொடர்பில் வெளிவரும் விமர்சனங்கள் எல்லாம் அச்சத்தின் வெளிப்பாடுகளே. 

கேள்வி – கூட்டமைப்பில் உள்வீட்டு மோதல் உச்சமடைந்துள்ளது என்பது எதனைக் காண்பிக்கின்றது? 

பதில் – குடும்ப அங்கத்தவர்கள் மத்தியில் ஏட்டா போட்டியும், சுயநலமும், தீய எண்ணங்களும், காழ்ப்புணர்வுகளும், கபடத்தனங்களும் ஏற்படும்போது தான் ஒரு கூட்டுக்குடும்பத்துக்குள் சண்டையும் குழப்பமும் ஏற்படுகின்றது. அதன்பின்னர், அந்த கூட்டுக்குடும்பம் நீடித்து நிலைத்திருப்பது கடினம். இன்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை அதுதான்.