Breaking News

England vs West Indies: இரண்டாவது டெஸ்ட் போட்டிய - இங்கிலாந்து அபார வெற்றி!

மேற்கிந்திய தீவுகல் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 469 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. டோமினிக் சிப்ளே 120 ரன்களை விளாசி, டெஸ்ட் அரங்கில் தனது இரண்டாவது சதத்தைப் பூர்த்தி செய்தார். 

பென் ஸ்டோக்ஸ் 176 ரன்களை குவித்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்த வீச்சாளர் ரோஸ்டன் சேஸ் 5 விக்கெட்களை வீழ்த்தினார். மான்செஸ்டர் மைதானத்தில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்திய முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ரோஸ்டன் சேஸ் நிகழ்த்தினார்.

அதன் பின்பு களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 242 எடுத்து நல்ல நிலையில் இருந்தபோது, இங்கிலாந்து அணியின் அதிரடி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்கள் சரியத் தொடங்கின. இதனால், மேற்கிந்தியத் தீவுகள் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 287 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 

தொடக்க ஆட்டக்காரர் பிராத்வெயிட் (75 ரன்கள்), சமர்க் ப்ரூக்ஸ் (68 ரன்கள்) மற்றும் ரோஸ்டன் சேஸ் (51 ரன்கள்) ஆகியோர் அரை சதம் விளாசி அணிக்கு கை கொடுத்தனர். முதல் இன்னிங்ஸ் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 182 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது. 



இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 312 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி 57 பந்துகளில் 78 ரன்கள் குவித்திருந்தார்.

312 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பயணித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 37 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இருப்பினும், பிளாக்வுட், சமர்க் ப்ரூக்ஸ் ஆகியோர் சிறப்பான முறையில் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். பிளாக்வுட் (55 ரன்கள்) அரைசதம் கடந்த நிலையில் ஆட்டமிழந்தார். 

தனியாளாகப் போராடிய சமர்க் ப்ரூக்ஸ் 62 ரன்களுக்கு அவுட் ஆனார். கேப்டன் ஹோல்டர் ஓரளவுக்குத் தாக்குப்பிடித்து 35 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 8 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

சிறப்பாகப் பந்து வீசிய ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்களை சாய்த்தார். கிரிஸ் ஓக்ஸ், பென் ஸ்டோக்ஸ், டோமினிக் பெஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.