15 நாள்களில் 97,000 குழந்தைகளுக்கு கொரோனா! - அமெரிக்காவில் வலுக்கும் கொரோனா
அமெரிக்காவில் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை, 50 லட்சத்துக்கும் அதிகம். அவர்களில், 1.6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர்.
இவர்களில், ஜூலை மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் மட்டும், சுமார் 97,000 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக, ஆய்வொன்றில் தகவல் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் குழந்தைகள் உடல் நலன் தொடர்பான பத்திரிகை நிறுவனமான American Academy of Pediatrics இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் இதுவரை 5 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவற்றில், 3,38,000 க்கும் அதிகமானவர்கள் குழந்தைகள் என சொல்லப்படுகிறது.
ஜூலை மாதம் மட்டும், அமெரிக்காவில் 25 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
குழந்தைகள் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை இவ்வளவு வேகமாகவும் விரைவாகவும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த வாரத்தில் ஒருநாள் ‘பாக்ஸ் அண்ட் பிரண்ட்ஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு தொலைபேசி வழியாக பேட்டி அளித்தார். அப்போது அவர், “நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டிய நேரம் இது. குழந்தைகளைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து எதிர்ப்புச்சக்தியை பெற்றிருக்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.
பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அவரிடம் `உங்கள் வீட்டுக் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவீர்களா?' என நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் `நான் பள்ளிகள் திறப்பதையே விரும்புகிறேன், என் மகனும் பேர பிள்ளைகளும் பள்ளிக்கு செல்வதையே நான் விரும்புகிறேன்' என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ``குழந்தைகளுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. எனவே அவர்கள் எளிதாக நோய் தாக்குதலுக்கு ஆளாக மாட்டார்கள். பெற்றோர்களுக்கும் வீட்டில் உள்ள முதியவர்களுக்கும் நோயை கொண்டு செல்ல மாட்டார்கள். மேலும் பள்ளிகளை திறப்பது குறித்து அந்தந்த மாகாண ஆளுநர்கள் முடிவு எடுத்துக் கொள்ளலாம்.
அமெரிக்கர்கள் நல்ல சுகாதாரத்துடன் இருக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவுங்கள் என பலர் கூறுவதை நான் கேட்டுள்ளேன், எனவே நீங்கள் அனைவரும் கைகளை சுத்தமாக கழுவுங்கள்" என்றார்.
ஏற்கெனவே விண்ணை முட்டும் அளவுக்கு கொரோனா பாதிப்பு சென்றுள்ள நிலையில் பள்ளிகளை திறந்தால் சின்னஞ்சிறிய குழந்தைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.








