ரஷ்யாவில் தயாரானது உலகின் முதல் ’கோவிட் - 19 தடுப்பூசி’ : ஆகஸ்ட் - 12 ம் வெளியீடு!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் சுமார் 2 கோடி பேரைத் தாக்கி, 7 லட்சம் பேரைக் கொன்று பேரழிவை ஏற்படுத்தியுள்ள சூழலில், உலகின் முதல் கோவிட் - 19 தடுப்பூசியைத் தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளது ரஷ்யா. கோவிட் - 19 தடுப்பூசியை ஆகஸ்ட் 12 ம் தேதி பதிவு செய்ய முழுவீச்சில் தயாராகிவருகிறது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியைத் தயாரித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
ஒவ்வொரு நாடுகளும் தத்தம் தடுப்பூசிகளைப் பரிசோதித்து வரும் நிலையில் ரஷ்யாவைச் சேர்ந்த கமலேயா நிறுவனம் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்தி வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதை உலகின் முதல் கோவிட் - 19 தடுப்பூசியாகப் பதிவுசெய்யும் தீவிர நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சர் முரஸ்கோ, “உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆகஸ்ட் 12 - ம் தேதி பதிவு செய்யப்படவுள்ளது. அக்டோபர் மாதத்திலிருந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இப்போது தடுப்பூசியின் மூன்றாம் கட்டமான, இறுதிக்கட்ட பரிசோதனை நடந்துகொண்டிருக்கிறது. இதுவரை எந்தபிரச்னையும் ஏற்படவில்லை. தடுப்பு மருந்து பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதை உணர்ந்துள்ளோம்” என்று அறிவித்துள்ளார்.








