Breaking News

வாழைநாரில் முகக்கவசம் - பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றீடு!


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் காட்டி வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் முகக்கவசம், PPE கிட்ஸ் உள்ளிட்டவற்றை அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதில் பிளாஸ்டிக் பொருட்களால் செய்யப்படும் முகக்கவசங்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. 

எனவே இதற்கு மாற்றாக பிலிப்பைன்ஸ் நாட்டின் நார் ஏஜென்சி நிறுவனம் ஒன்று புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதாவது வாழை மரத்தின் நாரிலிருந்து முகக்கவசங்கள் செய்து அசத்தியுள்ளனர். 

இதுபற்றி அந்நிறுவனத்தின் தலைவர் கென்னடி கோஸ்டல்ஸ் கூறுகையில், தற்போதைய நோய்த் தொற்று காலத்தில் அனைவரும் சிந்தடிக் ஃபைபரால் செய்யப்பட்ட முகக்கவசங்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இது தூக்கி எறியப்படும் போது மண்ணோடு மண்ணாக மக்குவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்கிறது. அதற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வாழை நாரில் இருந்து முகக்கவசங்கள் செய்துள்ளோம் என்றார். 

உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற குரல் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. கொரோனா தொற்றால் முகக்கவசங்களின் தேவை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் வகையிலான முகக்கவசங்களின் விற்பனை நடப்பாண்டில் சர்வதேச அளவில் 200 மடங்கிற்கு மேலாக உயரும் என்று ஐ.நா சபையின் வணிக அறிக்கை தெரிவித்துள்ளது.  


இதுதொடர்பான ஆய்வில் சுற்றுச்சூழலுக்கு எந்தவித தீங்கும் ஏற்படுத்தாது. நீரை அதிகளவில் எதிர்க்கும் தன்மை கொண்டது என தெரியவந்துள்ளது. இந்த ‘அபாகா’ மூலம் தேநீர்ப் பைகள், ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றையும் தயாரித்து வருகின்றனர். இந்தப் பொருள் இரண்டே மாதங்களில் மக்கிவிடும் தன்மை கொண்டது. உலகில் நார்ப்பொருள் உற்பத்தியில் பிலிப்பைன்ஸ் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. கடந்த 2017ஆம் ஆண்டு 85 சதவீத நார்ப்பொருட்களை உற்பத்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.