பாப் பாடகரான கணவனை கொன்று “உப்பு கண்டம்“ போட்டு ஃப்ரிட்ஜிக்குள் வைத்த மனைவி!

கடந்த 1990 ஆம் ஆண்டு, உக்ரேனிய நகரமான நிஜினில் பிறந்த அலெக்ஸ்சாண்டர் யுஷ்கோ, “ராப்பர் இசை” மூலம் அனைவராலும் அறியப்பட்டு, ரஷ்யாவில் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்களின் அன்பை பெற்றுப் புகழ் பெற்றுத் திகழ்ந்தார்.
இதனிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 25 வயதான மெரினா குகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார்.
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அந்நாட்டில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையிலும், அரசின் விதிமுறைகளைப் பின்பற்றாமல், அலெக்சாண்டர் யுஷ்கோ மது மற்றும் போதைப் பொருள் பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
மதுவுக்கு அடிமையானதாகக் கூறப்படும் பாப் இசை பாடகர் அலெக்சாண்டர் யுஷ்கோ, தன் மனைவியிடம் அடிக்கடி பிரச்சனை செய்து வந்ததாகவும் தெரிகிறது.
இதன் காரணமாக, அலெக்சாண்டர் யுஷ்கோ - மெரினா குகா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, கணவன் - மனைவி இடையே தொடர்ந்து சண்டை வந்ததால், கணவனை கொலை செய்ய வேண்டும் என்று, மெரினா குகா முடிவு செய்ததாக தெரிகிறது.
அதன்படி, எப்போதும் போலவே, அலெக்சாண்டர் யுஷ்கோ - மெரினா குகா இடையே மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது. இதனால், கடும் கோபமடைந்த மனைவி மெரினா குகா, மது போதையில் இருந்த கணவன் அலெக்சாண்டர் யுஷ்கோவை, வீட்டில் இருந்த மிகவும் கூர்மையான கத்தியால், தனது 2 வயது மகன் கண் முன்னாடியே குத்திக் கொலை செய்துள்ளார்.
இதில், ரத்த வெள்ளத்தில் சரித்த அலெக்சாண்டர் யுஷ்கோ, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, இந்த கொலை குறித்து வெளியே யாருக்கும் தெரியக்கூடாது என்று முடிவு செய்த அவர், கொலை செய்யப்பட்ட தன் கணவனின் உடலை, கசாப்புக் கடையில் கறி வெட்டுவது போல், சிறு சிறு துண்டுகளாக வெட்டி உள்ளார். இதனால், அவர் வீடு முழுவதும் ரத்த கறை பரவிக் கிடந்துள்ளது. அந்த ரத்த கறையை, சோப்பு நீர் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்திக் கழுவி, வீட்டைச் சுத்தம் செய்துள்ளார்.
அதன் பிறகு, சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட கணவனின் உடல் பாகங்களை, சுத்தமாகக் கழுவி உள்ளார். அதன் தொடர்ச்சியாக, அந்த உடல் துண்டுகளை உப்பு தடவி, பிளாஸ்டிக் பைகளில் போட்டு, வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜில் வைத்து மூடி உள்ளார்.
அதனைத் தொடர்ந்து, எதுவும் நடக்காதது போல், எப்போதும் போல், மனைவி மெரினா குகா தனது அன்றாட பணிகளைச் செய்து வந்துள்ளார்.
எனினும், பாடகர் அலெக்ஸ்சாண்டரின் நண்பர்கள், அவரை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் செல்போன் எண் பயன்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது. வெகு நாட்களாக அவர் செல்போன் பயன்பாட்டில் இல்லாத காரணத்தால் சந்தேகம் அடைந்த அவருடைய நண்பர்கள், ஒரு கட்டத்திற்கு மேல் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அந்நாட்டு போலீசார், மனைவி மெரினா குகாவிடம் விசாரித்துள்ளனர். அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனால், போலீசாருக்கு இன்னும் சந்தேகம் வலுத்துள்ளது. இதனால், விசாரணையை போலீசார் இன்னும் தீவிரப்படுத்தினர். தீவிர விசாரணைக்குப் பிறகு, கணவரைக் கொன்று உடல் பாகங்களை உப்பு கண்டம் போட்டதை அவர் ஒப்புக்கொண்டார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், ப்ரிட்ஜில் வைக்கப்பட்டு இருந்த அலெக்ஸ்சாண்டரின் உடல் உறுபுகளை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன், கணவனை கொலை செய்த மெரினா குகாவை கைது செய்த போலீசார், அவரை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம், அந்நாட்டில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.