விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட வேண்டும் - நளின் பண்டார
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய கன்னி உரை குறித்த சர்ச்சைகள், இன்றைய அமர்விலும் நீடித்தது. எனினும், எதிர்ப்புக்களை புறந்தள்ளிய சபாநாயகர், விக்னேஸ்வரனின் உரை ஹன்சார்ட்டில் பதிவாகும் என அறிவித்தார்.
க.வி.விக்னேஸ்வரன் தனது கன்னி உரையில், தமிழ் மொழி உலகின் மிகப் பழமையான மொழி என்றும் இலங்கையின் முதல் பழங்குடியினரின் மொழி என்றும் கூறினார்.
வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்று கூறி, தமிழ் உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
விக்னேஸ்வரனின் உரைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கர எதிர்ப்பு தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது, பாராளுமன்ற உறுப்பினர் நாணயக்கர, எம்.பி. விக்னேஸ்வரனின் அறிக்கையை ஹன்சார்ட்டில் சேர்க்க அனுமதிக்க சபாநாயகர் எடுத்த முடிவு குறித்து கேள்வி எழுப்பினார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சபாநாயகர் அபேவர்தன, அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கருத்துரிமை உள்ளது என்றார்.
இதேவேளை, விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்புரிமையை பறிக்க வேண்டுமென நளின் பண்டார போர்க்கொடி தூக்கினார். பிரிவினைக்கு எதிராக 6வது திருத்தத்தின் கீழ் சத்தியப்பிரமாணம் செய்து விட்டே எம்.பி ஆகிறார்கள். ஆனால், சத்தியப்பிரமாணம் செய்த உடனேயே அதை விக்னேஸ்வரன் மீறியுள்ளார். அவரது பதவியை பறிக்க வேண்டுமென்றார்.
இதன்போதும், விக்னேஸ்வரனின் கருத்துரிமையை சபாநாயகர் சுட்டிக்காட்டினார்