நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பு - பொதுத்தேர்தல் 4 வாரத்திற்கு ஒத்திவைப்பு!
நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பு காரணமாக நடைபெற இருந்த பொதுத்தேர்தல் நான்கு வார காலங்கள் ஒத்தி வைக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலைத் தடுக்க போராடி வரும் சூழலில் நியூசிலாந்து நாடானது மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாக உலக சுகாதார மையம் பாராட்டு தெரிவித்திருந்தது.
தொடர்ச்சியாக 102 நாட்கள் கரோனா பரவல் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த வாரம் முக்கிய நகரமாக அறியப்படும் ஆக்லாந்தில் திடீரென கரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாக ஆரம்பித்தன. இதன் காரணமாக ஆக்லாந்தில் 12 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மக்கள் வீடுகளில் இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில் செப்டம்பர் 19 அன்று நடைபெறுவதாக இருந்த நியூசிலாந்து நாட்டின் பொதுத்தேர்தல் நான்கு வார காலங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் ஆர்டெர்ன் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நியூசிலாந்தில் அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பின் மத்தியில் தேர்தலை நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்வது மிகவும் கடினம் என்று ஜசிந்தா ஆர்டெர்ன் குறிப்பிட்டுள்ளார். நியூசிலாந்தில் தற்போது 66 பேர் கரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.








