தோனியுடன் வாக்குவாதம்! சி.எஸ்.கேவிலிருந்து வெளியேறிவிட்டாரா ரெய்னா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா ஐ.பில்.எல் போட்டிகளில் விளையாட ஐக்கிய அமீரகத்துக்குச் சென்ற நிலையில் திடீரென்று நாடு திரும்பினார். அவர் ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகியதற்குக் காரணம் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மாமா அசோக்குமார் என்பவரின் மரணம் தான் என்று தகவல் வெளியானது.
ஆனால், அசோக்குமார் 19 - ம் தேதி இறந்த நிலையில் 21 - ம் தேதி சுரேஷ் ரெய்னா சி.எஸ்.கே அணியுடன் துபாய் சென்றடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உறவினர் இறந்து 10 நாள்கள் கழித்து நாடு திரும்பினார். இதை அடிப்படையாக வைத்து, சுரேஷ் ரெய்னா போட்டித் தொடரிலிருந்து வெளியேறியதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கும் என்ற தகவல் வெளியானது.
இந்த நிலையில் தான் சி.எஸ்.கே அணி நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர் தோனியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் கருத்து மோதல் காரணமாகவே சுரேஷ் ரெய்னா சி.எஸ்.கே அணியிலிருந்து விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல் அணியில் கலந்துகொள்ளும் மற்ற அணிகள் அனைத்தும் நேரடியாக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் சென்னையில் ஒருவாரம் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் பயிற்சி முடிந்த பிறகே சி.எஸ்.கே அணி 21 - ம் தேதி துபாய் சென்றது. அங்கு ஒரு வார காலம் வீரர்கள் தனிமைப்படுத்தப் பட்டிருந்தனர். அதன்பிறகு 28 - ம் தேதி கொரோனா நோய்ப் பரிசோதனை செய்த போது 13 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த ரெய்னா, “சென்னையில் ஒரு வாரம் தங்கி பயிற்சி மேற்கொண்டது தான் கொரோனா பிரச்னைக்குக் காரணம். சென்னையில் ஏன் கேம்ப் அமைத்தீர்கள் ” என்று அணிநிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு காசி விஸ்வநாதன், “இது தோனியின் முடிவு” என்று பதில் கூறியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் வீரர்கள் தனிமைப்படுத்துதலைச் சரியாக மேற்கொள்ளவில்லை என்ற கோபமும் ரெய்னாவுக்கு இருந்துள்ளது.
இதையடுத்து தோனியிடம் சென்ற சுரேஷ் ரெய்னா வீரர்கள் செயல்பாடு குறித்தும், சென்னை கேம்ப் குறித்தும் கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த விவகாரத்தில் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தின் முடிவில் தான் சுரேஷ் ரெய்னா போட்டித் தொடரிலிருந்து விலகி இந்தியாவுக்குத் திரும்பிவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 15 - ம் தேதி தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தபோது அவருடன் சேர்ந்து ஓய்வை அறிவித்தவர் சுரேஷ் ரெய்னா. இந்த நிலையில் தோனியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் சுரேஷ் ரெய்னா போட்டித் தொடரிலிருந்து விலகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இனி சுரேஷ் ரெய்னா சி.எஸ்.கே அணியுடன் விளையாடுவதும் சந்தேகம் தான் என்கிறார்கள்!